Thursday, March 2, 2017

ரெஸ்ட் ரூம்னா டாய்லெட் தானே?



பள்ளியில் நடந்த அல்லது கற்றுக்கொண்ட ஒரு புதிய விஷயத்தை சொல்வதில் மகனுக்கு ஆர்வம் என்றால் கேட்பதில் அதைவிட அதிக ஆர்வம் எனக்கு என்பேன். ஒரு நாள் ரெஸ்ட் ரூம்னா என்ன சொல்லுங்க என்றான்.

டாய்லெட், கழிப்பறை, பாத்ரூம் என்று சொல்ல எதுவும் இல்லை என்றான். நான் அது என்ன என்று கேட்க ரொம்ப நேரம் காக்க வைத்தே சொன்னான். ரெஸ்ட்ரூம்னா நானு உச்சா போறேன்னு அர்த்தம் என்றான். வீட்டில் எல்லா மூலைகளிலிருந்தும் சிரிப்பலைகள் எழுந்தன. அடங்க கொஞ்ச நேரம் ஆகியது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் கழிவறைக்கு பெயர்கள் மாறிவருவது சற்று ஆச்சரியம். முன்பு கொல்லைக்கு போகிறேன் என்பார்கள். உண்மையில் கொல்லையில் ஏதோ பூப்பறிக்க போவதாக நாம் நினைப்பதில்லை. வேறு எந்த காரணத்திற்காகவும் கொல்லைக்கு சென்றாலும் அப்படி சொல்ல மாட்டோம். கொல்லை எடுக்கப்பட்டு வீடுகள் கட்டிவிட்டபின் இன்றும் கிராமங்களில் கொல்லைக்கு போகிறேன் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆத்துக்கு போகிறேன் என்கிற வழக்கமும் இருந்தது. ஆற்றில் தண்ணீர் வந்த காலம். அப்போது குளிக்க மட்டும் போகவில்லை என்று நாம் புரிந்துக் கொண்டிருக்கிறோம்.


வயதான அத்தை ஒருவர் இருந்தார். அவர் நான் லெட்ரின் போறேன் என்று தான் சொல்லுவார். லெட்ரின் என்பது பொது கழிப்பிடம் என்கிற அர்த்ததில் இருக்கிறது. ஒரு விடுதியில் இருக்கும் கழிவறை, தற்காலிக அமைப்பிடங்கள் அமைக்கபட்டிருக்கும்போது பொதுவாக இருக்கும் கழிப்பிடங்களுக்கு அப்பெயர் சொல்லலாம். பெரிய கட்டுக்குடும்பங்கள் ஒரு வீட்டில் இருக்கும் பொது கழிவறைக்கு இப்படி சொல்லி பழகியவர் பின்னாலும் ஒரே ஒரு வீட்டில் இருக்கும் கழிவறைக்கு பழக்க தோஷத்தில் அப்படியே சொல்கிறார்.

கழிவறை, கழிப்பிடம் நமக்கு பெயர்கள் தெரிந்தாலும் டாய்லெட் என்றுதான் நாம் குறிப்பிடுகிறோம். ஆங்கிலத்தில் சொல்லும்போது சற்று மேம்பட்ட வார்த்தையாக மாறிவிடுகிறது. சிலர் டாய்லெட் என்று சொல்வதையும் வெட்கப்பட்டு பாத்ரூம் என்றே சொல்கிறார்கள்.

புதிதாக வீட்டிற்கு வந்தவர். இது என்ன என்று அறையை காட்டினார்.லைட் போட்டு இது புதிசா கட்டின பாத்ரூம் பாருங்க என்றேன். தலை திருப்பாமல் கண்கள் இங்குமங்கும் அசைய பார்த்துவிட்டுஇல்ல நான் ஒன் பாத்ரூம் போகணும்’ என்றார்

ஒன்வே பாத்ரூம் என்று ஒரு பதமும் உண்டு. அதாவது நான் மலகழிக்க செல்லவில்லை, சிறுநீர் மட்டுமே கழிக்க செல்கிறேன் என்று நாகரிகமாக சொல்கிறார்கள். பொதுவாக பெண்கள் தான் இந்த வார்தையை அதிகம் உபயோகிப்பவர்கள்.

ஒரு படத்தில் ரெஸ்ட்ரூம் என்றால் ஒய்வறை என்று தேட நாயகி அது டாய்லெட் என்பார். இது காமெடி என்றாலும் நிஜத்தில் கிராமங்களில் இது தெரிய வாய்பே இல்லை. கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் கக்கூஸ்தான். அது டச்சுக்காரர்கள் விட்டுச் சென்ற வார்த்தைகளில் ஒன்று. கக்கூஸ் என்று சொல்லும்போது முகம் சுழிக்கும் மனிதர்கள் அதிகம். கக்கூஸில் அப்படி என்ன இருக்கிறது என தெரியவில்லை. சிலர் டாய்லெட் என்று சொல்லும்போதும் அவர்களே முகம் சுழிப்பார்கள். உள்ளே சென்று முக்கலினால் முகம் சுழிக்கப்போவதை இப்போதே செய்கிறார்கள் போலும்.

பள்ளிகளில் ரெஸ்ட்ரூம் என்பது மாதிரி லூ என்று சொல்லிதருகிறார்கள். அதாவது வாண்ட் டு கோ லூ என்று. பேள போகிறேன், வெளிக்கு போகிறேன் என்று சொல்பவர்களும் உண்டு. அது நாகரிக வட்டதில் சொல்லப்படுவதில்லை. வீட்டில் அல்லது நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே இன்று சொல்லிக் கொள்ளப்படும்.

உட்சபட்ட சாபங்களில் ஒன்று. பேதியில போவ என்பது. பேதியில் போகவைக்க அப்படி என்ன ஆசை என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. சென்னைப் பகுதியில் உன் மூச்சியில என் பீச்சாங்க கைய வைக்க என்பார்கள். நமக்குதான் தெரியுமே பீச்சாங்கை எதற்குஎன்று. ஒரு குடும்பம் சிதைகிறது (பைரப்பா) என்கிற நாவலில் ஒரு பெண்பாத்திரம் சண்டைபோடும் ஒரு ஆணிடம் ‘உன் வாயில் என் பீய வைக்க’ என்பார். ஏனெனில் தினப்படியாக இருந்தாலும் அருவருப்பான விஷயங்களில் இதுவும் வந்துவிடுகிறது.

பொருள் ஒன்றுதான் என்றாலும் வார்த்தைகள் காலத்தால் மாறிக்கொண்டே வருகின்றன. நன்றி, பேருந்து, தொடர்வண்டி, மருத்துவமனை மாதிரி பேச்சுவழக்கில் வராத வார்த்தைகளில் போன்று கழிவறையும் இருக்கும் என நினைக்கிறேன்.

No comments: