Tuesday, January 3, 2017

நினைவுப்பறவைஎழுத்துவகைகளில் நாஸ்டல்ஜியா முதன்மையானது. எப்போதும் கால மாற்றத்தை குறித்து கவலைப்படுவதும், அந்த நாட்கள் திரும்பி வாராது என்கிற ஏக்கமும் கொண்ட எழுத்துவகைக்கு ரசிகர்கூட்டம் நிரம்பவே உண்டு. ஏன் நமக்கு அந்தகைய ஏக்கம் தேவையாக இருக்கிறது என்பதை தனியே ஆராய்ச்சி செய்யவேண்டும். நாவல்களின் பிரதான எழுத்தே காலமாற்றத்தை எழுதுவதும் வாழ்ந்த வாழ்வை பின்னோக்கி பார்த்து அதை கொண்டாடுவதும் தான். அதுதவிர கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எல்லாம் ஏக்க எழுத்துக்கள்தான்.


மேலைநாடுகளில் இருக்கும் வெள்ளையர்களுக்கு தின்மையான பன்றி மாட்டுக்கறிகளை உண்பது அவர்களுக்கு எளிதானது. அந்த சீதோஷன நிலைக்கு அந்த வகை உணவுகள்தான் சரியாக இருக்கும். அதேவேளையில் மிகவும் அபாயம் நிறைந்தது. நம் நினைவுகளை மறக்க செய்யும் நம் மூளையை தாக்ககூடிய ஒருவகை கிருமி அதில் உண்டு. உண்டபின் அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் உடனே அதற்கான மாற்றுமருந்தை ஊசியாக செலுத்திக் கொள்வார்கள். நம்மூரிலிருந்து சென்ற ஒரு தமிழர் ஆர்வகோளாறில் கொஞ்சம் அதிகமாகவே அவைகளை உண்டுவிட அடுத்த நாளில் காய்ச்சல் வந்து படித்துவிட்டார். எழுந்தபோது தன் மனைவி மகளை மறந்து தான் யாரென்பதையும் மறந்துவிட்டார். இது நடந்தகதை. அவருக்கு இந்தியாவிற்கு அழைத்துவந்து தொடர் சிகிச்சையின் மூலம் அவரின் கொஞ்சம் நினைவுகளை மீட்க முடிந்தது.

உண்மையில் கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது வேறு எந்த வியாதியைவிடவும் மறதிவியாதி மிகக் கொடியது என தோன்றுகிறது. நினைவுகள் தப்பியஅவரை எப்படி பராமரிப்பது என்பது ஒருபுறமிருக்க, அவரே தன்னை இந்த வாழ்வோடு பிணைத்துக் கொள்ளச் செய்யும் பிரயத்தனங்கள் எப்படியானதாக இருக்கும் என்பதை யோசிக்க ஆச்சரியமாக இருக்கிறது. தன் பெயரின் மேல் இருக்கும் வசிகரத்தை அவர் முதலில் இழந்திருப்பார் என்று நினைக்கிறேன். தன் ஊரின் பெயரில் உள்ள தனிதன்மைகள், தனக்கென பிரத்தியேகமாக இருக்கும் சிலவற்றை அவர் மறந்திருக்ககூடும். தனக்கு பிடித்த உணவு, தனக்கு பிடித்த உடை, தன் உடல், முகம் சார்ந்த அடையாளங்கள் மேல் இருக்கும் விருப்பங்கள். தனக்கு பிடித்த புத்தகமும் அதை முதலில் படித்த நினைவுகள் அவருக்கு மறந்திருக்கலாம். சிநேகம் கொண்டிருந்த தன் வயது மனிதர்களை அவர் மறந்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக தன் ரகசியங்களை அவர் மறந்திருக்கலாம். ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என நினைத்திருக்கும் சிலவற்றை அவர் பகிரங்க படுத்தியிருக்கலாம்.

நினைவை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அது நமக்கானது என்கிற நினைவு. நாமே சிந்தித்து அந்த நினைவை தக்கவைத்திருக்கிறோம் என்கிற நினைவு. பல்வேறு வாழ்க்கை சூழலில் மறதியாலும், வேறு நினைவுகளாலும் அழியாமல் பாதுக்காக்கிறோம் என்கிற நினைவு. இப்படி பலவாறு நம் நினைவுகளை வகுத்துக் கொள்ளமுடியும். ஆனால் இவைகளெல்லாம் நாம் யோசித்து ஒரு நினைவை வைத்திருப்பதில்லை. தன்னியல்பாகவே அது நடந்திருக்கிறது. யாராவது ஒருவர் தன் துல்லிய நினைவை நினைவுகூறும்போது அவர் முகத்தில் தெரியும் பெருமிதம் மற்ற எதையும்விட அதிகமானது.

எண்பது வயதை தாண்டிய என் பெரியப்பா, மிகப்பழைய நினைவுகளைக் கூறும்போது அவர் ஆள்காட்டிவிரல் காற்றில் எழுதும், கண்கள் மேல்நோக்கி சொருகிக்கொள்ளும், முகத்தில் பெருமிதம் பரவும். ஒரு சின்ன நினைவாக நாம் நினைக்க அது அவருக்கு மிகப்பெரியது. ஏனெனில் யாராலும் அந்த இடத்தில் அவருக்கு இணையாக அமரமுடியாது. அதேவயதுடைய மற்றொருவர் அங்கு இருந்தாரென்றால் அவர்கள் இருவர் மட்டும்தான் இந்த உலகத்தில் இருப்பதுபோல ஒரு மாயை உண்டாகியிருக்கும்.

கடந்தகால எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அந்த நினைவு அருமையானதாக இருக்கிறது. தோல்விகளை சந்தித்திருந்தாலும் பாடங்களை பெற்றதாக ஆகிவிட்டிருக்கும். அனுபவம் பெறாத எந்த செயலையும் நாம் கொண்டாடுவதில்லை. அனுபவமாக மாறும் ஒவ்வொன்றையும் நம் நினைவுகளிலிருந்து நாம் நீக்குவதில்லை, அது வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும்.

நினைவுகளை இழக்கும்போது வேறு எதையும் நாம் இழப்பதில்லை நம்மைதான் நாம் இழக்கிறோம். இதுவரை வாழ்ந்த நம்வாழ்க்கையை இழக்கிறோம். இதுவரை சேமித்து வைத்திருந்தவைகளை இழக்கிறோம்.

நினைவு ஒரு பறவை என்று சொல்லலாமா? அது தேவைப்படும்போது பறந்து, நமக்கு தேவையான பகுதிகளை மட்டுமேயாவது பறந்து, இருப்பவைகளை உள்வாங்கிக் கொள்கிறது. ஒரு கழுகு பார்வையாக காட்டைப் பார்த்து தன் இரையை தேடிக்கொள்கிறது பறவை. நமக்கு நினைவுகளும், ஞாபகங்களும் இருக்குவரைதான் நாம். அவைகள் இல்லாதபோது நாம் யாரோ.

No comments: