Saturday, July 1, 2017

குழந்தையாய் இருத்தல்



கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்பார்கள். சில கோபப்படும் நபர்களை காணும்போது பரிதாபமாக, சங்கடமாக இருக்கும். அதிலும் சிலர் இயல்பாகவே கோபத்திற்கு பழக்கப்பட்டவர்கள் போல் தெரிவார்கள். வீட்டில், அலுவலகத்தில், வெளியே பொதுஇடத்தில் சின்ன ஏமாற்றங்கள்கூட மனிதர்களை வெறுபடைய வைத்து கோபம் கொள்ளவைக்கின்றன. சாதாரண உரையாடல்கள் முதல் சமூக அவலங்களை எதிர்கொள்ளும் வரை எல்லாவற்றிற்கும் கோபப்பட வேண்டியிருக்கிறது.

அதிகம் கோபம் வரும் நபர்களிடம் குழந்தை மனதோடு இருந்துவிட்டால் பிரச்சனைகளை எளிதாக தாண்டிவிடலாம், கோபத்தை விட்டுவிடலாம் என அறிவுறுத்துவதை பொதுவாக காணமுடியும். ஆன்மீகம், மருத்துவம் இலக்கியம் போன்ற துறைகள் மனிதன் அவன் மனதை ஒரு குழந்தையின் மனதுபோல வைத்துக் கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்துகிறது. கோபத்தை கட்டுப்படுத்த அதுதான் சிறந்த வழி என்கிறது. கோபப்பட்டு வெறுப்பில் நிற்கும் சமயங்களில் நானும் நினைப்பதுண்டு ஏன் குழந்தையாக இருந்திருக்கலாமே என்று.


நிஜத்தில் ஒருவர் குழந்தைபோல் செயல்பட்டால் என்ன சொல்லுவோம். மனதளவில் அவர் வளரவில்லை, அவர் வெற்றிபெறவில்லை, அவர் வாழக்கையை புரிந்துக் கொள்ளவில்லை என்று தான் பொருள் கொள்ளப் படுகிறது. குழந்தையின் குணம் மன்னிக்கும் மனம் மட்டுமல்ல. புத்திசாலிதனமும் அதற்கு குறைச்சல் என்கிற அர்த்தமும் இருக்கிறது. குழந்தை மனதோடு நடந்துக் கொள்ளும் அதிகாரியை கீழிருப்பவர்கள் பொருட்படுத்த போவதில்லை. ஆசிரியரை மாணவர்கள் மதிக்க போவதில்லை. மனைவிகூட கணவனை உதாசீனபடுத்தலாம்.

குழந்தை ஒரு செய்கையை, செயலை அப்போதே மறந்துவிடுகிறது. அதன் நினைவுகளின் குறைவை அறியாமையின் அழகாக மாற்றிவிடுகிறது. பெரியவர்களுக்கு அது வாய்ப்பதில்லை. நாம் அடுத்த நிமிடமே மறந்தால் இன்னும் ஏமாற்றப்படுவோம், உதாசீனப்படுத்த்படுவோம் என்றுதான் நினைக்கிறேன்.

வளர்ந்தபின் மகிழ்ச்சி, துக்கம், ஆற்றாமை, துரோகம் என்று நினைவுகளின் அடுக்குகளாக ஏற்றிக் கொண்டே செல்கிறோம். ஒன்றின் தொடர்ச்சி மற்றொன்றின் தலை இருக்கும். அதன் பல வால்களின் ஒன்றை பிடித்துக் கொண்டும் தொங்கும். ஒரு கெட்ட அனுபவம் மேலெழுந்துவர சமயத்தை எதிர்நோக்கி காத்திருக்கும். குழந்தையாக இருக்க வேண்டும் என்றால் நம் மீது இழைக்கப்பட்ட வினைகளை மறக்க வேண்டும். செய்ய நினைத்திருக்கும் அதற்கான எதிர்வினைகளை நாம் கைவிட்டாக வேண்டும்.

அது சாத்தியம் தானா? ஒருவர் நம்மைப் பற்றி கூறும் அவதூறுகளை எப்படி மறப்பது. நம்மை துறத்தும் மற்றவர்களின் கேலிப் பேச்சுகளை எப்படி விட்டு விலகுவது. ஒரு முறை பேருந்தில் பயணம் செய்தபோது நான்கு சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவரை சற்று தள்ளி அமர அன்புடன் கேட்டுக்கொண்டேன். உடனே கெட்டவார்த்தைகளை பயன்படுத்தி என்னை திட்ட ஆரம்பித்தார். உண்மையில் முனையில் அமர்ந்திருப்பவர் சிரமப்படுகிறார் என்பதற்காக அவரின் சார்பாக கேட்டது. எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால் அந்த உதாசீனம் என்னை துரத்திக் கொண்டிருந்தது. கோபமும் ஆற்றமையும் மண்டையில் ஏறி துன்புறுத்தியது. வேறு ஒரு சமயம் ரெயில் ஏறியதும் கோபப்பட்ட ஒரு பெண்ணிடன் என் இயல்பிற்கு எதிராக திரும்பி சகட்டுமேனிக்கு சத்தமிட்டும் அவரை காயப்படுத்தினேன். மனதில் இதுவரை இருந்த கோபத்தின் மிச்சம்தான் அது பிறகு ஒருநாள் புரிந்தது..

அந்த வெற்றி பெரியதாகப்படவில்லை. மனிதர்களை எப்படி எதிர் கொள்வது என்கிற பிரச்சனைதான் தலையாய பிரச்சனையாக ஒவ்வொருவருக்கும் இருப்பதாக நினைக்கிறேன். நான் என்ன சொன்னால் இவன் கேட்பான். யாரிடம் சென்று என் தேவையை சொன்னால் காரியமாகும் என்று ஒவ்வொரு சமயமும் யோசித்தே மனிதர்களின் வாழ்க்கை கழிந்துவிடுகிறது போலும். ஆகவேதான் நாம் ஒரு விஷயம் நடக்காத போதெல்லாம் கோபம் கொள்கிறோம். அல்லது எதிராக நடந்துவிட்டால் கோபம் கொள்கிறோம். கோபம் நம்மை தின்பது போல வேறு எதுவும் இல்லை. கோபத்தால் ஒரு காரியம் ஆகும்போது நமக்கு அதில் ஆர்வம் வந்துவிடுகிறது, எப்படி கோபத்தை வெளிப்படுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது மனம்.

என் நண்பர் ஒருவர் 'எப்படி கோபத்தை கட்டுப்படுத்துவது' என்கிற வகை புத்தகங்கள் நிறைய படித்துக் கொண்டிருப்பார். அவர் அப்படி ஒன்று கோபக்காரர் அல்ல. ஆனால் அவருக்கு நிறைய ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளினால் எதிர்பார்புகளும் உண்டு. அதுவும் நிறைவேறாத எதிர்ப்பார்புகள்.

ஒரு குழந்தைக்கு இந்த எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை. தினசரி வாழ்வில் எதிர்ப்பார்ப்பு இல்லாதிருத்தல் குழந்தைமை என்று சொல்லலாமா?.

3 comments:

ஹேமா (HVL) said...

எதிர்பார்ப்பின்றி இருப்பதுடன், எந்த சூழலையும் தனக்கேற்றார் போல மாற்றிக் கொள்ளும் தன்மையும், அப்படி முடியாவிட்டால் சூழலுக்கேற்ப மாறிக் கொள்ளும் தன்மையும் சேர்ந்துகொண்டால் குழந்தையாகி விடலாம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எதிர்பார்ப்பு இல்லா நிலையில் மட்டுமே குழந்தைமை என்பதுடன் கள்ளம்கபடமின்றி பழகுதல், எதேச்சையாய் இருத்தல் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

கே.ஜே.அசோக்குமார் said...

நன்றி தோழர்களே