Sunday, January 8, 2017

சின்னம்மா பெரியம்மாசின்னம்மா அம்மா ஆவதும், அம்மா பெரியம்மா ஆவதும் மிக இயல்பாக நடக்கப்போகிறது. இந்த இயல்பான மாற்றமாக ஆவதைதான் பொறுக்கமுடியாமல் சங்கடப்படுபவர்கள். கோபப்படுகிறார்கள். விமர்சிக்கிறார்கள். ஏன் கீழ்தரமாக இறங்கிவந்து எதிர்வினையாற்ற வேண்டும். முதலில் அவர்கள் எதிர்ப்பார்த்தது இதுவல்ல. 89ல் நடந்ததுபோல் இரண்டாக, மூன்றாக உடைந்திருக்க வேண்டும். ஒரு தலைமை வேறொருவருக்கு கைமாறும்போது மிகபலமான மோதல்களுடன் அது நிகழவேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் இங்கே நினைத்ததற்கு மாறாக எப்படி முதல் தலைமை இருந்ததோ அதேபோலவே இந்த தலைமையும் இருக்கிறது. அதே போன்ற வழிபடுதல்கள், அடிபணிதல்கள் என எல்லாமும் தொடகிறது.

இந்திய அரசியலில் எங்கு நடக்கவில்லை, காலில் விழுபவர்கள் காட்சி மீண்டும் ஆரம்பித்துவிட்டது, முதுகெலும்பு அற்றவர்களாகிவிட்டார்கள், கேவலமான அரசியல் அநாகரீகம் அரங்கேறுகிறது என்று தினம் ஒரு பேச்சாக சொல்லாடல்கள் பறவை கூட்டம்போல சிதறிப் பறக்கின்றன.

நம் சமூகமனதில் என்ன நிகழ்கிறதோ அதுவே இப்போது நிகழ்கிறது. அடிமட்ட அரசியலில் நடக்கும் அதே தில்லுமுல்லுகள்தான் இந்த உயர்மட்ட அரசியலிலும் நடக்கிறது. எல்லா கட்சிகளிலும் நீக்கமற நடந்துக் கொண்டிருக்கும் அதே அதிகார பகிர்வுகளின் ஒப்பந்த அசிங்கங்கள் இங்கேயும் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆளும் வர்க்கத்திடம் நடக்கும்போது மட்டும் தார்மீக கோபம் வந்துவிடுகிறது. ஏனெனில் அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது. அந்த அதிகாரத்தின் மூலம் பயன்பெறப்போகும் ஒரு குழு கூடவே இருக்கிறது. இன்ன சாதி, இன்ன வகையினர் இன்னென்ன பயன்களை அடையப்போகிறார்கள் என்கிற ஒரு செய்தி அவர்களை கிசுகிசுவாக அடைவதற்கு முன்னமே எதிர்வினையாற்ற தொடங்கியிருப்பார்கள். இதற்கு முந்தைய அனுபவங்கள் அவர்களுக்கு கைக்கொடுத்துக் கொண்டிருக்கும்.

சில அரசியல் நிகழ்வுகள் வரம்புமீறியவையாக இருக்கின்றன. சில தனிமனிதர்களை உலுக்கி எடுத்துவிடுகின்றன. இதுவரை காணத வரம்புமீறல்களும் அவலங்களும் நடக்கும்போது ரத்தம் கொதிக்கவே செய்கிறது. ஆனால் அடிமட்ட தொண்டர்களிடமும், மிக எளிய சாதாரண மனிதர்களிடமும் இதெல்லாம் சகஜமானது என்பது போன்ற விட்டேந்திதனமும் தன்னால் செய்ய எதுவுமில்ல என்கிற நிலையிலுமே இருக்கிறார்கள். அடுத்த வரும் சட்டசபை அல்லது வேறு எந்த சின்ன தேர்தல்களிலும் அதற்கான பெரிய எதிர்வினைகள் நடப்பதேயில்லை. அவலங்கள் சீர்கேடுகள் நடக்கும் சமைத்தில் ஏற்படும் சலசலப்புகள்கூட தேர்தல் சமயத்தில் தோன்றுவது இல்லை. வேறு ஒரு மோசமான கட்சி ஆட்சிக்கு வருவதும் அதை தொடர்ந்து வசைப்படுவதும் நடந்துக் கொண்டேயிருக்கிறது.

அரசியல் மரணங்கள் பெரும் அனுதாபங்களை மக்களிடையே உண்டுபண்ணிவிடுகின்றன. வேறுஎந்த மாநிலத்திலும் இல்லாத சென்டிமெண்ட் பார்வை தமிழக வாக்காளர்களிடம் உண்டு. மோசமாக நடந்துக் கொள்ளும் தலைவர்கள் எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடமுடியும். அந்தவகையில் இந்த நாகரீகமற்ற அரசியல் என்கிற சொற்கள் விரைவில் மாறி தமிழர் ஆட்சி என்று மாறலாம். அப்போது இந்த சாதி என்று தூற்றவும்படலாம். மக்களுக்கு தொடர்ந்து தின்பதற்கு வெறும்வாய் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

No comments: