Tuesday, February 28, 2017

தஞ்சை கூடலின் முதல் சிறுகதை கூட்டம்சிறுகதைக்கு கூட்டம் கூட்டுவது என்பது பெரிய சங்கடமான விஷயம். பழந்தமிழ் இலக்கியங்களுக்கு பேசும் பேச்சாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பேசப்படும் படைப்பின் ஆசிரியர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள். அத்தோடு செல்லமாக அவன் இவன் சொல்லலாம். அந்த ஆசிரியரின் படைப்புடன் நெருக்கமாக இருக்கிறோம் என்கிற அர்த்தம் அதில் வந்துவிடுகிறது. .கா. கம்பன் என்ன சொன்னான்?, பாரதி இப்படி பாடினானே?

சிறுகதைக்கு கூட்டம் கூட்டும்போது ஆசிரியர் காலமாகியவர் என்றால் கொஞ்சம் தப்பிக்கலாம். அப்போது சாதிய அடையாளங்கள் அவர் மேல் போடப்பட்டு புகழ்ந்து/இகழ்ந்து பேசுபவர்களை நண்பராக/எதிரியாக பார்க்கப்படும். சமகாலத்து எழுத்தாளர்கள் என்றால் எங்கும் தப்பிக்க முடியாது. ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியம். கொஞ்சம் கிழிறக்கி பேசிவிட்டால் போச்சு. ஊரே பற்றி எறியலாம். அல்லது பெருமழை பெய்யலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

அதெல்லாம் அறிந்த நாங்கள் இந்த தவறை செய்தோம். தஞ்சை கூடல் என்கிற அமைப்பில் ஒரு முதல் சிறுகதைக் கூட்டம் கூட்டிவிட்டோம். எல்லா இலக்கிய கூட்டங்களுக்கு வரும் அதே அளவைவிட சற்று குறைவாக கூட்டமாக அமைந்துவிட்டது. தஞ்சையில் நாடக விழா நடந்ததும் மற்ற இரு இடங்களில் இலக்கிய கூட்டங்கள் நடந்ததும் தான் காரணம். எல்லா ஊர்களிலும் இலக்கிய ஆர்வலர்கள் ஒரு 20 முதல் 25 பேர்தான் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

தஞ்சை கூடல் சிறுகதைக் கூட்டம் 25 பிப்ரவரி 2017 ஆம் தேதி தஞ்சையில் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள டிகேஆர் நடுநிலைப்பள்ளியில் தொடங்கியது.

பல்வேறு சடங்குகளுக்கு பின்னால்தான் இந்த கூட்டதை அமைக்க முடிந்தது. சோமு அய்யா, மா.கந்தசாமி அய்யா என இருவர்களின் முயற்சியில் டிகேஆர் பள்ளியில் இடம் கிடைத்தது. இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். என்பால் மிகுந்த அக்கறை கொண்டு என் முயற்சி வெற்றியடைய உழைத்தவர்கள். அவர்களும் இனிவரும் காலங்களில் நடக்கப்போகும் ஒவ்வொரு கூட்டங்களிலும் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

தஞ்சாவூர் ஹரணி, நான், தூயன் முக்கிய இதழில் இந்தமாதம் (பிப்) வெளியாகும் கதைகளை பற்றி பேசுவது என்று முடிவானது. அடுத்த மாதம் வேறு நபர்கள் பேச இருக்கிறார்கள். அத்தோடு ஒரு ஆளுமை சிறுகதை வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டும் எனவும் முடிவு செய்தோம். தஞ்சையின் முக்கிய ஆளுமையான‌ நா.விச்வநாதன் அது குறித்துபேச‌ ஒத்துக் கொண்டார்.

எப்போதும் போல அரைமணிநேரம் தாமதமாக 5.30க்கு தான் தொடங்கியது. ஹரணி அவர்களுக்கு அவசர வேலை காரணமாக கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. நா.வி பேசுவது அறிந்து அவரது நண்பர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். முதலில் நான் இந்த சிறுகதை கூட்டம் என்ன காரணங்களுக்காக ஆரம்பிக்கப் பட்டது என்பதை குறித்து பேசினேன்.

சிறுகதைகள் குறித்துப் பேசும்போது பொதுவானவைகள் மட்டுமே பேசப்படுவதும் அதன் உள்ளடுக்குகளைப் பற்றி கவலை கொள்ளாததும் குறித்து பேசினேன். புனே இருந்த சமயங்களில் மாராட்டி இலக்கிய ஆர்வலர்களுடனாக சந்திப்புகளில் இருந்த  மகிழ்வை இங்கு காண முடியவில்லை. தனித்தனியாக மக்கள் இயங்குவதும் தொடர்பற்ற நிலையில் கதைகள் குறித்த செய்திகள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளாததும் இலக்கியத்தின் வழிகள் அல்ல. முன்பு தஞ்சை ப்ராஷ், எம்விவி போன்றவர்கள் தஞ்சை மண்ணில் பெரிய இலக்கிய சந்திப்புகளுக்கு வழிவகுத்தார்கள்.
தொடக்கமாக சிறுகதைகளை குறித்து இந்து மணி பேசினார். (முன்பு இந்து நாளிதழில் பணிபுரிந்ததனால் வந்த பெயர்.) கம்யூனிச கூட்டங்களில் பேசக்கூடியவர். அதே தோரணை அழகுடன் தன் அனுபவங்களை வைத்தார். அவரமாக செல்லவேண்டியதால் பேசியஉடன் கிளம்பிவிட்டார். அதேபோல் சிம்ளி அமைப்பின் விஜயன் மெதுவாகவே வந்து கலந்துக் கொண்டார். முருக திட்சன்யா பிறகு சந்தித்தப்போது கலந்துக் கொள்ளமுடியவில்லை என வருத்தப்பட்டார்.

நா.விச்வநாதன் பேசும்போது நாங்கள் கூட்ட கூட்டங்களில் வந்த மனிதர்களைப் பற்றியும் அப்போது நடந்த சில சுவையான செய்திகள் பற்றியும் பேசினார். பின்பு சிறுகதைகளின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருந்தது என்று பேசினார். அதன்பின் அவர் எழுதியிருந்த ஒரு கதையையும் வாசித்துக் காட்டினார். யட்சியை பற்றிய அக்கதை எல்லோராலும் பாராட்டப்பட்டது.

பின்பு தேவக்கோட்டை மூர்த்தி பேசினார். சிறந்த வாசகர் இவர். எல்லா இதழ்களில் வரும் கதைகளை உடனே படித்துவிடுபவர். அத்தோடு அவைகளில் சிறந்தவைகளை குறித்து தன் கருத்துக்களை எழுதி வருபவர். அந்தந்த பத்திரிக்கைகளிலேயே தொடர்ந்து வெளிவருபவை. கூட்டத்தில் தன் அனுபவகளை பகிர்ந்து கொண்டது வேடிக்கையாகவும் மனநிறைவாக இருந்தது.

பேச்சு சுவாரஸ்யத்தில் புகைப்படம் எடுக்க மறந்துவிட்டது. நேரமாகிவிட்டதால் சிலர் கிளம்ப, மற்றவர்களுடன் ஒரு செல்பி மட்டுமே எடுத்தோம். மனநிறைவோடும் அடுத்த கூட்டத்திற்கான ஆவலுடனும் விடைப் பெற்றொம்.

2 comments:

கிருஷ்ணப்ரியா said...

அம்மா 690 முகாம் தொடர்பான வேலைப்பளுவால் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது அசோக்.நிகழ்வு சிறப்புற நடந்தமைக்கு வாழ்த்துக்கள்....
சரி.. தூயன் பேசினாரா இல்லையா? அதைப் பற்றி ஒன்றும் எழுதக் காணோமே?

Dr B Jambulingam said...

சிறுகதைக்கூட்டப் பகிர்வினைக் கண்டேன். தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. தொடர்ந்து மென்மேலும் வளர வாழ்த்துகள்.