Sunday, January 1, 2017

வாசகசாலை 2016 இலக்கிய விருதுஎன் கதைகளை தொகுப்பாக வெளியீட்டபோது சில கதைகளை எடுத்துவிட்டு மேலும் நல்லக் கதைகளை எழுதியபின் அவைகளையும் இணைத்து வெளியிட்டிருக்கலாம் என்று நண்பர்களால் சொல்லப்பட்டது. நானும் சற்று குழப்பமாக இருந்தேன். வாசகசாலையின் கார்த்திக் போன் செய்தபோது தவறுதலாக சொல்லப்பட்டிருக்கலாம் என்றுகூட நினைத்தேன். ஆம் வாசகசாலை அமைப்பின் சிறந்த சிறுகதை தொகுப்பாக என் சாமத்தில் முனகும் கதவு தேர்வு செய்யப்பட்டிருந்தது. என் தொகுப்பின் மீது நம்பிக்கை கொள்ள முடிந்தது. ஒரேபாணி கதைகளாக இல்லாமல் சில சோதனை முயற்சிகளும் புதிய பாணி கதைகளும் கொண்ட இந்த தொகுப்பு நான் விரும்பும்படியே அமைந்திருக்கிறது.
 


23 டிசம்பர் இரவு சென்னை கிளம்பும்வரை ஆர்வமற்றே இருந்தேன். சென்னை வந்தால் நுங்கபாக்கத்தில் எப்போதும் தங்கும் விடுதிக்கு போன் செய்து சொல்லியிருந்தேன். கீழே இறங்கி தி இந்துவை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்றேன். தமிழ் இந்துவில் எப்போதும் வரும் இலக்கிய செய்திகள் ஆர்வமூட்டுவை. கொஞ்ச நேரம் படித்துவிட்டு சாப்பிட்டு மதியமே கிளம்பி விழாவிற்கு சென்றால் நன்றாக இருக்கும் என நினைத்திருந்தேன். எட்டாம் பக்கத்தை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் தொடுகறி பகுதியில் வாசகசாலையில் விருது பெறுவர்களைப் பற்றியும் அவர்களின் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. புகைப்படங்கள் வெளியிட்டு கவுரவப்படுத்துவது மகிழ்ச்சிதானே. உடனே போன் செய்து என் மனைவிக்கு கூறியதும் சோகமான புகைப்படம் போட்டுவிட்டதாக ஆதங்கப்பட்டாள். கொஞ்ச நேர தூக்கத்திற்குபின் மதியம் ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு கிளம்பும்போது மணி நாலாகியிருந்தது. திநகர் டிரைனில் போய் அங்கிருந்து ஆட்டோ பிடித்து சென்றபோது சரியாக இருந்தது.
 
விருது பெறுபவர்களில் தஞ்சாவூர் கவிராயர் மட்டும் வந்திருந்தார். மற்றவர்களும் பார்வையாளர்களும் மெதுவாக வந்துக் கொண்டிருந்தார்கள். பொதுவாக இலக்கிய விழாக்கள் 5 மணி என்றால் 6 மணிக்குதான் தொடங்கும் என்று எல்லா பார்வையாளர்களும் நினைத்துக் கொள்கிறார்கள் என தோன்றுகிறது. எஸ்ராவும் பா.ரஞ்சித்தும் வந்தார்கள். ஆறுமணிக்கு பாரதியார் பாடிய நல்ல தமிழ்பாடல்களை மேடையில் பாடினார் (அவர் பெயர் நினைவில்லை). தூயன், ஸ்டாலின் சரவணன், சுரேஷ் மான்யா, புலியூர் முருகேசன் என்று நண்பர்கள் வந்துக்கொண்டிருந்தார்கள். தொகுப்பாளராக செலினா தொடங்க விழா ஆரம்பமானது. எஸ்ராவையும் பா.ரஞ்சித்தையும் மேடையில் அழைத்துவிட்டு விருது பெறும் ஒவ்வொரு நால்வரையும் மேடைக்கு அழைத்தார். நான் வந்தபோது பேசிக்கொண்டிருந்த எஸ்ரா திரும்பி தலையசைத்து என்னை வரவேற்றார். அதை தொடர பா.ரஞ்சித்து, கதிர்பாரதியும் தலையசைத்து கைகுழுக்கினார்கள். இருநாட்கள் முன்புதான் அவர் வலைதளத்தில் தமிழ் சிறுகதையின் 10 முகங்கள் என்று என் பெயரையும் சொல்லியிருந்தார். அவர் என்னை கவனிக்கிறார் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது. அத்தோடு நினைவுவைத்து அழைத்தது பெரும் மகிழ்வாக இருந்தது.
 
வரவேற்புரையை விஷால் ராஜாவும், துவக்கவுரையை மனோஜும் செய்தார்கள். வாழ்த்துரையை கவிதா பாரதி வழங்கினார். அனைவருமே சிறப்பாக பேசினார்கள். குறிப்பாக கவிதா பாரதி அவர் பேசும்போது உணர்ச்சி தெறித்தது. தஞ்சை ப்ரகாஷ் எழுதிய மிஷன் தெரு குறுநாவல் வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. எஸ்ரா வெளியிட பா.ரஞ்சித் பெற்றுக்கொண்டார். அதன் பின் ஆறு நண்பர்களுக்கு இருவரும் புத்தகங்களை வெளியீட்டார்கள்.
வாசகசாலையில் ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தில் வெளியாகியிருந்த சிறுகதைகளை விவாதித்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் என்று நான்கு வகைக்கும் வாசகர்களே தேர்ந்தெடுத்திருந்தார்கள். சிறுகதை தொகுப்பை ஜெயச்சந்திர ஹாஸ்மி தேர்வு செய்திருந்தார். அதற்கு முன்னதாக கமலி பன்னீர்செல்வம் என் தொகுப்பை பரிந்துரை செய்திருந்தார். கவிதைக்கு கதிர் பாரதியையும், கட்டுரைக்கு தஞ்சாவூர் கவிராயரும், நாவலுக்கு குணா.கவியழகனும் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள்.

தேர்வு செய்த வாசகர்கள் தன் தேர்வைப்பற்றி பேசியும் விருது பெற்றவர்கள் ஏற்புரையை வழங்கவும் செய்தார்கள். என் முறை வந்த போது நான் பதற்றமடைந்திருந்தேன். தேவையற்ற பதற்றம்தான் ஆனாலும் நினைத்தவைகளை பேசாமல் குறைவாக பேசி முடித்தேன். அடுத்த நாள் பேசிய உமாசக்தி சுருக்கமாக அழகாக பேசினீர்கள் என்றார். இன்னும் சற்று விரிவாக நான் நினைத்தவைகளை பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

தஞ்சாவூர் கவிராயர் வாசிப்பின் அனுபவத்தை பேசினார். கதிர் பாரதி ஆனந்தியின் பொருட்டு தாளப்பறக்கும் தட்டான்கள் என்கிற கவிதை தொகுப்பு பெறும் இரண்டாவது பரிசு என்றார் (முதல்: சுஜாதாவிருது). குணாவிற்கு பதிலாக அகரமுதல்வன் பெற்றுக்கொண்டு பேசினார். ஈழத்தில் எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும், இனி நாங்கள் தான் ஈழஇலக்கியத்தை முன்னெடுத்து செல்வோம் என ஒரு சின்ன பட்டியலை அளித்தார்.

பேசஅழைக்க மறதியாக என்னை விட்டிருந்தார்கள். அகரமுதல்வன் நினைவூட்ட நான் பேசினேன். என் இலக்கிய பயணத்தை சிறியதாக எடுத்துப்பேசி விருது பெற்றதன் மகிழ்வை தெரிவித்து நன்றி கூறினேன். பின் பா.ரஞ்சித்து, எஸ்ராவும் பேசினார்கள். ரஞ்சித் இலக்கிய சினிமா உறவுகளை பேசினார். எஸ்ரா சில முக்கிய புத்தகங்கள் கண்டுக்கொள்ள படாததும் அவைகளின் அவசியமும் வாசிப்பின் மனநிலைகளையும் பேசினார். விழா இனிதே நிறைவுற்றது. எல்லோரு கைகுழுக்கி வாழ்த்துக்களை பரிமாறி விடைப்பெற்றுக்கொண்டோம். வாசகசாலை கார்த்திகேயன் என் வண்டி நேரத்தை நினைவூட்டினார். அவசரமாக அனைவருக்கும் நன்றிகூறி விடைப்பெற்று கிளம்பினேன்.

எழுதுவது மாரத்தான் ஓட்டப்பந்தயம் போல, அதை நிறுத்தமுடியாது, ஆனால் சற்று இளைப்பாற முடியும். விருது அப்படியான ஒரு இலைப்பாறல்தான் என நினைக்கிறேன். உடலில், மனதின், ஆன்மாவின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள அது பயன்படும். பஸ், ஆட்டோ என்று மாறிமாறி கோயம்பேடு ஆம்னிபஸ் நிலையம்வந்து வண்டியை பிடிக்குவரை நினைத்துக்கொண்டே வந்தேன்.

No comments: