Saturday, February 25, 2017

எது சிறந்த மொழி



இந்தி மொழி எழுதப் பயன்படும் தேவநாகரி லிபியை தான் மராட்டி மொழிக்கு பயன்படுத்துகிறார்கள். மராட்டியில் புதிய எழுத்துக்கள் இரண்டைதவிர இந்தியும் மராட்டியும் பார்க்க ஒன்றுபோலத்தான் இருக்கும். இரு மொழிக்காரர்களும் மற்ற மொழியை எளிதாக படித்துவிடமுடியும். மஹாராஷ்டிராவில் ஐந்தாம் வகுப்புக்குமேல் இந்தியும் இருப்பதால் இந்தியை அறியாதவர் அங்கு யாரும் இருக்க முடியாது. (இந்தி தெரியாதவர் ஐந்தாம் வகுப்பை தாண்டாதவர் என்று பொருள்.) ஆனாலும் இந்தியில் வரும் எல்லா இலக்கியங்களும் நூல்களும் மராட்டியில் உடனே மொழியாக்கம் செய்யப்பட்டுவிடும்


இந்தியும் உருதுவும் பேச்சுமொழி ஒன்றுதான். இந்தி அறிந்தவர் உருது மொழியை பேச முடியும். உருது அறிந்தவர் இந்தி மொழியை பேச முடியும். இந்தி மொழியை அறிந்தவர் உருதுவின் எழுத்து வடிவை அறிந்திருந்தால் போதுமானது. நேரடியாக அம்மொழி நூல்களை படித்துவிடலாம். அதேதோல் உருது அறிந்தவரும் இந்தியின் தேவநாகரியை அறிந்துகொண்டால் இந்தியில் வருபவைகளை படித்துவிடலாம். ஆனால் உருதுவில் வெளியாகும் அனைத்து இலக்கியங்களும் இந்திக்கும், இந்தியில் வெளியாகும் அனைத்து நூல்களும் உருதுவிற்கும் உடனே எழுத்து மாற்றம் செய்யப்பட்டுவிடுகிறது. வங்காளம் ஒடியா, போஜ்பூரி, மைதிலி என்று மொழிகள் மிக நெருக்கமாக இருந்தாலும் உடனே அவைகளுக்குள் நூல்கள் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. இணையம் வந்தபின்னால் இன்னும் பரவலாக மொழிபெயர்ப்புகள் நடக்கின்றன.

ஒவ்வொரு மொழியிலும் தங்கள் மொழியின் வளர்ச்சிக்காக உடனுக்குடன் மொழிபெயர்ப்புகளும் புதிய ஆக்கங்களையும் கொண்டுவர மிகவும் முனைப்பாக செயல்படுகிறார்கள். இணையத்தின் வளர்ச்சியால், இன்று தேங்கியிருந்த சாதாரண மொழிகள் கூட வளர்ச்சியை காணமுடிகிறது. புழக்கத்தில் இல்லாத வட்டார மொழிகள் அந்தந்த மொழிகளில் படிக்கப்படுவது எளிதாக நடக்கிறது.

ஏன் இத்தனை முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன? ஒரு மொழியின் வளர்ச்சி அதில் வெளிவரும் இலக்கியங்களாலும், அதிகம் வாசிக்கப்படுவதாலும் நடக்கிறது. சிறந்த இலக்கியங்கள் சிறந்த வாசகர்களால் உருவாகின்றன. சிறந்த வாசகர்கள் அந்த சமூகம் தொடர் வாசிப்பினால் உருவாகிறார்கள். மிகச்சிறிய மக்கள் தொகை கொண்ட மொழிகள்கூட அதில் வந்த சிறந்த இலக்கியங்களால் உலகமக்களின் பார்வைக்கு வந்துவிடுகிறது.

பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஆங்கில மொழி அடைந்த வளர்ச்சியை இதுவரை வேறு எந்த மொழியும் அடைந்ததில்லை. அப்போது ஆங்கிலம் மிகச்சிறிய ஒரு வட்டாரத்தின் மொழி. மிகப் பெரிய ஆளுமைகள் இலக்கியம், அறிவியல், கணிதம் என்று எல்லா துறை வல்லுனர்களும் சிறிய வட்டத்திற்குள்ளிருந்து உருவாகிவந்தார்கள். இந்த சாத்தியம் மிகப்பெரிய வாசகபரப்பினால் தான் உருவாகியது.

மக்கள் தொகையின் எண்ணிக்கையைவிட வாசகர்களின் எண்ணிக்கை மிக முக்கியம். சீன மக்களின் எண்ணிக்கையைவிட ஜப்பானிய மக்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஆனால் ஜப்பானிய மொழியில் வந்த இலக்கியங்களின் எண்ணிகையோ மிக அதிகம்.

மற்ற மொழிகளில் ஒரு முக்கிய ஆக்கம் வெளிவந்து ஒரு மாதத்தில் அனைத்து புத்தகங்களும் தீர்ந்துவிடுகின்றன. தமிழில் முக்கிய ஆக்கம் வெளியாகும்போது அதை அறிந்தவர்களே மிக குறைவாக இருக்கிறார்கள். தமிழில் ஒரு நூல் வெளியாகி முழுவதும் விற்று தீருவதற்கு குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் ஆகின்றது. முக்கிய நூல்கள் மறுபதிப்பு வருவது என்பது பெரிய சாதனையாக இருக்கிறது.

இன்றும் தமிழில் வாசிப்பு மிக குறுகிய வட்டத்திற்குள்தான் நடக்கிறது. பெருநகரங்களில் சில குடும்பங்களில் அதுவும் சில தனிநபர்களின் ஆர்வத்தில் மட்டுமே புத்தகங்கள் வீட்டிற்குள் நுழைகின்றன. முன்பு சொல்லப்பட்ட புத்தகங்கள் படித்து கெட்டுப்போன பிள்ளைகள் என்கிற வசனத்தை இன்றும் பேசுக்கொண்டிருகிறார்கள்.

சிறந்த மொழி எது என்பதை அதில் வெளியாகும் படைப்புகள்தான் முடிவு செய்கின்றன. சிறந்த வாசகர்களால் சிறந்த படைப்புகளை கண்டுக்கொள்ளமுடியும். சிறந்த வாசகர்களுக்குதான் சிறந்த படைப்புகளும் படைக்கப்படுகின்றன.

தமிழில் சிறந்த ஆக்கங்கள் வெளிவர நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். பரவலான வாசிப்பு. இன்றைய காலகட்டத்தில் எந்த மொழி பரவலாக வாசிக்கபடுகிறதோ அதுவே சிறந்த மொழியாக இருக்கும். அந்த மொழியில் தான் பின்னாட்களில் சிறந்த ஆக்கங்கள் வெளிவர போகின்றன. நமது இப்போதைய தேவைவாசிப்பு’.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வாசிப்பின் தேவையை உணர்த்தும் அருமையான பதிவு. இக்காலகட்டததிற்கு இன்றியமையாதது. மொழிபெயர்ப்பு தொடர்பான புதிய செய்திகளை அறிந்தேன். நன்றி.