Tuesday, January 5, 2016

ஓராண்டு முடிவில்
முன்பே இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தாலும் 2015 ஜனவரியில் இருந்துதான் தொடர்ந்து எழுதுவது என்கிற கொள்கையை எடுக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் எழுதுவது என்பது திட்டம். ஆனால் அப்படி முழுமையாக நடைபெறவில்லை என்றாலும் 135 போஸ்ட்கள் எழுதியிருக்கிறேன். சனி, ஞாயிறு தவிர தினம் ஒன்று என்று வைத்தால் சராசரியாக 250 எழுதியிருக்க வேண்டும். அதனினும் பாதியாக எழுதியிருந்தாலும் திருப்தியாக இருந்தது. எழுதும் ஒவ்வொரு நாளும் ஒரு மனநிறைவை அடைந்தேன். முகம் தெரியா ஒரு மனிதருக்கு செய்த உதவியால் அடைந்த மகிழ்ச்சி போல நிறைவாக இருந்தது அந்த நாள்.
சில நாட்களில் எழுத முடியாமல் போனதற்கு தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக எழுதக்கூடாது என்று கட்டுப்பாடு கொண்டதால்தான். ஒரே மாதிரியான உள்ளடக்கம் இருக்கும்போது தினமும் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே எனக்கு நானே அரசியல், குடும்பம், இலக்கியம், சினிமா என்று ஒவ்வொரு புது பகுதியிலிருந்து எழுதவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

நிறைய புது ந‌ண்பர்களை இணையத்தில் எழுதுவதன் மூலம் பெற்றிருக்கிறேன். தொடர்ந்து அவர்கள் எழுதும் ஒவ்வொரு சமயமும் படித்து குறைகளை நிறைகளை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். வேறு ஒரு சமயமாக இருந்தால் நாம் கோபப்பட்டிருப்போம், ஆனால் ஒரு இனிய அனுபவமாகவே இருந்தது. உள்டப்பியில் சிலர் வந்து பாராட்டுவதும் கோபப்படுவதும் நடந்துக் கொண்டேயிருந்தது.
சில வேடிக்கைகள்கூட நடக்கும். வலைதளத்தில் அதிக பார்வையாளர்களை கொண்டிருக்கும் நாட்களில் குறைந்த லைக், கமெண்டுகள் வருவதும், குறைந்த பார்வையாளர்களை கொண்டிருக்கும் நாட்களில் அதிக லைக் கமெண்டுகள் (அந்த பக்கத்தை தெரிவிக்கும்) முகநூலில் கிடைத்திருக்கும். அது ஏன் என்று இன்றுவரை புரியவில்லை. தொடர்ந்து எழுதுவதன் மூலம் வலைதளத்தை/முகநூலை வாசிக்கும் வாசகர்களின் மனநிலைகளை புரிந்துக் கொள்ளமுடிகிறது.
வாசகர்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள், எதை அதிக கவனம் கொள்கிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ள உதவியது என்று சொல்லலாம். பொதுவாக நடப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த கட்டுரைகளுக்கு உடனடி எதிர்வினை கிடைக்கிறது. அதை முழுமையாக புரிந்துக் கொண்டார்களா இல்லையா என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. ஒரு விஷயத்திற்கு சட்டென இரு பிரிவாக பிரிந்து விடுகிறார்கள். சரி, தவறு; முற்போக்கு, இந்துத்துவா, இப்படி பல, உடனே எந்த ஒரு செய்தியையும் இரண்டாக பிரிந்து விடுகிறார்கள்.
உடனே அந்த சம்பந்தமாக வரும் கட்டுரகளை அந்த இரண்டுக்குள் அடைத்துவிட முயல்கிறார்கள். ஏன் இரண்டும் அல்லாத, அல்லது இரண்டுமே சேர்ந்த ஒரே அலகாக பார்க்க முடியவில்லை என்பதை ஒவ்வொரு கட்டுரையாளனும் கேட்டுக் கொள்ளவேண்டும். சிலவிஷயங்களை பேச‌வே முடியாத நிலைதான் இன்றும் இருக்கிறது. மீன் தண்ணீரில் வாழ்வது மாதிரி நாம் எழுத்துகளில் வாழ்கிறோம் இந்த இணையத்தில். ப்ரவுனியன் தியரியில் போன்றே இணையம் முழுவதும் எழுத்துதான் நம்மை ஆட்சி செய்கிறது. ஒரு குடுவையில் இருக்கின்ற வெற்றிட மாலிக்கூல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அதன் சுவற்றில் மோதி அங்குமிங்கும் வெவேறு கோணங்களில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல கருத்துக்களை தாங்கி நிற்கும் எழுத்துக்கள் இணையமுழுவதும் எல்லா கோணத்திலும் பரவி ஓடி வருகின்றன.
ஒவ்வொரு நாளும் புது வாசகரை பெறும் மகிழ்ச்சிக்காக தினமும் எழுதலாம் என்று தோன்றுகிறது. சிலர் விலகுவதும் சிலர் வருவதும் நடந்துக் கொண்டிருப்பது ஆற்றுநீரின் விடா பயணம்போலதான். இந்த ஓராண்டை மறக்க முடியாது, பயணத்தின் முதலடி என்பதால். கூட பயணிக்கும் நண்பர்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.


No comments: