Saturday, July 1, 2017

ஜிஎஸ்டி அவசியமாஎன் உறவினர்களில் சேல்ஸ்டாக்ஸில் வேலைசெய்த ஒருவரையும், பேங்கில் வேலையில் இருந்த ஒருவரையும் சுற்றி மக்கள் எப்போதும் இருக்கும். அவர்களின் வீடுகளில் காலையில் சிலரும் மாலையில் சிலரும் என்று யாராவது வந்து சந்தேகங்களை கேட்டுச் கொண்டேயிருப்பார்கள். இந்த இரண்டுதான் முக்கியமாக இருக்கும்: எப்படி வரியை கட்டாமல் இருப்பது எப்படி லோனை எளிதாக வாங்குவது.
ஒரு அரசாங்கத்திற்கு வரி என்பது மிக முக்கியமானது. ஆங்கிலேயர்கள் கொழுத்த வரியால்தான் தன் நாட்டின் வளத்தை பெருக்கிக் கொண்டார்கள். அதேபோல மக்களுக்கு வரி குறைவாக இருப்பதும் மிக அவசியம். முன்பு காலங்களில் வரி குறைவாக வாங்கிய அரசனை புலவர்கள் போற்றி பாடியிருக்கிறார்கள்.

வாங்கும் பொருளுக்கு விற்பனை வரி, சேவை வரி, வாட் வரி என்று பல்வேறு வரிகளை செலுத்தி வருகிறோம். எல்லாவற்றையும் நீக்கி ஒரு வரியாக செலுத்த சொல்லுகிறது அரசு. இன்னும் கடைகளில் வாட், சேவை, விற்பனை, ஆகிய வரிகளோடு ஜிஎஸ்டி வரியையும் போடுகிறார்கள். ஜிஎஸ்டியை மட்டுமே செலுத்தினால் போதும் என்கிற போதும் கடைக்காரர்கள் விவரம் தெரியாமலா அல்லது வேண்டுமென்றேவா தெரியவில்லை. எல்லாவற்றையும் போடுகிறார்கள். நான் இன்னும் பொருட்களை வாங்கவில்லை. அப்படி வாங்கப்பட்டால் அது முற்றிலும் தவறு.

ஜிஎஸ்டி திடீரென தோன்றி வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். முப்பது ஆண்டுகளாக அதற்கு அடித்தளம் இடப்பட்டு இன்றுதான் நமக்கு வந்திருக்கிறது. காங்கிரஸ், இடதுசாரிகளும் இதற்கு முயற்சித்திருக்கிறார்கள்.
ஜிஎஸ்டியால் எல்லா பொருட்களும் விலை குறையும், சில பொருட்களின் விலை ஏறவும் செய்யும். ஜிஎஸ்டியால் மாயாஜாலங்கள் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் சில நல்ல விளைவுகள் இருக்கும் என தெரிகிறது.

இதை பிஜேபி முன்னேடுப்பதால் தமிழகத்தில் சந்தேக கண்ணோடு பார்ப்பதாக தோன்றுகிறது. என் வடஇந்திய நண்பர்களுடன் பேசியபோது அவர்களிடம் இந்த வரி விதிப்புகள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தை புரிந்துக் கொள்ளமுடிந்தது. உண்மையில் அவர்கள் இதை பெரிதும் வரவேற்பது தெரிகிறது. வடஇந்தியாவில் பல இடங்கள் விற்பனை மையங்களாக உள்ளன. கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் விலை குறைவதால் அதன் மூலம் அவர்களுக்கு கணிசமான லாபம் இருப்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
மும்பை, சூரத், மால்டா போன்ற நகரங்கள் போன்று தமிழகத்தில் திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற நகரங்களின் வளர்ச்சி கணிசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பொதுவாக தமிழகத்தில் வரியில்லாமல் ஒரு தொழிலை தொடங்க நினைக்கிறார்கள். இருபது லட்சத்திற்கு கீழ் உள்ள வியாபாரங்களுக்கு ஜிஎஸ்டி தேவையில்லை. ஆனால் பெரிய முதலாளிகள் சற்று சிரமப்படுவார்கள். முன்பு வரியில்லாமல் காலத்தை ஓட்டிவிட்டவர்கள், இப்போது அப்படி தப்பிக்க முடியாது. இருபது லட்சத்திற்கு மேற்பட்டடும் வரி கட்டாமல் இருந்தவர்கள் அழுத்தான் செய்வார்கள், கைகாசு போகிறது இல்லையா?

என் விற்பனைவரி அலுவலக நண்பர் இவ்விசயத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார். பல ஓட்டல் நிறுவனங்கள் வரி கட்டுவதேயில்லை. தவறான தகவல்களோடு வரியை செலுத்துவார்கள். சினிமா அரங்குகள், நகைக்கடைகள், பெரிய மால்கள் எல்லாம் வரி சரியாக கட்டுவதுதில்லை. முன்பு 1% மட்டுமே சரியாக கட்டிவந்தவர்களின் எண்ணிக்கை உயரும்.
கொஞ்ச நாள் முன்பு நகைக்கடையில் இரண்டு லட்சத்திற்கு நகை வாங்கியபின் பில் வேணுமா சார்... வாட் அதிகமா வரும் பரவாயில்லையா என்றார். பில் கண்டிப்பாக வேண்டும் என்று அழுத்தமாக பதிலளித்தேன். அரசுக்கு செல்லும் பணத்தை தடுப்பதோடு, தனக்கும் கொள்முதல் வரியிலிருந்து தப்பிக்க நினைப்பதை எப்படி சரி என்று சொல்லமுடியும்.

ஒரே இடத்திலிருந்து செல்லாமல் பல இடங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக செல்வதால் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். அதனால் மீண்டும் பொருட்களின் விலைகள் குறையக் கூடும். இப்படி தவறுகள் நடக்கலாம், இப்படி சங்கடங்கள் அனுபவிக்கலாம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியாகும். 90களில் நரசிம்மராவ் செய்தபோது எழுந்த பரபரப்பு தான் இவையும். அதேவேளையில் சில உண்மையில்லாமலும் இல்லை. நல்ல முன்னேற்றத்திற்கான ஒரு முயற்சி என்பதனால் பாராட்டலாம்.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எதைச் செய்தாலும் ஆளும் அரசினைக் குறை கூறுவது என்பது காலந்தொட்டு இருந்து வருவதொன்றாகும். காங்கிரசோ வேறு கட்சியோ இருந்தால்கூட ஜிஎஸ்டி-ஐக் கொண்டு வந்திருக்கும். 1990-களில் தனியார்மயமாக்கல் என்பதானது வந்தபோது இந்த கூக்குரல் இருந்தது. ஆனால் தடுக்க முடிந்ததா? சில நடைமுறைகள் அந்தந்த காலத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்ற சூழலில் அரசுகள் அமைகின்றன. அதனை வேறு வழியின்றி எதிர்நோக்கும் நிலையில் நாமும் உள்ளோம்.