Monday, January 11, 2016

ஏறுதழுவுதல்





கடைசியாக ஜல்லிகட்டுக்கு (ஏறுதழுவுதல்) அனுமதி கிடைத்துவிட்டது. ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு எந்த கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்காமல் அதற்கு ஆதரவு தெரிவிப்பது மக்கள் ஜல்லிக்கட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. இந்த புரிதல் வருவதற்கு வருடங்கள் தேவைப்பட்டன என்று சொன்னால் மிகையில்லை.


வாடிவாசல் என்று ஒரு நாவலை சி.சு. செல்லப்பா எழுதியிருக்கிறார். தன் தந்தையை குத்திக் கொன்ற மாட்டை அதே ஜல்லிக்கட்டில் அவரது மகன் வந்து பலிதீர்ப்பதுதான் கதை. இப்படி நேரடியாக வார்த்தைகளில் எழுதிப் படிக்கும்போது குரூர மனம் வெளிப்படுவதாக தோன்றினாலும் உண்மையில், அந்த நாவலில் எந்த பழிவாங்கும் உணர்ச்சிகள் இல்லாமல் தன் கடமையை செய்ய வந்ததாக நினைத்துக் கொள்ளும் ஒருவனது அகம் வெளிப்படும் நாவலாககதான் இருக்கும்.

ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டிதனமாக பார்க்கப்படுவது இன்றும் இருந்தாலும், பாலிற்காக மாடு வைத்திருப்பவர்கள், ஜல்லிக்கட்டிற்காக மாடு வளர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் மாட்டை நேசிக்காமல் இருக்க முடியாது. மாட்டின் ஒவ்வொரு செயலும் அதற்கான காரணங்களும் மாடு வளர்ப்பவர்களுக்கு அத்துபடியாக இருக்கும். வீட்டில் வளர்க்கப்படும் நாயைவிட மாட்டை அதிக பாசத்தோடு அன்போடு வளர்ப்பார்கள். என் சிறுவயதில் என் வீட்டு பக்கத்து வீட்டில் மாடு வளர்ப்பவகளும் அதற்காக அவர்கள் தங்கள் முழு சொத்தையும் இழக்க தயாராக இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.
மாட்டை வளர்ப்பவர்களால் தான் ஜல்லிக்கட்டை புரிந்துக் கொள்ள முடியும். மாடுடன் தங்கள் பெரும்பகுதியை கழிப்பவர்கள் அதை அடக்கவும் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கவும் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். பசுமாட்டை வளர்ப்பதும் காளை மாட்டை வளர்ப்பது வேறுவேறானது. காளை மாட்டை மிக ஆக்ரோஷமான மாடாவும் அதே வேளையில் என் கட்டுப்பாட்டில் அது இருக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரிவிக்கும் ஒரு நிகழ்வாகத்தான் ஜல்லிக்கட்டை பார்க்க வேண்டும்.
மனிதனுக்கும் மாட்டிற்கு நடக்கும் சின்ன போராட்ட‌ம்தான் ஜல்லிக்கட்டு. ஆனால் உண்மையில் தங்கள் வாழ்நாளில் ஒரு மாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்  போராட்டமும்கூட. மனிதன் மாடு இரண்டிற்கு இடையில் இருக்கும் புரிதல்களை வளர்ப்பதற்குதான் தொடர்ந்து இருவரும் முயற்சிக்கிறார்கள் என்று சொல்லலாம். அதன் தொடர்ச்சிதான் இந்த ஜல்லிக்கட்டும். ஆனால் ஜல்லிக்கட்டை தடை செய்வதில் அரசுக்கும், தனியாளர்களுக்கும் இருக்கும் ஆர்வம் நமக்கு தெரிந்ததுதான்.
ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் காளை அந்த பகுதியில் இருக்கும் மாடுகளுக்கு பூச்சிக்காளையாக மாறுகிறது. அதன் வீரியம் தொடர்ந்து அந்த பகுதியில் நிலைநாட்டப்படுகிறது. தொடர்ந்து நல்ல ரகமான மாடுகள் அடுத்தடுத்த உற்பத்தியாகி வெளிவரும். இந்த ஜல்லிக்கட்டை நிறுத்துவதால் இது தடைப்படுவதுடன் சிறந்த காளைகளை வெளிநாட்டிலிருந்து பெறப்படும் அத்தோடு அதற்கு தேவையான தீவனமும் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.
ஜல்லிக்கட்டு வெறும் வீரவிளையாட்டு மட்டுமல்ல சிறந்த காளைகளை மாடுகளை எதிர்காலத்தில் உருவாக்கவும் என்கிற புரிந்தல் வரும் இடத்தில் ஜல்லிக்கட்டின் தடை மக்களிடம் செல்லுபடியாகாது.

No comments: