Friday, June 30, 2017

தஞ்சைக் கூடல் ஜூன்மாத கூட்டம் (24/6/17)



இந்த மாதக் கூட்டம் எப்போது போன்ற ஒன்றாக அமையவில்லை. எங்களின் புரிதல்களை ஒரு படி மேலாக ஆக்க உதவியிருக்கிறது. சிறுகதைகள் மட்டுமே என்பதை தாண்டி கூட்டத்தை எப்படி நடத்துவது என்கிற திட்டம் எதுவுமில்லாமல் இருந்தோம். இனி வரும் நாட்களில் அப்படி இருக்க முடியாது.

எஸ்.செந்தில்குமார் வருவதாக இருந்தார். கடைசி நேரத்தில் வேறு ஒரு கூட்டதிற்கு செல்லவேண்டிய நிர்பந்தம் அவருக்கு, ஆகவே வரவில்லை. அண்டனூர் சுரா சற்று தாமதமாக வருவதாக சொல்லியிருந்தார். அவருக்கிருந்த வேலையால் வரமுடியாமல் போய்விட்டது. நா.விச்வநாதன், ஹரணி, .பிரகாஷ் மற்றும் நான் என்று வரிசையாக பேச ஆரம்பித்தோம். ஜூன் மாத இலக்கிய இதழ்களில் வந்துள்ள கதைகள் தாம் பேசுபொருள்.


இலக்கிய ஆர்வம் கொண்ட ஜூவல்லரி கடை வைத்திருக்கும் இராம.சந்திரசேகரன் முதன் முதலில் கூட்டத்திற்கு வந்திருந்தார். அவர் தஞ்சையில் நடக்கும் முக்கிய இலக்கிய கூட்டங்களுக்கு சென்றுமுதலில் அமரும் வழக்கம் கொண்டவர். அவர் எங்கள் கூட்டதிற்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்துமணி எப்போதும்போல முதல் நபராக வந்திருந்து வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

நா.விச்வநாதன் 'அடி' சிறுகதையைப் பற்றி எழுதிவந்திருந்த சின்ன குறிப்புகளை கொண்டு பேசினார். ஆத்மார்த்தி எழுதியிருந்த பேசும் புதிய சக்தியில் வந்திருந்த கதை. சின்ன வயதிலிருந்து மிக பாசமாக வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை வளர்ந்தது, அம்மா, அக்கா, அண்ணன், கடைசியாக அப்பாவையும் அடித்துவிடும் அல்லது துன்பபடுத்திவிடும் ஒரு குழந்தையின் கதை. எல்லா குடும்பங்களிலும் இது நிகழ்கிறது என்று சொல்லலாம். செல்லமாக வளர்க்கப்பட்ட குழந்தை அந்த பாசத்தை மறந்துவிடுகிறது. புரியாமல் போய்விடும் பாசம் மற்ற குடும்ப நபர்களிடம் வெறுப்பாகவே வெளியாகிறது.மிகச் சிறுவயதில் நடந்தவைகளை குழந்தை நினைவும் கூறுவது சற்று நெருடல்.

தீராநதியில் வந்திருந்த சுப்ரபாரதி மணியனின் களிமண் பட்டாம்பூச்சிகள் கதைப் பற்றி ஹரணி பேசினார். எழுதி வந்து பேசுவது அவர் வழக்கம். அந்தபடியின் ஒரு நகல் மணியனுக்கு அனுப்பியிருக்கிறார். அகமகிழ்ந்து நன்றி சொல்லியதை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டார் ஹரணி. அந்த இதழ் கிடைக்கவில்லை.

அம்ருதாவில் வெளியான சுமதியின் நிலா கதையை கொங்கு தமிழில் அழகாக விமர்சித்தார் .பிரகாஷ். நிலா கதை எளிய கதைதான். சமரசங்களோடு வாழும் பெண்ணுக்கு சமரசமின்றி வாழும் பெண்ணுக்கு இடையில் நடக்கும் சின்ன பறிமாறல்கள் தான் கதை. பிரகாஷின் கன்னிப் பேச்சு இது. நண்பர்களிடையே இலக்கியம் பேசியிருந்தாலும் ஒரு சின்ன கூட்டத்தில் முதலில் பேசுகிறார். ஆனால் எந்த தடுமாற்றமும் தெரியாமல் வெளிப்படுத்தினார். கதையை அவர் உள்வாங்கிக் கொண்டவிதமும் அவர் பேசிய கொங்கு தமிழும் அழகு.

கிருஷ்ணபியா,   பபுலியூர் முருககேசன், ஸ்டாலின் சரவணன், துவாரகா சாமிநாதன், சிம்ளி விஜயன், இந்து மணி மற்றும்வாவாசக நண்பர்கள் கலந்துகொண்டது மகிழ்வாக இருந்தது.
நிகழ்வை தொகுத்து வழங்கினேன். கடைசியாக நேரமிருந்ததால் ஆம்லெட் சப்பாத்தியும் இங்கிலிஸ் நியூஸ்பேப்பரும் என்கிற எஸ்.செந்தில்குமாரின் உயிர்மை கதையைப் பற்றி பேசினேன். நான்கு நண்பர்கள் ஒருவர் கேட்டார் என்பதற்காக நல்ல பணம் கிடைக்கும் என்று ஆங்கில செய்திதாள்களை 1 டன் அளவிற்கு சேகரிக்க ஆரம்பிக்கிறார்கள். தங்க வேலைகளையும் ஒருகட்டத்தில் விட்டுவிடுகிறார்கள். கேட்டவர் திடீரென இறந்துவிட நால்வரும் நிலைகுலைகிறார்கள். தங்கள் வேலையை விட்டு தெரியாத வேலையை மெனக்கெடுவதால் வரும் துன்பம். இவர் அவரிடம் பேசினார். அவர் வேறுஒருவரிடம் இதைக் கொடுத்தார் என்று எஸ்.செ. எழுதுவது சற்று அயர்ச்சியை கொடுத்து வாசிப்பை தடுக்கிறது. இவ்வளவிற்கு பின்னும் அந்த கதை நம்மனதில் நிற்பது ஆச்சரியம்.

கடைசியாக ஒரு சர்ச்சை வேறு நிகழ்ந்தது. எப்போது முடியும் தருணத்தில் பேசாதவர்களை பேச அழைப்பது வழக்கம். மேல்விவரங்களுக்கு இதற்கு முந்தைய பதிவு கும்பல் மனநிலை கட்டுரையை படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

நிகழ்வு முடிந்த பின் புதுவிதமாக சற்று மாற்றி அமைப்பது என்று பேசிக்கொண்டோம். அதை அடுத்த நிகழ்விற்குபின் தெரிவிப்போமாக. நிகழ்வு இனிமையான நினைவாக அமைத்துதந்த அனைவருக்கும் நன்றி.

No comments: