Wednesday, December 14, 2016

ஆசுபத்திரி



நாம் உள்ளே நுழையும்போது இன்முகத்துடன் வரவேற்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், ஆயாக்கள், வார்ட் பாய்கள் என்று அங்கு வேலை செய்யும் அனைவரும் ஒரே மாதிரியான மனநிலையிலும் உடல்மொழியிலும் இருக்கிறார்கள். அப்படி பயின்றிருக்கிறார்கள். நோயாளிகளின், கூடவருபவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நோயாளிகளின் நோய்க்கு தகுந்தாற்ப்போல் எதிர்வினையாற்றுவதைவிட அவர்களின் முககுறிகளுக்கு மட்டுமே எதிர்வினை செய்கிறார்கள். ஆனால் இது ஒரு பாவனை என்று புரிய அதிக நாட்கள் தேவையிருக்காது. சில காசு அதிக செலவு பிடிக்கும் பெரிய மருத்துவமனைகளைத் தவிர மற்ற சின்ன மருத்துவமனைகள் ஒன்றுபோலதான் இருக்கின்றன.

அரசாங்க மருத்துவமனைகளுக்கு என்று சில நடைமுறைகள் இருக்கும். முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரிய சற்று நேரமாகும். இரண்டு மூன்று முறை வந்தவுடன் நமக்கு அதில் இருக்கும் சூட்சுமம் புரிந்துவிடும். சாதாரண வீட்டுப் பெண்கள் கூட அங்க போய் சீட்டுவாங்கிட்டு வாங்க, அங்கு கீயூல உட்காருங்க, டாக்டருவருவாரு, அவரு சீட்டு தருவாரு, பின்னால இருக்குற இடத்துக்கு போனீங்கன்ன மருந்து தருவாங்க, அப்புறம் இங்க போனீங்கன்னா மத்த டெஸ்டெல்லாம் எடுக்கலாம் என்று சொல்லிவிடுவார்கள். அது மிகச்சரியாக இருக்கும். எந்த மாற்றமும் உடனே நடந்திருக்காது. ஆனால் தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொன்று ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன. அவைகள் தங்களின் நோயாளிகளை பொருத்து தொடர்ந்து நடைமுறைகளை மாற்றிக் கொள்வதாக தெரிகிறது.

என் மனைவியின் கல்லீரல் கல் பிரச்சனைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அட்மிட் செய்ய வேண்டியிருந்தது. நடுத்தரமான மருத்துவமனை. நல்ல இடவசதியும் சீருடைகள் அணிந்த நர்ஸ், வார்டு பாய்கள் இருக்கும் தரமான மருத்துவமனை. நேரடியான பேச்சுகள் மூலம் எங்கு செல்லவேண்டும் என்று தெளிவாக சொல்லிவிடுகிறார்கள். பல்வேறு ஆரம்பகட்ட அலைகழிப்புகள் இல்லை. முதலில் எவ்வளவு முன்பணம் கட்டமுடியுமோ அதை கட்டிவிடலாம். உடனே டார்டர்களும் நர்ஸ்களும் நோயாளி மீதான சோதனைகளை செய்துவிடுகிறார்கள். என்னென்ன டிப்ஸ் ஏற்றவேண்டும் என்பதை குறித்து வேகமாக நம்மை வாங்கி வர செய்துவிடுகிறார்கள். டூவீலர் வைக்கு இடத்தில் காவலுக்கு இருந்த காவலாளி பெரிய குட்மார்னிங் வைத்து வரவேற்றார். எப்ப வண்டி எடுப்பீங்க, எத்தனை நாட்கள் இருப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டார். ஒன்னும் பிரச்சனை இல்லை, பார்த்துகலாம் என்றார். காவலாளி பாவமாக இந்த வயதிலும் மற்றவர்களை கும்பிட வேண்டியிருப்பது சற்று சங்கடமாக இருந்தது. உடனே அவருக்கு அவர் எதிர்பார்க்கும் வேகத்தில் பணத்தை கொடுக்க தோன்றியது. மருத்துவமனை உள்ளேயே கேண்டீன் இருந்தது. ஓரளவிற்கு நல்ல உணவுகளே கிடைத்தன. கொஞ்சம் விலை அதிகம். வந்ததும் அதன் முதலாளி புன்சிரிப்பு சிரித்தார். எந்த நேரம் என்னென்ன கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டே நான் கேட்ட உணவு வகைகளை கொடுத்தார். பார்சல் காபி கேட்டதும் அவரே வந்து போட்டுக் கொடுத்தார்.

தள்ளுபடுக்கையில் வைத்து தள்ளிவந்து சேர்த்த இரண்டு நபர்களும் சார் வாங்க என்றார். வெளியே வந்ததும் டீ காசு கொடுங்க என்றார்கள். தனியார் மருத்துவமனையிலும் இப்படிதான் போலிருக்கு என்று தோன்ற இருபது ரூபாய் எடுத்ததும் (டீ 8ரூ இருவருக்கு சேர்த்து) அவர்களிம் முகங்கள் மாறின, எல்லாமே நாங்கதாங்க, நாங்க தான் எல்லாம் பண்ணணும் என்றார்கள். அடுத்து நோயாளியை கவனிக்க வேண்டும் என்கிற பதைப்பும், அவர்களை சீக்கிரம் அனுப்ப வேண்டும் என்கிற நினைப்பு எதையும் யோசிக்க விடவில்லை. இன்னும் 30 ரூபாய் கொடுத்து அனுப்பிவைத்தேன்.

சற்று நேரத்தில் ஆப்பரேஷன் ஆரம்பிக்க மீண்டும் தள்ளுபடுக்கையுடன் வேறு இருவர் வந்தார்கள். ஒரு கட்டிதத்திலிருந்து மற்ற கட்டிதத்திற்கு தள்ளிக்கொண்டு போனார்கள். போய் சேர்ந்தது கண்சுருக்கி மீண்டும் தனியே அழைத்தார்கள். முன்பே என்று ஆரம்பிக்கும்போதே சார்.. நாங்க வேறசார். இந்த ராத்திரி நேரத்துலயும் செய்ய வேண்டியிருக்கு என ஆரம்பித்தார்கள். நர்ஸ் டாக்டர்கள் எனக்காக காத்திருப்பது நினைக்கும்போது மற்றதை யோசிக்க முடியுமா? உடனே 50 கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.

தொடர்ந்து இருநாட்கள் ஆகிவிட்டதாலோ என்னவோ நர்ஸ்களின் முகங்களின் சலிப்பு தோன்றியது. சீக்கிரம் வாங்கிவர வேண்டி அவசரபடுத்தினார்கள். ஆப்பரேஷன் முடிந்ததும் பொதுவாக எந்த விஷயத்திற்கு அவர்களை அணுக முடிவதில்லை. கோபமும் வெறுப்பும் மட்டுமே வெளிப்பட்டது அவர்களிடம். கொஞ்சம் கூர்ந்து கவனித்தபோது இயல்பாகவே அப்படிதான் இருக்கிறார்கள். வலித்துக்கொண்ட ஒரு பாவனை நாம் முதலில் பார்த்தது.

பொதுவான விவரங்களை தாண்டி கேட்கும் எதற்கு கோபப்பட்டார்கள். அங்கு இருக்கும் நோயாளிகள்/கூடவருபவர்கள் கொடுக்கும் அழுத்தமும் அவர்களிடமிருந்து பெறும் கோபம் தான் நர்ஸ் இன்னபிற நபர்களை பேசவைக்கிறது எனபுரிய ஆரம்பித்தது. நாம் என்ன நினைக்கிறோம் என்பதை முன்பே அறிந்து கொள்ளஆரம்பித்துவிடுகிறார்கள். இதைத்தான் இவர்கள் பேசுவார்கள், இப்போது சலிப்படைய போகிறார்கள் என்பதை முன்பே பல நாட்கள் அங்கு இருந்த அனுபவத்தினால் அறிந்து அதை தடுக்கும் விதமாக அதேபோல் தேவையற்று கோபப்படவும், வெறுப்பை வெளிப்படுத்தவும் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

வேலைமுடிந்ததும் அவர்களை வெளியே தள்ளிவிட்டு புதிய நோயாளிகளை வரவேற்க தயாராகிறார்கள். கேண்டீன் முதலாளி நான் டிஸ்சார்ச் சம்பரி எடுத்துவைத்திருக்கும் என்னை பார்த்தாலும் அங்கே சாப்பிடுவரை என் பக்கம் திரும்பவில்லை. போகும்போது கல்லாவை நோண்டிக் கொண்டிருந்தார். வணக்கம் வைத்த காவலாளி நான் வருவதையும் நோயாளியை அழைத்து வெளியேறுவது கவனித்தாலும் கண்களில் எந்த சலனமும் இல்லாமல் பார்த்துவிட்டு வேறு நபர்களை பார்க்க சென்றார்.

பேங்கிலிருந்து எடுக்க கொடுக்க பணத்தை ஏற்பாடு செய்வதில் பிர்ச்சனைகள் இருந்தன. பல்வேறு சலிப்புகள் தினப்படி நாட்களை நினைத்து மீண்டும் எப்போது செல்வோம் என்று ஏங்க வைத்தது. பில்லில் அறைவாடகை தவறுதலாக குறைவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களுக்கு இதனால் சிறிய அளவு நஷ்டம் தான். அதை கவனித்த மனைவி நீங்கதான் நேர்மையானவராச்சே மாத்தி பணத்த கொடுக்காம வந்துருக்கிங்க என்றார். இறுகிய தாடையோடு மெளனமாக இருந்தேன். வீட்டிற்கு வந்து சமநிலை அடைந்தபோது 'எவ்வளவு முயற்சி பண்ணினாலும் சில நேரங்களில் நாம நேர்மையில்லாத மனிதர்களாகதான் நடந்துக்க முடியும்' என்றேன்.

1 comment:

துளசி கோபால் said...

ஆஸ்பத்திரி, டாக்டர், நர்ஸ், சேவை மனப்பான்மை எல்லாம் மாறிப்போயிருச்சு இப்ப :-(

மக்கள் தொகை அதிகமானதும் புதுப்புது நோய்கள் விதவிதமா வர்றதும் செய்த வேலையையே செஞ்சுக்கிட்டு இருப்பதும் அலுப்பாத்தான் இருக்கணும்.....

உங்க மனைவி இப்ப நலமோடு இருக்கறாங்கதானே?

விசாரித்த்தாகச் சொல்லுங்க.