Friday, January 6, 2017

கனவுகளின் மீள் திரட்சி


கே.ஜே.அசோக்குமாரின் “சாமத்தில் முனகும் கதவு” சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்

முனைவர். அகிலா கிருஷ்ணமூர்த்தி


சிக்மண்ட் ஃப்ராய்டை புறக்கணித்து, “சாமத்தில் முனகும் கதவு” சிறுகதைத் தொகுப்பிற்குள் பயணிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மிகுந்த தனிமையில், மனதோடு பேசுகிற பேரமைதியின் சலசலப்புதான் கே.ஜே.அசோக்குமாரின் சிறுகதைகள். உளவியல் பகுப்பில் மிக நுட்பமாக உள்ளே சென்றால், அகம் சார்ந்த தன்மைகளை கதைக் கருவாக வைத்திருப்பதை உணரமுடியும்.
(முனைவர். அகிலா கிருஷ்ணமூர்த்தி)

மனதை பிராய்ட் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார். 1. உள் அடி மனம் – இச்சை சார்ந்த தேவைகள் 2, மேல் அடி மனம் (ego) – இவை இரண்டிற்கும் இடையே சமரசம் செய்யும் வேலையைச் செய்கிறது. 3, மேல்நிலை மனம் – மனசாட்சியின் குரலாக அதைத் தடுத்தல் super ego. தொகுப்பில் உள்ள பதினெட்டு கதைகளையும் அகவயமாகப் பார்க்கலாம். அச்சம், பதற்றம், நிராகரிப்புகள், குரூர எண்ணங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், உடலுக்கும் மனதுக்குமான போராட்டங்கள், நிராசைகள், எல்லாமும் நிரம்பிய கனவுகள், அது குறித்த மரண பயம் இவைகளைத்தான் கதைகள் பேசுகின்றன. மனதில் ஒரு  கதை உருவான பிறகு, முடிக்கும்வரை நம்மை அரித்துக் கொண்டே இருக்கும். பிரசவம் போல அது வெளியில் வந்து விழுந்தாக வேண்டும். அதுவரைக்கும் ஒரு படைப்பாளியால் இயல்பாக இருக்க முடியாது. அது சார்ந்த உளவியல் அடிப்படையில் கதைகளுக்கான காரணத்தையும் சூழலையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. சாமத்தில் முனகும் கதவு, வருகை, பிணவாடை, வாசலில் நின்ற உருவம், அவன் போன்ற கதைகள் கனவுகள் ஊடாக கதாபாத்திரத்தின் குணத்தையும், ஆழ்மன வெளியையும் காட்டுகின்றன.


‘சாமத்தில் முனகும் கதவு’ கதையில், ஒற்றை வீடு, அதில் தனியாக வசிக்கும் கூத்தையன், பிடிமானமின்றி எப்போதும் காற்றில் கிர்ருக்… கிர்ருக் என பயம் கொள்ளும் சப்தத்தை எழுப்பும் கதவு. அந்தக் கதவின் ஒலி அச்சத்தில் பழைய நினைவுகளுக்குள் செல்லும் கூத்தையன். வேறு ஒருவருடன் தகாத பழக்கம் இருந்ததாக சந்தேகப்பட்ட கணவனுக்கும், அந்த ஊர் மக்களுக்கும் தன் மரணம்தான் பதில் எனத் தற்கொலை செய்து கொண்ட அவனின் முதல் மனைவி வாசுகி. ஏழ்மையில் அவனை திருமணம் செய்துகொண்ட பவானி. இரண்டாவது மனைவி பவானி எதாவது காரணம் சொல்லி தன் பிறந்த வீட்டுக்கு அடிக்கடி போகக் கூடியவள். பல நேரங்களில் சமாதானப்படுத்தி சைக்கிளில் அழைத்து வருவான். இப்படியாக வாசுகியையும் பவானியையும் ஒப்புமைப்படுத்தி அவர்களின் நினைவுகளுக்குள் நிம்மதியின்றி அந்தக் கதவுபோல் அலைக்கழியும் கூத்தையன். ஒருகட்டத்தில் அந்தக் கதவை தனியாகக் கழட்டி வத்துவிடுகிறான். அந்த அமைதியில் பவானி நினைவு வருகிறது. ஆற்றில் குளித்து பவுடரைப் பூசி அடுக்களைக் கதவை அதே இடத்தில் முறுக்கிவிட்டு சைக்கிளில் கிளம்பி விடுகிறான். அதாவது குழப்பத்தில் இருந்து தெளிவடைகிறான்.

நிறைவேறாத ஆசைகள், எண்ணங்கள் எல்லாம் நம் ஆழ்மனதில்(Sub conscious mind) தேங்கிக் கிடக்கின்றன. பெரும்பாலும் அவைகள்தான் கனவுகளாகின்றன. ஆழ்மன உணர்வு, ஆழ்மனவெழுச்சி என்றும் உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆழ்மனதில் இருக்கக்கூடிய எண்ணங்கள் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக இருக்கக்கூடும். நெகடிவாக இருக்கும் பட்சத்தில் அதை வெற்றிகொள்வதற்கான அல்லது வீழ்த்துவதற்கான உந்துதல் மனோபாவம் ஏற்படுகிறது. ஒரு தனிமனிதனுக்கும் புறச்சூழலுக்குமான ஊடாட்டங்கள், இயலாமை, புறக்கணிப்பால் அடங்கிக் கிடக்கிற உணர்வுகள், கனவுகளாக, வன்முறைத் தூண்டலாக வெளிப்படுகின்றன. அப்படியானக் கதைகள்தான் பிணவாடை மற்றும் அவன் கதைகள்.

‘பிணவாடை’ – பரந்தாமன் மாணிக்கம், சத்யபிரகாஷ் மூர்த்தி – உடல் + மனம். பழைய அடையாளங்களை தொலைக்க முடியாமல் தவிக்கும் மன முரண்களான இரண்டு கதாபாத்திரங்கள். ஆசை நிறைவுறுவதாகக் கருதப்படுகின்ற புனைவு கதைகள்தான் (fantacy stories) புலியை படிமமாகக் கொண்ட ‘வருகை’ எனும் கதையும், ‘கைக்கு எட்டிய வானம்’ கதையும். சங்கர் எனும் சிறுவன். சேற்றில் விளையாடி அப்பாவின் பிரம்படிக்கு பயப்படுகிறான். தவளையோடு பேசுகிறான் – வாரப்பத்திரிகைக்குள் தொலைகிறான் – இறுதியாக புத்தகத்தின் கதகதப்பில் மன அமைதியடைகிறான்.

‘ட்ரேடு’ - குழந்தைகளின் சிறுவயது விளையாட்டுகளை, ரசனைகளை பொசுக்கும் தந்தை. கடைசியில் மகன் நல்ல நிலைமைக்கு வந்தபிறகு முதுமையினால் கண்கள் மங்கி அவனைப் பார்க்க கூட முடியாமல் தவிக்கிறார். அப்பா, மகனின் மெல்லிய உணர்வைப் பேசுகிற கதை. முகங்கள் கதை, அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களின் அக பாவனைகளை சுட்டுகிறது. வாசிப்பு தளத்தில் சிறுகதைக்கான கூறுகளோடு திட்டமாக நகர்த்தப்பட்டிருந்தால் தேர்ந்த கதையாக நிலைத்திருக்கும்.

புற உலகிற்கு பயந்து அக உலகிற்குள் தன்னைப் பதுக்கிக் கொள்கிற அல்லது தற்காத்துக் கொள்கிற (attitude) மனப்போக்குதான் பூனை, எறும்பு, புலி, தவளை என  நமக்கான கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொள்ள முனைகிறது. குழந்தைகள் பொம்மைகளோடு வாழ்வது என்பதே உறவுகளின் புறக்கணிப்பில்தான். அதை மையமாகக் கொண்டு ‘எறும்புடன் ஒரு சனிக்கிழமை’ போன்ற கதைகள் பிரம்மிக்கின்றன. நீண்ட காலத்திற்குப் பிறகு மௌனி, சுந்தரராமசாமி இவர்களின் கதைக் களத்தில் மனம் இறங்கிய ஆயாசவுணர்வு ஏற்படுகிறது.

அதிகப்படியான உவமைகள், கதையின் ஓட்டத்தில் நகர்ந்து தன்னியல்பான அயற்சியை உருவாக்கும். அந்த சிக்கலைத் தவிர்த்து, காமம் சார்ந்த சொற் பிரயோகங்களை அழகியலோடு எடுத்தியம்புகிற உத்தி மேற்கொண்டு, கதைகளில் கதாபாத்திரங்களை மேலும் பேச அனுமதித்திருக்கலாம். கதைகளுக்கான நடை, எழுபது, எண்பதுகளின் நீட்சியாக இருந்தாலும் காட்சிகள், வருணனைகளின் கூறு மொழி, வியப்பில் ஆழ்த்துகிறது.

பெரும்பாலும் புறவய பாதிப்புகள் அகத்தை பாதிக்கின்றன. எவ்விதத் தூண்டலும் இல்லாமல் மனத்தின் செயல்பாடுகள் தானாகக் கிளர்வதில்லை. அந்தவகையில் சமூகத்தின் ஊடுபாவலில் தன்னுணர்வாக முகிழ்த்த இச்சிறுகதைகள் தனிமனித வாழ்வின் தடயங்கள் என உறுதியாகக் கூறலாம். சிறுகதையாசிரியர் கே.ஜே. அசோக்குமார் அவர்கள் எழுத்துலகில் மென்மேலும் படைப்பூக்கம் பெற வாழ்த்துகள்.

No comments: