Tuesday, February 14, 2017

துரை சி3சிவாஜிக்கு செளத்திரி மாதிரி, ரஜினிக்கு அலெக்ஸ் பாண்டியன் மாதிரி சூர்யாவிற்கு துரை சிங்கம். எம்ஜியார், கமல், விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்களால் செய்யமுடியாததை இந்த மூவரால் மட்டுமே முடிந்திருக்கிறது. விக்ரம்க்கு சாமி கைகொடுத்தாலும் பெரியளவில் இல்லை என்று சொல்லவேண்டும். இந்த கதாபாத்திரம் மிக தைரியமாக அதேவேளையில் புத்திசாலித்தனமாக செயல்படுவர். அந்த பாத்திரத்தின் முகபாவனைகள் ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி அமைய வேண்டும் என்பது முக்கியம்.

சிவாஜி, ரஜினியைவிட மிக நன்றாகவே அந்த பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார் சூர்யா. விளையாட்டுதனமான ஆக்ரோஷத்தால் எதையும் செய்யும் விஜய், அமைதியான ஆக்ரோஷத்தால் எதையும் செய்யும் அஜித்தால், கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ரோஷமாக செய்யும் சூர்யாவை நெருங்கமுடியாது என தோன்றுகிறது. பாட்டுபாடும் முறைகளில் ஓபன் வாய்ஸ் பாடல் வகை என்று ஒன்று உண்டு. வாய் திறந்து உச்சஸ்தானியில் பாடுவது. எல்.ஆர்.ஈஸ்வரி, நித்யசீ போன்றவர்களின் பாட்டுபாடும் முறை இப்படிதான் இருக்கும். அந்த மாதிரியான ஓபன் ஆக்டிங் வகை சூர்யா செய்திருக்கும் துரை சிங்கம். இந்த வகை சூர்யாவிற்கு நன்றாகவே வருகிறது. இப்படி ஒரு படம் செய்யவேண்டும் என நினைத்தால் விஜய் அஜித் இருவரும் இதைதாண்டி செய்து காட்டினால் தான் பெயரெடுக்க முடியும் இல்லை என்றால் அந்த பாத்திரம் கேலியாக முடிய வாய்ப்புண்டு. அத்தோடு சூர்யாவின் உடற்கட்டு பொருத்தமாக இருக்கிறது. அழகிய வடிவமைப்பில் உடலை பேணும் சூர்யா தொடர்ந்து சிங்கத்தை தக்க வைக்க முடிகிறது


விஜய், அஜித் இருவரும் உடல் பேணல் விசயத்தில் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள்.
முதல் இரண்டு பாகங்களைப் போல மூன்றாம் பாகத்திலும் பறந்து பறந்து வேட்டையாடுகிறார். கண்டம் விட்டு கண்டம் போகிறார். பிறகு தப்பிக்கிறார். இடையில் அமைதியாகிறார். பிறகு மீண்டும் தாக்குகிறார். கடைசியில் துவம்சம் செய்கிறார். ரோலர் கோஸ்டர் போல. சின்னச் சின்ன மேடுகளில் ஏறி பின் அமைதியாகி கடைசியில் பெரிய மேட்டில் ஏற்றி கிழே தள்ளுகிறதே அதேதான். வெளியே வருகையில் இன்ப துன்ப அதிர்ச்சி சினிமா பாத்து வெளி வருகையில் ஏற்படுகிறது.

புத்திசாலிதனம் இல்லாமல் கதையை நகர்த்த முடியாது என்று ஹரி புரிந்துவைத்திருக்கிறார். நாம் யோசிக்காத இது வரை வராத தொழில்நுட்பத்தில் கதை நகர்வதும் திருப்பம் கொள்வதுமாக இருக்கிறது. அதுவே அவரது பலம் என நினைக்கிறேன்.

பத்து செகண்டுக்கு மேல் ஒரு காட்சி ஒரு இடத்தில் தொடர்வதில்லை இப்படி ஒன்றை கொள்கையாக வைத்திருப்பார் என தோன்றுகிறது. பத்து செகண்டுக்கு மேல் வருபவை பாஸ்ட் பார்வேடில் வருகிறது. பரபரவென்று ஓடி ஒரு இடத்தில் நிற்கும்போது ஏன் அவர் அங்கு வந்தார், ஏன் இந்த வசனம் இங்கு வந்திருக்கிறது என்று யோசிப்பதற்குள் காட்சி முடிந்து அடுத்த காட்சி வந்துவிடுகிறது. கொஞ்சம் தத்தியாக இருப்பவர்களுக்கு இந்த படம் புரியாது. டிவியில் சூர்யாவின் அடுத்தப்படம் வரும்போது சி3யை போடுவார்கள். அப்போது இரண்டு முறைக்கு மேல் பார்த்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

சிங்கம் 2வில் வரும் ஹன்சிகா, இலங்கையில் இருந்து வரும் வில்லனும் போல சி3யில் ஸ்ருதியும், மும்பையிலிருந்து வரும் வில்ல்னைச் சொல்லலாம். அங்கே தெனாப்பிரிக்கா என்றால் இங்கே ஆஸ்திரேலியா. அங்கே இல்லாத ஒன்று ராதிகா பாத்திரம். வரும் கொஞ்ச நேரத்தில் நம்மை நிமிர செய்துவிடுகிறார். எத்தனைப் பேர் இருந்தாலும் ஒருவர்தான் படம் முழுவதும் இருக்கிறார். ஆம் சூர்யாதான். ஒன்று நடக்கிறார் அல்லது ஓடுகிறார், அல்லது காரை லாரிவரை எடுத்துக்கொண்டு சுற்று சுற்றென்று சுற்றுகிறார்.

ப்ராக்டிகல் டிபிகட்டிஸ் எனப்படும் நடைமுறை தவறுகள் எங்கும் கதாநாயகனுக்கு நடப்பதில்லை. இத பார்த்துட்டு எனக்கு போன் செய்யுங்க என்று பெரிய வேட்டைக்கு சென்றுவிடுகிறார். அடுத்தக் காட்சிக்கு அல்லது அடுத்த நகர்வுக்கு அவர் செல்ல அந்த போன்கால் உதவிவிடுகிறது. வாழ்க்கையில் நமக்கு 6.15 வரவேண்டிய ரயில் 6.45க்கு மேல்தான் வருகிறது, கேட்டால் லெவல் கிராசிங் என்கிறார்கள். அது மாதிரி எதுவும் நடப்பதில்லை.

இண்டியன் போலீஸ் என்கிற வார்த்தையை கொண்டு பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார்கள். மற்றப்படி ஜாலியாக பார்த்துக்கொண்டே இருக்கலாம். நான்கு ஐந்து பாகங்கள் வரும் போலதான் காட்சியை முடித்திருக்கிறார்கள். அடுத்து இந்திய போலீஸிலிருந்து சர்வதேச காப்பாக மாறி கிரகம் விட்டு கிரகம் தாவுவார் என நினைக்கிறேன். படம் முடிந்து வெளியே வரும்போது என் மகன் சி4 என்றார். ஏன் என்றேன். அசோகா சின்னத்தில் நான்கு சிங்கம் இருக்குல்ல என்றான்.

சி4க்காக வெயிட்டிங்.

No comments: