Thursday, January 5, 2017

காந்தியைப் பிடித்தல்அரிசிக்கடை, மளிகைகடை, பேங்க் போன்ற அன்றாட அல்லது மாத பயன்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் இருந்து வருட ஆரம்பத்தில் எங்கள் வீட்டிற்கு காலண்டர்கள் வந்துவிடும். தினகாலண்டர், மாதக் காலண்டர் என்று இருவகையிலும் அளிப்பார்கள். இந்த ஆண்டு ஒரு தினக்காலண்டர் எனக்காக என் குடும்பத்தார் தனியே எடுத்து வைத்திருந்தார்கள். காந்திப்படம் போட்ட பெரிய காலண்டர் அது. உங்கள் அறையில் மேஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொள்ள எனக்காகவே எடுத்து வைத்தார்கள். வேண்டாம் என்றபோது, உங்களுக்குதான் காந்தி பிடிக்குமே என்று சிரித்தபடி என்னிடமே கொடுத்துவிட்டார்கள். எனக்கு காந்தியை பிடிக்கும் என்பதுசரிதான். மற்றவர்களுக்கு பிடிக்காது என்று எடுத்துக்கொள்வதா? அவர்களுக்கு ஏன் சிரிப்பு வருகிறது? 


மற்றவர்களைவிட அதிகம் பிடிக்கும் என எடுத்துக்கொள்ளலாம். எனக்கு காந்தியை பிடிக்கும் என்பதில் அவர்களுக்கு ஒரு பெருமை இருக்கிறது. காந்தியை அவர்கள் அறிந்ததைவிட சற்று கூடுதலாக அறிந்திருக்கிறேன் என்பது அவர்களின் நினைப்பாக இருக்கலாம்.

ஒருவகையில் காந்தியை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் அதை சொல்வது வெட்கப்படும்படியான விஷயமாக எண்ணிக்கொள்கிறார்கள். தலைவர் என்பவர் வெற்றி பெற்றவராக இருக்கவேண்டும். பெறப்போகும் வெற்றிக்காக துணிச்சலுடன் பேசுபவராக இருக்கவேண்டும். அது மாயாஜல வார்த்தைகள் நிறைந்த முடியவே முடியாத இலக்காகவும் இருக்கலாம். ஆனால் காந்தி தோல்வியடைந்த தலைவர், அவர் எந்தபதவியிலும் இருந்ததில்லை. வெற்றாக பேசி எளியஉடை, வாழ்க்கை என்று வாழ்ந்தவர், ஆகவே அவரை ஏற்றுக்கொண்டால் நமக்கு இருக்கும் படோடாபங்களை இழக்க வேண்டியிருக்கும். முடிந்தவரை அவரை எதிர்ப்பதுதான் சிறந்தது என நினைக்கிறார்கள்.

ஒருமுறை காந்திப்படத்தை முகநூல் ஸ்டேஸில் போட்டபோது ஒருவர் வந்து சாதி வெறியனே என்றார். என்னைதான் சொல்கிறார் என்று நினைத்து கேட்டபோது இல்லை காந்தியை சொல்கிறேன் என்றார். விளக்கம்கேட்டபோது அவர் சொன்னவைகள் எதுவும் அப்படி உண்மையில் இல்லை. அங்கே இங்கே கேட்டவைகளை தொகுத்து செய்தியாக எழுதிக்கொண்டிருப்பவர்களில் அவரும் ஒருவர்.

ஒரு தலைவராக அவர் என்ன செய்தார், அதுவும் எனக்கு, என் சமுதாயத்திற்கு, நான்கொண்ட என் கொள்கைக்கு என்ன செய்தார் என்கிற கேள்வியோடுதான் மக்கள் அவரை பார்க்கிறார்கள். இந்த சமூகத்தின் ஒவ்வொரு கீழ்மைக்கு அவரே காரணம் என நினைக்கிறார்கள். அவர் தலையிடாது இருந்திருந்தால் மேம்மை அடைந்திருக்கும் எனவும் நினைக்கிறார்கள்.

என் நண்பர் ஒருவர்காந்தியோட சத்திய சோதனைய முழுசா படிச்சிட்டேன். நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி அவர் ஒன்னும் பெரிய ஆளுமாதிரி எனக்கு தெரியல' என்றார். உண்மையில் அவரைப்பற்றி நண்பர் படித்திருப்பது அந்த ஒரு புத்தகமாக இருக்கும். உணர்ச்சிப்பிரவாகமாக எழுதப்பட்டிருக்கும் வீரவரலாற்று நூலோ, எதாவது ஒரு கட்டுரையோ, அல்லது சுயஉதவி புத்தகங்களோ எப்படி இருக்குமோ அதை எதிரிப்பார்த்துதான் அதை படித்திருக்க வேண்டும். சவசவஎன்று வெறும் சம்பவங்களை அடுக்கிச் சென்றிருப்பது அவருக்கு இருந்திருக்க வேண்டும். காந்தியிடம் மக்கள் எதிர்ப்பார்ப்பதும் இதுதான். கோபாவேசம் கொண்ட ஒரு தலைவராக இல்லாமல் சொங்கியாக இருக்கும் ஒருவரை தலைவராக ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை.

எதிராளியிடம், சகநண்பர்களிடம், சகஊழியர்களிடம், குடும்பஉறுப்பினர்களிடம் என்று மற்றவர்களுடம் பிணக்கம் கொள்ளும்போது நாம் எவ்வளவு முயற்சித்தும் பொறுமையை கடைப்பிடிக்க முடியாமல் திணறுவதை/கோபப்படுவதை பலமுறை கண்டிருப்போம். ஆனால் காந்தி ஒரு தேசத்தின் முன், மிகப்பெரிய பன்முகம் கொண்ட தேசமக்கள் முன் எவ்வளவு அசாத்தியமான பொறுமையுடன் நடந்திருக்கிறார் என்பதை நாம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை.

மதம் கொண்ட யானையை அடக்க முன்நிற்கும் பாகனைப் போன்று நின்றிருக்கிறார் காந்தி. சுற்றி நிற்கும் மக்கள் முன்னால் கொஞ்சம் சஞ்ஜலப்பட்டு/ வெட்கப்பட்டோ அவர் சற்று சுணங்கினாலும் யானை குத்திக் கொன்றுவிடும் அவரை. அந்த இடத்தில் தான் இருந்தார் காந்தி. அந்த யானையிடமிருந்து மக்களை பாதுகாத்துவிட்டு யானை குத்திக் கொல்லப்பட்டு இறந்தார். (வேறு இயக்கங்களாலும் அவர் கொல்லபட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.)

பொதுவெளியில் இணையத்தில் முக்கிய சண்டைகள் எல்லாமெ காந்தியை முன்னிறுத்தியதாக இருக்கும். அப்படி இல்லா ஒன்றில் இது காந்தி தேசங்க நமக்குள் எதற்கு சண்டை என்று முடித்துவிடுவார்கள். எதிர்களை வெல்வதில் காந்தி எப்போது கடைசியில் வந்துவிடுகிறார்.

2 comments:

Dr B Jambulingam said...

கட்டுரையைப் படித்தேன். மிகவும் யதார்த்தமான நிலையில் அமைந்துள்ளது. காந்தியைப் பற்றிய புரிதலைப் பதிந்துள்ள விதம் அருமை. தி இந்து நாளிதழில் வெளியானமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Dr B Jambulingam said...

கட்டுரையைப் படித்தேன். மிகவும் யதார்த்தமான நிலையில் அமைந்துள்ளது. காந்தியைப் பற்றிய புரிதலைப் பதிந்துள்ள விதம் அருமை. தி இந்து நாளிதழில் வெளியானமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.