Monday, January 11, 2016

ஏறுதழுவுதல்





கடைசியாக ஜல்லிகட்டுக்கு (ஏறுதழுவுதல்) அனுமதி கிடைத்துவிட்டது. ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு எந்த கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்காமல் அதற்கு ஆதரவு தெரிவிப்பது மக்கள் ஜல்லிக்கட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. இந்த புரிதல் வருவதற்கு வருடங்கள் தேவைப்பட்டன என்று சொன்னால் மிகையில்லை.


வாடிவாசல் என்று ஒரு நாவலை சி.சு. செல்லப்பா எழுதியிருக்கிறார். தன் தந்தையை குத்திக் கொன்ற மாட்டை அதே ஜல்லிக்கட்டில் அவரது மகன் வந்து பலிதீர்ப்பதுதான் கதை. இப்படி நேரடியாக வார்த்தைகளில் எழுதிப் படிக்கும்போது குரூர மனம் வெளிப்படுவதாக தோன்றினாலும் உண்மையில், அந்த நாவலில் எந்த பழிவாங்கும் உணர்ச்சிகள் இல்லாமல் தன் கடமையை செய்ய வந்ததாக நினைத்துக் கொள்ளும் ஒருவனது அகம் வெளிப்படும் நாவலாககதான் இருக்கும்.

Tuesday, January 5, 2016

ஓராண்டு முடிவில்




முன்பே இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தாலும் 2015 ஜனவரியில் இருந்துதான் தொடர்ந்து எழுதுவது என்கிற கொள்கையை எடுக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் எழுதுவது என்பது திட்டம். ஆனால் அப்படி முழுமையாக நடைபெறவில்லை என்றாலும் 135 போஸ்ட்கள் எழுதியிருக்கிறேன். சனி, ஞாயிறு தவிர தினம் ஒன்று என்று வைத்தால் சராசரியாக 250 எழுதியிருக்க வேண்டும். அதனினும் பாதியாக எழுதியிருந்தாலும் திருப்தியாக இருந்தது. எழுதும் ஒவ்வொரு நாளும் ஒரு மனநிறைவை அடைந்தேன். முகம் தெரியா ஒரு மனிதருக்கு செய்த உதவியால் அடைந்த மகிழ்ச்சி போல நிறைவாக இருந்தது அந்த நாள்.
சில நாட்களில் எழுத முடியாமல் போனதற்கு தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக எழுதக்கூடாது என்று கட்டுப்பாடு கொண்டதால்தான். ஒரே மாதிரியான உள்ளடக்கம் இருக்கும்போது தினமும் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே எனக்கு நானே அரசியல், குடும்பம், இலக்கியம், சினிமா என்று ஒவ்வொரு புது பகுதியிலிருந்து எழுதவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.