Friday, June 2, 2017

தஞ்சைக் கூடலின் மே மாத இலக்கிய கூட்டம் (27/5/17)



வழக்கமாக அமையும் சிறுகதைக்கூட்டமாக இல்லை இந்தமுறை. குறிப்பாக காத்திருக்க வேண்டியிருந்தது இந்தமுறை ஏற்படவில்லை. எல்லோரும் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டார்கள். இன்று ஒர் இலக்கிய கூட்டத்திற்கு உற்சாகம்தான் தேவையாக இருக்கிறது. அதேபோல் கலந்துரையாடலின் போதும் ஆரோக்கியமான உரையாடல்கள் நிகழ்ந்தன, ஹரணி, மோகன்ராஜ், துவாரகா போன்றவர்களின் கருத்துரையாடல்களால் சம்பிரதாய இறுக்கங்கள் மறைந்து அடுத்தக் கட்டத்திற்கு (இதுவரை நடந்துவந்த கூட்டங்களையும் சேர்த்து) கூட்டத்தை கொண்டு சென்றது என்றால் மிகையில்லை.

நான் போனதும் முதலில் வந்துவிட்டார்கள் மோகன்ராஜும், பிரகாஷும். பிறகு ராகவ் மகேஷ், பாவலர் தர்மராசன் ஆகியோர் வந்ததும் சின்ன வேடிக்கைக் பேச்சுகள் தொடங்கிவிட்டன. பின்பு ஹரணியும் துவாரகாவுடன் புலியூர் முருகேசன் வந்தார். மிடறு முருகதாசுடன் கந்தவர்வ கோட்டையிலிருந்து அன்டனூர் சுரா வந்தார். பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற ஜகன் சார் கூட்டத்தைப் பற்றி கேள்வி பட்டு தான் வருவதாக முன்பே கூறியபடி வந்திருந்தார். சிம்ளி அமைப்பாளரான விஜயன் அவரது நண்பர் செந்தில்ராமுன் வந்திருந்தார் சற்று தாமதமாக வந்த செ.சண்முகசுந்தரமும் கூட்டம் முடியும் முன்பே அவசரவேலையாக கிளம்பினார்.

கூட்டம் துவங்கியது. முதலில் ஹரணியை பேச அழைக்க‌, பச்சைநிற பேப்பர் கட்டுடன் பேசஆரம்பித்தபோது முனைப்புடன் நீண்ட தயாரிப்புடன் அவர் இந்த சிறுகதை நிகழ்வை எதிர்கொள்வது தெரிந்தது. தஞ்சைக் கூடலில் அவர் கலந்துக் கொள்ளும் முதல் கூட்டம். மிக இயல்பாக நீண்ட உரைகளுடன் பேசினார். காக்கை சிறகினிலே இதழில் வெளியான சோ.சுப்புராஜின் சாபம் விழுந்த வீடு, பா.ரவீந்திரனின் திறீ ப்ராங்க் ஹொட்டல் என்கிற இருகதைகளையும் பற்றி பேசினார். நிறைய எழுதி பேசி பழகியவருக்கு இந்த இரு கதைகள் போதாமல் இருந்திருக்கும்.

அடுத்து அண்டனூர் சுரா பேசினார். கணையாழி மே இதழ் கதைகளைப் பற்றி அவருக்கே உரிய தனிப்பட்ட உடல்மொழியோடு ஒரு நிகழ்த்துக் கலைஞன் தன் அழகிய பாவனைகளின் வழியே பேசுவதுபோல கதைகளை தன்போக்கிற்கு அவைகளை நிகழ்த்திக் காட்டினார்.

புலியூர் முருகேசன் மே உயிர் எழுத்தில் வெளியாகியிருந்த எளைச்சவன் (இட்சுவாகு), முடிச்சுகள் (அபிமானி), சாண் பிள்ள (இதயா ஏசுராஜ்), அழைப்பு (மும்தாஜ் யாசின்) ஆகிய கதைகளைப் பற்றி பேசினார். தனக்கு பிடித்தமான அபிமானி கதை இந்த முறை பிடிக்கவில்லை என்று, அவர் தடம் மாறிவருவது தனக்கு உவப்பளிக்க வில்லை என்று பேசினார். அவர் சிலாகித்து பேசியது மும்தாஜ் யாசினின் அழைப்பு என்கிற சிறுகதைதான். எதிர்பாராத பல்வேறு அடுக்குகளை உடைய முஸ்லீம் வாழ்க்கையை படித்திருப்பது பிடித்திருக்கிறது என்றார்.

அடுத்து மோகன்ராஜ். இவர் சிறுகதைகளை எழுதியிருக்கிறார் ஆனால் இன்னும் புத்தகமாக வெளியாகவில்லை. சிறுகதைகள் குறித்த சில முக்கிய தன் சொந்த அவதானிப்புகளைப் பற்றி கூறியது இந்தமாத கூட்டத்தின் சிறப்புகூறு. மூன்று புள்ளிகளை கொண்ட சிறுகதைகளை தான் எதிர்ப்பார்பதாகவும், அந்த புள்ளிகளை திருப்திபடுத்தும் சிறுகதைகளை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாக கூறினார். அந்த மூன்று புள்ளிகள். கதை மற்றவர்களுக்கு கதையாக சொல்லும்படி இருத்தல் கூடாது. வெறும் வார்த்தைகளாக அமையாமல், அதை கற்பனையில் தீண்டும்விதமாக அமைதல் வேண்டும். கதை முடிந்ததும் மீண்டும் மனதில் அக்கதையின் தொடர்ச்சி அமைதல் வேண்டும். அவர் எடுத்திருந்த கதை மே பேசும் புதிய சக்தியில் வெளியான சிவக்குமார் முத்தையாவின் காணியாச்சிக்காரனின் மகள். அவர் சொன்ன இரண்டாவது புள்ளியான வார்த்தை அமைப்புகளில் திருப்தியுற்றிருந்தாலும் முதல் புள்ளியும் மூன்றாம் புள்ளியும் தனக்கு திருப்தி ஏற்படுத்தவில்லை என்றார். வண்ணதாசனின் தனுமை, ஜெயமோகனின் டார்த்தீனியம் கதைகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு அவைகளை எப்படி வாசகனை நோக்கி பேசின என்பதை பேசினார்.

துவாரகா சாமிநாதன் சிறுகதைகளைப் பற்றி பேசவரவில்லை, பார்வையாளராக வந்திருந்தார். மோகன்ராஜின் எதிருரையாடலாக அவர் பேசினார். நம் மரபு கதைச் சொல்லியின் மரபு அதை ஒட்டியே நமது சிறுகதைகள் அமைந்திருக்கின்றன எனவும், அப்படி இருக்கும் சிறுகதைகளே தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறினார். அதற்கான உதாரண சிறுகதைகளைப் பற்றி பேசினார்.
கந்தர்வனின் தண்ணீர் கதையைப் பற்றி பேசி அது எப்படி கதையாக கூறமுடியாத தன்மையை பெற்றிருக்கிறது என்பதை பேசினேன். ஹரணியும் அவர் நினைவிற்கு வந்த சில கதைகளை அது எப்படி மூன்று புள்ளிகளை கொண்டிருகின்றன என்பதை கூறினார். புலியூர் முருகேசன் தண்ணீர் அழகாக புரியும் படியாக கூறமுடிந்ததை கூறி சிரிக்க வைத்தார். இடையே பாவலர் தர்மராசன் அவர்கள் தன் சிறுகதை அனுபவங்களை சுவையாக கூறினார்.

மே அம்ருதாவில் வந்த சுமதியின் மிதக்குமுன் முகம் கதைப் பற்றி பேசினேன். இலங்கை பெண் இலங்கையிலிருந்து தப்பித்து வேறு ஒரு நாட்டிற்கு புலமெயர்கிறார். அவரது நிலம் குறித்த மனவேதனைகளாக இக்கதை அமைந்திருக்கிறது. கதை வெறும் நினைவுகளா என்று சந்தேகிக்கும்படியான சிறுகதை. ஒரு கப்பலில் இருக்கும் மக்கள் கூட்டத்தில் தனித்து நின்று தன் நினைவுகளை திரட்டிக் கொள்ளும் காதல் கொண்ட இளம் பெண் தன் காதலனை நினைக்கிறார். அந்த நினைவுகள் அவரை சென்று சேறுமா என்கிற சந்தேகத்துடன். பொதுவாகவே ஈழக்கதைகள் புலம்பெயரும் வலிகளைதான் அதிகம் பேசுகின்றன. அதுதான் நிகழவும்முடியும். ஆனால் கூடவே பெண்கதைகளில் காதல் வருவது துருத்தலாக இருக்கிறது, இந்த கதையில் அப்படியில்லையென்றாலும்.

டீ பிஸ்கட் போன்ற இளைபாறல்கள் முடிந்து கூட்டம் இனிதே நிறைவடைந்தது. வெளியே வந்து வண்டி எடுக்கும் இடத்தில்கூட சின்ன கூட்டம். அடுத்த முறை இதைவிட சிற்ப்பாக செய்யவேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு பேச்சுகளோடு கலைந்து சென்றோம். அன்றிரவும் அடுத்த நாளும் யாரோ யாருக்கு பேசிக்கொண்டிருப்பதும் பதிலளிப்பதும் போலவே கனவுகளும் நினைவுகளும் தொடர்ந்தன. நன்றி நண்பர்களுக்கு.

3 comments:

கலைச்செல்வி said...

எனக்கும் வாய்க்க வேண்டும் இவ்வரங்கள்..

கிருஷ்ணப்ரியா said...

அடுத்தடுத்த கூட்டங்கள் இன்னுமின்னும் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் அசோக்குமார்.... இலக்கிய உலகில் தடம் பதிக்கட்டும் தஞ்சை கூடல்..

ஹ ர ணி said...

அன்புள்ள அசோக்குமார்..

வணக்கம். ஏற்கெனவே உங்களிடம் கைப்பேசியில் பேசியபடி இது ஒரு நல்ல தொடக்கம். நலமான விவாதங்களுடன் ஒவ்வொரு மாதமும் சிறுகதைகள் பற்றிய பரிமாணங்களைப் பகிர்ந்துகொள்வது நம்மை வளர்த்துக்கொள்ளவும் புதிய எழுத்தாளர்களை வளர்க்கவுமாக அமையும். இந்தக் கூட்டம் நன்றாக இருந்தது. ஒவ்வொருவரும் அவரவர்க்கே உரியத்தான இயல்பான பேச்சில் கவர்ந்தார்கள். குறிப்பாக மோகன்ராஜ் பேசிய விதம் எனக்கு நிரம்பப் பிடித்திருந்தது. ஒவ்வொரு படைப்பாளியின் உள் முகத்தைத் தேடும் அக்கறையாக இக்கதைப் பகிர்வு அமைந்திருந்தது. சொன்னவிதமும் விவாதித்தவிதமும் இதமாக இருந்தன. தொடர்ந்து இதனைப் பேசவேண்டும். கூடல் பெருங்கூடலாக மாறும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. தஞ்சை ப்ரகாஷ் தொடங்கி இப்போது அசோக்குமார் வரை நீண்டிருக்கிற இந்த இலக்கியத்தேடர் நிரம்ப நம்பிக்கையை விதைத்திருக்கிறது. எல்லோரும் நீர் விட்டு வளர்ப்போம் இதை. வாழ்த்துகள்.