Monday, February 20, 2017

தலையை கொடுத்தல்



அவன் வெட்டுக்கு போயிருக்கான், அவனுக்கு தலைக்கு மேலே வேலை, தலையை கொடுக்க போயிருக்கான், என்று முடிவெட்டிவருவதை இப்படி பல வகையிலும் குறிப்பிடுவதுண்டு. முடிவெட்டுவதை குறித்து தனி ஜோக்குகளாகவே கேலி சித்திரங்களுடன் ஆனந்தவிகடனில் முன்பு வெளிவரும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் நவீனத்துவம் முடிதிருத்துலாக இருந்திருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்குள்ளேயே இருந்த முடிதிருத்தல்கள் பொதுவெளியில் வந்தபோது குழப்பமாகத்தான் எதிர்கொண்டிருக்கிறார்கள் மக்கள்

சில விநோதங்கள் அப்படியே தொடர்கின்றன, அவன் முடிவெட்டிகிட்டு வந்திருக்கான் அவனை தொடாதீங்க, என்று எச்சரிக்கை செய்ய வீட்டில் ஒருவர் இருப்பார். அணிந்திருக்கும் உடைகளை தனியே எடுத்து வைக்க வேண்டும். அதை தனியே அலசிப்போடவேண்டும். பின்புதான் துவைக்கவே செய்வார்கள். நீளமுடியை வைத்தால் கொஞ்சம் கிண்டல்களும், கொஞ்சம் புதுமைகளை செய்தால் அதிக அலட்சியங்களும் மக்களிடையே வெளிப்படும். சாதாரண முடிவெட்டலுக்கு மக்கள் ஏன் இத்தனை எதிர்வினைகளை செய்கிறார்கள் நினைக்கவே பயமாக இருக்கும்.

நான் சிறுவனாக இருந்த சமயத்தில் முடிவெட்டப் போகும்போது என் அப்பா கூடவே வருவார். நன்கு ஒட்ட அடிக்க சொல்லிவிட்டு பேப்பரில் முழ்கிவிடுவார். தம்பி அப்படி திரும்பகூடாது நேரா பாருங்க என்று என்னை படுத்தி எடுப்பார். அதிகம் வெட்டிவிடப்போகிறார் என்கிற பதைப்பு இருந்துக் கொண்டிருக்கும் ஆனால் விடமாட்டார். எல்லாவற்றையும் ஆசைதீர எடுத்துவிட்டுதான் அனுப்புவார்.

ஒரு முறை என் அப்பா வராத போது அப்படியே வெட்டி அனுப்பினார். மற்றொரு சமயம் கொஞ்சம் தைரியம் பெற்றேன். என் காதுகள் படர்ந்து இருப்பதனால் சற்று மறைப்பதுபோல வெட்ட சொன்னேன். அதாவது சற்று அதிகமாக முடிகளை இருக்கும்படி வெட்ட வைத்தேன். வீட்டிற்கு வந்ததும் என் அம்மா கவனித்து முடி வெட்டுனியா இல்லா வெட்டாம வந்துட்டியா, முடியெல்லாம் அப்படியே இருக்கே, வெட்டாம வந்தமாதிரியில்லடா இருக்கு என்றார். கெஞ்சிக் கூத்தாடி அப்பாகிட்ட சொல்லாதே என்று சத்தியம் வாங்கி வைத்துக் கொண்டேன். அப்பா வீட்டில் காலை வைத்ததும், இவன் முடிவெட்டியிருக்கிற லெச்சனத்த பாருங்க என்று கூறி பதறவைத்தார்.

சாதாரணமாகவே சாமியாடியிருப்பார், உருபேற்றியதும் காலில் தேள் கொட்டியது போல (வென்னீர் பழசுல்ல) குதிக்க ஆரம்பித்தார். தரதரவென்று இழுத்துச் சென்று கடைக்காரரிடம் இப்படியா முடிவெட்றது என்றார். தம்பிதா சொன்னாரு நல்லாதானே சார் இருக்கு என்றார். நல்லாருக்கும் நல்லாருக்கும், பள்ளிகூடம்போற பையன் இப்படியா போவாங்க சின்னதா வெட்டிவிடுங்க, என்றார்.

பெண் குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை இல்லை, சிறுவர்களுக்கு முடி அலங்காரங்களில் இருக்கும் ஆர்வமும் பெற்றோர்களுக்கு அதன் மீது இருக்கும் பயமும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துக் கொள்ள முடியாத இடத்தில்தான் இருக்கிறது.

கொஞ்சம் வளர்ந்தபின் பழைய பாணியில் வெட்டும் பழைய கடையிலிருந்து மேலத்தெருவிற்கு சென்று முடிவெட்ட பழகிக்கொண்டேன். அங்கு வெட்டிக்கொண்டு வந்த முதல்நாளில் என் அப்பா அப்படி ஒரு குரோதமாக பார்த்ததை இன்றும் நினைவில் இருக்கிறது. கல்லூரிக்கு சென்று கொஞ்ச நாளில் டிஸ்கோ கட்டிங் வெட்டிக்கொண்டபோது, அக்கம்பக்கதிலும் உறவு வட்டதிலும் அசோக்கு டிஸ்கோ வெட்டிகிட்டனாமே என்று பேச்சாக இருந்தது. என்னை பார்க்கும்போது தலையைப் பார்த்து லேசாக சிரித்தார்கள்.

ஒவ்வொரு முடிவெட்டல்களுக்கும் வீட்டில் பேச்சு வாங்க வேண்டியிருந்தது. திருமணமத்திற்கு பின்னும் அதேதான் தொடர்ந்தது. இந்த முடிவெட்றத்துக்கு நூறு ரூபாயா, இனிமே கத்திரிக்கோல என்கிட்ட கொடுங்க, நா முடிவெட்டிவிற்றேன் என்றால் மனைவி. மகன் பார்த்துக்கொண்டிருந்த ஜப்பானிய மொழிபெயர்ப்பு கார்ட்டூன் டிவியில் சிறுவனின் அப்பா சின்னதாக தாடி வைத்துக் கொண்டு வர, அவர் மனைவி அதைக் ண்டு வெகுண்டெழுந்து அடித்து சாத்துவாள். இந்த மாதிரி முடிய வெச்சுக்கிட்டு என்கூட வராதீங்க என்பாள். பையன் சிரிப்பான். என் மகனுக்கு அது ஜோக்கா தெரிந்து விழுந்து விழுந்து சிரித்தான். இதேமாதிரியான சம்பவம் வீட்டிலும் நடந்திருக்கிறது. ஜாலிக்கு ஒரு முறை ப்ரன்ச் பியர் வைக்க, கடுப்பாகி அன்றைக்கு இருந்த திருமண விழாவிற்கு வரமறுத்தாள் மனைவி. தாடி உங்க மூஞ்சியும் என்ற சாடல் வேறு. கடைசியில் எடுக்க வேண்டியதாகிவிட்டது.

மகனுக்கு என் போல் படர்ந்த காதுகள். ஆகவே காதோரங்களில் அதிக முடியுடன் இருக்கும்படி அவனுக்கு வெட்ட ஆசை. ஆனால் இன்னும் முடி சரியாக அடர்த்தி கொள்ளவில்லை. நாங்கள் சென்றபோது ஸ்பைக் எனப்படும் புதிதாக வந்திருக்கும் புதிய வகை முடியலங்காரத்தை வெட்டிக்கொண்டிருந்தார் ஒரு பள்ளி மாணவன். சைடு வாகிற்கு கீழ் போலீஸ் கட்டிங் போலவும் மற்ற இடங்களில் நீளமான முடியுமாக பார்க்க வேடிக்கையாக இருந்தது. பள்ளிகூடத்துல ஒன்றும் சொல்வதில்லையா என்று பக்கதில் இருந்த நபரிடம் கேட்டேன். எங்கே இவனுங்க போறானுங்க, அசம்பிளியில ஹெட்மாஸ்டர் பார்த்த உண்டு. நேரா கிளாசுக்கு போய்டு கட் அடிச்சுட்டு வந்துடுவானுங்க என்றார்.

மகன் முறை வந்தபோது கொஞ்சம் வெச்சு வெட்டுங்க என்றேன். மகன் அதெல்லாம் வேண்டாம்பா சின்னதாவே இருக்கட்டும் என்றான். சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் வீட்டிற்கு வரும்போது அந்த ஸ்பைக் மாதிரி கண்றாவியெல்லாம் அவன் வருங்காலத்தில் வெட்டிக்கொண்டு வந்துவிடக்கூடாது என்று பதற்றமாக இருந்தது.

No comments: