Wednesday, July 5, 2017

பிக் பாஸ்: அடைக்கப்படும் மனது



புரூஸ் லீ முழுமையாக நடித்த மூன்று முழுமையான படங்களில் ஒரு நல்ல படமாக பிக் பாஸ் என்கிற படத்தைச் சொல்லலாம். ஹீரோயிசம் இல்லாமல் சாதாரண மனிதராக தோன்றிய படம். அற்புதமான சண்டைகாட்சிகளும் உண்டு. நண்பர்களைத் தேடி ஐஸ்பேக்டரிக்கு வரும் லீ அங்கு நடக்கும் ஒருவரை ஒருவர் தாக்கும் தொடர் சண்டைகளைக் கண்டு ஒதுங்கி இருந்துவிட்டு ஒரு கட்டத்தில் பொருக்கமுடியாமல் இறங்கி எல்லோரையும் தாக்குவார். வெற்றியும் பெறுவார். ஆனால் கட்டுரை அதைப் பற்றியதல்ல. இப்போது விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் என்னும் ஒரு வீட்டில் வாழுகின்ற பிரபல்யங்களின் நிகழ்ச்சிப் பற்றியது

இந்த நிகழ்ச்சி இந்தி, மலையாளம், கன்னடம், என்று முக்கிய மொழிகளில் உள்ள டிவி ஷோக்களாக நடந்திருக்கிறது. இந்தியில் பல பார்ட்டுகளாக நடந்திருக்கிறது. ஆனால் இந்த மாதிரியான நிகழ்ச்சி 100% உண்மையானது அல்ல. பல முன்பே பேசிவைத்து எடுக்கப்பட்டவைகள். எப்படி ஒரு டிவி நாடகத்தை மக்களின் டிஆர்பி ரேட்டை பொருத்து கதையை மாற்றிக் கொள்கிறார்களோ அதுபோல நடக்கும் நிகழ்ச்சியில் அவ்வப்போது சில ஏற்றங்களைக் கொண்டு மாற்றி அமைக்கிறார்கள்.


ஏன் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்கிறது. முக்கிய வேலைகள் எத்தனையோ நம் வாழ்வில் இருக்கையில் வீட்டில் அடைக்கப்பட்டிருக்கும் 14 நபர்களை அவர்கள் பல் விளக்குவதிலிருந்து முகப்பூச்சி அணிவதுவரையும், சாப்பிடுவதிலிருந்து தூங்குவதுவரையும் நடக்கும் முக்கியமற்ற அவர்களது அன்றாட செய்கைகளை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்கி நாம் ஏன் அவர்களை பார்க்க செலவழிக்க வேண்டும்.

மக்களைக் கேட்டால் சாப்பிட ஒக்காரும்போது அதை போடுவோம், அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்கும் சாப்பிட்டு முடிச்சு எடுத்துவைத்து, படுக்கையை தட்டி தூங்கப்போகும்போது முடிந்திருக்கும், வேலை மெனக்கெட்டு பார்ப்பதில்லை என்பார்கள். உண்மையில் இது ஒரு சால்ஜாப்புதான். அந்த நேரத்தில் பாடல்கள், செய்திகள் போனவாரம் ஆக்கிரமித்திருந்தன.

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு சமயம் சைக்கிளில் நானும் என் நண்பனும் சென்றுக் கொண்டிருந்தோம். ஒரு முக்கிய ஹோட்டலின் வாசலில் சில கிராமத்து ஆட்கள் கேட்டைப் பிடித்தும் சுவரை பிடித்தும் நின்று அந்த பக்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் சைக்கிளை நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தோம். ஒன்றுமே இல்லை. என்னங்க என்று கேட்டப்போது, நடிகர் சுமன் வந்திருக்காருங்க என்றார்கள். காலையிலிருந்து நிற்பதாக கூறினார்கள், ஒருமுறை தூரத்தில் உள்ள டைபாதையில் அந்தப் பக்கமாக சென்றபோது இங்கிருந்தவர்கள் குரலெழுப்பி கையசைதார்களாம். அவரும் திகைத்து திரும்பி பார்த்து கையசைத்துவிட்டு சென்றுவிட்டார் என்று கூறினார். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது ஒரு பிரபல்ய நடிகர் நம்மை கண்களால் பார்த்தும் கையசைப்பதும் பெரிய விஷயமாகத்தான் தோன்றியது. அவர் மீண்டும் வரலாம் என்று நினைப்பில் இரண்டு நிமிடம் இதென்ன வேலவெட்டியில்லா வேலை என்று தோன்றிவிட்டது. அங்கிருந்த 10 பதினைந்து பேர் காலையிலிருந்து நிற்கிறார்கள் என்றார்கள்.

உண்மையில் இது ஒரு அசட்டுதனம் தான். திரையில் பார்த்த ஒரு நபர் நேரில் எப்படி நடந்துக் கொள்கிறார், எப்படி மற்றவர்களிடம் பேசுகிறார் என்பதை பார்க்க கொள்ளும் ஆவல் ஒருவித வக்கிர மனநிலைதான். அவரை பார்த்து களிப்பு கொண்ட மறுநிமிடம் அவரைப் பற்றிய அசிங்கங்களை தரந்தாழ்ந்தவைகள் கூடிப் பேசி மகிழ்வார்கள். ஒவ்வொரு பிரபல்யத்தை எவ்வளவு உயர்வாக பேசினாலும் அதே அளவும் கிழ்மையுடன் பேசுவது ஒரு நிறைவை அளித்துவிடுகிறது. அவர்கள் வாழ்வில் சறுக்கும்போது பெரிய கொண்டாட்டமாக பேசி மகிழ்கிறார்கள்.

பொதுவாகவே மக்களும் மற்றவர்களின் அந்தரங்கங்களை பார்ப்பதில்/கேட்பதில் ஆசை நமக்கு உண்டு. சிசிடிவி ஹிட்டன் கேமராவில் நடப்பவைகளை விரும்பி பார்க்கிறோம். ஒரு பெண் குளிப்பதை ஒளிந்து ரசிப்பதற்கு நவீன யுகத்தில் கேமராவின் துணை தேவையாக இருக்கிறது. அதுவும் நடிகைகளின் குளியல் காட்சிகளை பார்ப்பது, குற்றமாக இருந்தாலும், எடுப்பதால் தண்டனை உறுதி என்று தெரிந்தாலும் மறைத்துவைத்து நாம் பார்க்கும்போது ஒரு மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுப்பதை உணரமுடியும்.

பிறர் யாருமற்ற சமயத்தில், மற்றவர்கள் கவனிக்காத சமயத்தில் எப்படி செயல்படுகிறார்கள், எப்படி அந்தரங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் அவர்களின் மைத்துனம் எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவல் நம்மை மேலானவர்களாக நினைக்கும் நமக்கே பிடித்திருக்கிறது. பிறர் திருடுவதை, வேடி க்கையாக ஏற்படும் அசம்பாவிதங்கள், ஆடை விலகுவது அறியாதிருத்தல், அந்தரங்க உறுப்புகள் வெளியே தெரிவது என்று எல்லா வகையிலும் மனிதர்கள் தங்களின் வெளிப்பாட்டை அவர் அறியாமல் பிறராகிய நாம் அறிவது விவரிக்க முடியாத ஆனந்தத்தைதான் அளிக்கிறது. குறிப்பாக சொல்வது என்றால் அந்த அசிங்கம் நமக்கு பிடித்திருக்கிறது.

பிக்பாஸ் என்பது பில்டர் வைத்த சிகரெட். சற்று மேம்படுத்தப்பட்ட அசிங்கம் அவ்வளவுதான். அதில் அந்தரங்கங்களை வெளிப்படுத்துவதை நாம் பார்க்கவில்லை ஆனால் அது எப்படியோ நிகழ்ந்திருக்கிறது என்கிற துடைப்புடன் பார்க்கப்படுகிறது. அதில் பிரபல்யங்கள் இல்லாமல் சாதாரண மனிதர்கள் இருந்தால் இந்த அளவிற்கு ரசித்து பார்க்கப்பட்டிருக்காது.

அடைக்கபட்டவர்களின் மனது எப்படி வக்கிரமாக செயல்படுகிறது பார் என்கிற நினைப்பில் என்னைவிட இந்த மனிதர்கள் வக்கிரமானவர்கள். நான் அவர்களைவிட தூய்மையானவன் என்று சொல்லிக் கொள்ள ஒரு அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சி நம் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கிறது. அதிலென்ன சந்தேகம். நாம் தூய்மையானவர்கள்.

No comments: