Monday, August 31, 2015

பாண்டம் - பிசாசு

 உண்மை சம்பவத்திற்கு பழிவாங்குதல் ஒன்று நடப்பதுபோல கதை சித்தரிப்பது ஒருவகை கதைகூறல் முறை. சம்பவம் மட்டுமே உண்மை, பழிவாங்குவது நடந்ததுபோல‌ கதைசொல்வது. கதைவிடுவது என்று சொல்லலாம். ஆனால் உண்மைக்கு சமமாக இதுவும் நடந்துள்ளது என்று சொல்வது அத்தனை எளிதானது அல்ல. சம்பவங்களும் சொல்லும்முறையும் மிக அழகாக உண்மையோடு ஒத்துபோகவேண்டும். 26/11/08 அன்று மும்பையில் தாக்குதல் நடந்தது. அதற்கு முக்கிய தீவிரவாதிகள் 3 பேர் இந்தியாவர சிலர் பாகிஸ்தானிலிருந்து அவர்களுக்கு சாடலைட் போனில் கட்டளைகளை பிறப்பித்து 166 பேர்களை சுட்டுக்கொன்றார்கள். 300க்கு மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
இந்த சம்பவம் நடந்து அதன் குற்றவாளியான கசாப் தூக்கிலிடப்பட்டான். அதன் பின்னனியில் உள்ளவர்கள் இன்றும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அந்த குற்றவாளிகள் தகுந்த பாதுகாப்போடுதான் இருக்கிறார்கள். ஹெட்லி எனப்படுபவன் அமெரிக்காவிலும், ஹபீஸ் போன்றவர்கள் பாக்.கிலும் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

விபத்து

இன்றுகாலை ஒகேனகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் இறந்த செய்தியை படித்துவிட்டு அலுவலகம் வந்துக் கொண்டிருந்த வழியில் சற்று நேரத்திற்கு முன்னால்தான் மூன்று சக்கர மினிடெம்போ லாரியும் ஒரு மோட்டார் பைக்கு மோதிக்கொண்டிருந்தன லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை வைத்து பார்க்க என்ன நடந்தது என்பதை கணிக்க முடிந்தது. மினிடெம்போவிற்கு பெரிய சேதம் இல்லை. அதன் டூல்பாக் மட்டும் லேசாக ந‌சுங்கி இருந்தது. ஆனால் பைக்கில் முன்சக்கரம் இரண்டாக மடிந்துவிட்டது, அதில் வந்தவருக்கு ஊமைஅடி. லேசாக அழுது கொண்டிருந்தவரை ஓரமாக உட்கார வைத்திருந்தார்கள்.
விபத்துகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் நம் கவனத்திற்கு வந்து கொண்டேதான் இருக்கின்றன. சில நம் கவனத்திற்கு வராததற்கு காரணம், அது அத்தனை கொடூரம் இல்லாததாக இருக்கும். கொடூரங்கள் நமக்கு பிடித்திருக்கின்றன. கொடூரமான காட்சிகளை டிவியில் பார்ப்பதும், சாலை விபத்துகளின் தொகுப்புகளை யூடியூபில் பார்ப்பதும் நம் மனதில் உள்ள கொடூர ஆசைகளை திருப்திபடுத்ததான்.

Friday, August 28, 2015

புகை, குடி, குட்கா

எம்ஜியார் ஒரு முறை ரஜினியின் படங்களைப் பார்த்து கோபம் கொண்டு என்னையா இவன் இப்படியெல்லாம் நடிக்கிறான் என்று சிகரெட் குடி என்று நடிக்கும் அவரின் நடிப்பைப் பற்றி பேசி ஆதங்கப்பட்டதாக சொல்வதுண்டு. என் வீட்டு பக்கத்தில் இரு வீடு தள்ளி இருந்த மாமா அவரின் இருசக்கர வாகனத்தின் பாக்ஸ் பகுதிகளில் ரஜினியின் படம் இருக்கும். சிகரெட் குடித்த புகையின் நடுவில் அவர் முகம் தெரிவது போலிருக்கும். அந்த ஸ்டைல் அவரை மிகவும் கவர்ந்து இருந்தது. புகையின் நடுவே ஒரு மனிதன் நிற்பதுபோலிருப்பது என்னதான் ஸ்டைலாக தெரிந்தாலும் நிஜத்தில் அப்படி ஒருவர் நிற்கும் இடத்தில் சிகரெட் குடிக்காதவர் நிற்கமுடியாது. நாற்றம் குடலைப் பிறட்டும். ஆனால் சிகரெட் குடிப்பவர் முதலில் அந்த நாற்றத்தைதான் வெல்ல வேண்டும். இந்த நாத்தத எப்படிங்க குடிப்பாங்க என்று சிகரெட் வந்தபோது பேசப்பட்டது. ஆனால் தொடர்ந்து பல்வேறு விளம்பரங்களின் மூலம் அது நாற்றம் அல்லது வாசனை என நிறுவப்பட்டது. பின்பு அது ஆண்களின் ஆண்மை என்று நிறுவப்பட்டது. சிகரெட் குடிக்காத ஒரு மனிதன் தன் இளமையை, தன் இளமை தரும் உற்சாக எண்ணங்களை இழக்கிறான் என்று கற்பிக்கப்பட்டது.

Tuesday, August 25, 2015

எம்எஸ்வியும் இசையும்

எம்எஸ்வி பாடல்கள் எப்போதும் சட்டென ஆரம்பித்துவிடும். பொதுவாகவே அவரின் பாடல்கள் பேச்சுபோல‌வோ அல்லது கவிதை வாசிப்பதுபோலவேதான் இருக்கின்றன‌. பாடல் ஆரம்பித்ததும் அது என்ன வகைப்பாடல் என்று தெரிந்துவிடுகிறது ஆகவே அவற்றிற்கு தேவையான முன்னிட்டு இசை தேவையில்லாமல் இருக்கிறது. பொதுவாக‌ அவரின் பாடல்கள் அது பாடல்கள் என்கிற பிரக்ஞையை அளிப்பதில்லை. கூர்ந்து கவனிக்கும்போது மட்டுமே இது புலப்படும். இளையராஜா, ரகுமான் பாடல்களின் முதலில் கொஞ்சம் இசை துணுக்குகள் வந்தே பாடல் ஆரம்பிக்கும். இவைகள் பாடல்கள் எனகிற பிரக்ஞையோடு அவற்றை கவனிக்க வேண்டியிருக்கிறது.Wednesday, August 19, 2015

கீழே நிற்கும் மனிதர்கள்

நம்மிலும் குறைந்த நிலையில் உள்ள மனிதர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை பொறுத்து நாம் எந்த மாதிரியான குணமுடையவர் என்பதை காட்டிக் கொடுத்துவிடும் என்பார்கள். பொருளாதார நிலையில் நம்மைவிட குறைந்தவர்கள், நம்மைவிட குறைந்த பதவியில் உள்ளவர்கள், நம்மைவிட விலை குறைந்த உடைகளை அணிபவர்கள், நம்மைவிட கறுப்பானவர்கள், நம் சாதியைவிட குறைந்த படிநிலையிலுள்ள‌ சாதியை உடைவர்கள் என்று பலரை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருப்போம், அவர்களை நாம் எப்போது ஒரு மாற்று குறைந்தவர்களாகவே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணராமல் இருக்கிறோமோ அல்லது அப்படி நிஜமாகவே நடிக்கிறோமா என்பதை சொல்லமுடியாது. அதே எல்லாவகையான மேல்படியில் உள்ளவர்களை சந்திக்கும்போது மனதில் வைது கொண்டிருப்பதையும் சொல்லிவிடமுடியாது. ஆனால் ஒரு பெரிய நிகழ்வு ஒன்று, இந்த சூழலுக்கு எதிரான அதாவது நம் சமூகம் அது குறித்து முன்பே கட்டமைத்து வைத்திருக்கும் ஒன்றிற்கு எதிராக, நடக்கும் போது நாம் சர்வநிச்சயமாக செய்வது 'இது மாதிரி உலகத்துல இன்னும் நடந்துகிட்டுதான் இருக்குதா, என்ன உலகம் இது' என்பதாகத்தான் இருக்கும்.

Tuesday, August 18, 2015

முஸல்மான்

முஸ்லீம் மக்களில் சிறுவியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரையான மக்களை பார்க்கமுடியும். அவர்களின் பொதுவாக வேலைக்கு செல்பவர்களை காண்பது சற்று கடினம் தான். ஒரு பெரிய அலுவலகத்தில் 200 பேர் இருந்தால் அவர்கள் 5 பேர் இருந்தாலே அதிகம். ஆனால் கணிசமான கிருஸ்தவர்கள் இருப்பார்கள். உலகம் முழுவது முஸ்லீமகள் பற்றிய பயம் இருந்துக் கொண்டே யிருக்கிறது. அவர்களால் நமக்கு எதுவும் நேரக்கூடும் என்கிற பயம். வீடுகள், கடைகள் வாடகைக்கு அவர்களுக்கு விடுவதை சற்று யோசிக்கதான் செய்கிறார்கள்.

Tuesday, August 11, 2015

இரவு - ஜெயமோகன்

இரவும் பகலும் வேறுவேறு உலகங்கள் என்கிற எண்ணம் ஏன் வருகிறது. பகலில் இருக்கும் உலகமும் இரவில் தெரியும் உலகமும் முற்றிலும் வேறாக இருப்பதுதான். அது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே உலகம் இரவில் தோன்றும் எண்ணங்கள் பகலில் தோன்றும் எண்ணங்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இரவில் நமக்கு தோன்றும் மென்மையான விஷயங்கள் பகலில் அதே விஷயங்கள் நமக்கு கடினமானதாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. அதே வேளையில் பகலில் நமக்கு தோன்றாத பல்வேறு அகங்காரங்களும் வன்மமும் இரவில்தான் வெளிப்படுகின்றன‌.

Monday, August 3, 2015

பிரா எனும் குறியீடு

ஹோம் அலோன் என்ற படம் என் சிறுவயதில் பார்த்தது. அதில் வரும் சிறுவனின் துடிப்பான செய்கைகளை வேடிக்கையாகச் சொல்லும் படம். சில காரணங்களால் வீட்டில் அவன் அம்மா அப்பாவால் தனியே விட்டு செல்லப்படுகிறான். அவன் வீட்டில் தனியே இருக்கும்போது தன் கற்பனை திறனை பயன்படுத்தி திருடர்களை பிடித்து பெற்றோரின், தெருவாசிகளின் நன்மதிப்பை பெறுவதுதான் கதை. அதில் ஒருகாட்சி வரும் கேம‌ரா பொறுத்திய தன் ரிமோட் காரை அடுத்த வீட்டில் செலுத்தி அங்கு வந்திருக்கும் திருடனை சிறுவன் வேவு பார்ப்பான். திருடன் ஒரு விளையாட்டு கார் ஒன்று வருவதை கண்டு அதை துரத்தி ஓடுவான். அது ஒரு இடத்தில் திரும்பும்போது டேபிளில் இருக்கும் துணிகள் அதன்மீது விழுந்துவிடும். துணிக்குவியலின் மேல் ஒரு பிரா அது இருகண்கள் போல இருக்கும். சிறுவன் ரிமோட் காரை இயக்கும்போது துணிகுவியல் மொத்தமும் மெல்ல திரும்பும். பிராவுடன் அது திரும்பவதை பார்க்க வேடிக்கையாக இருக்கும். அந்த திருடன் திரும்பும்போது அப்படியே நின்றுவிடும் துணிகுவியல். துணிக்குவியலில் ஓளிந்திருக்கும் காரை அவனால் கண்டுபிடிக்க முடியாது, சென்றுவிடுவான். ஆனால் துணிக்குவியலுடன் பிராவை காட்டும்போதெல்லாம் திரையரங்கு சிரிப்பொலியால் அதிரும்.
பதின்பருவத்து சிறுவர் சிறுமியர்களுக்கான படம் ஒன்றில் பிரா ஒன்று இத்தனை வேடிக்கை அளிப்பதை அப்போது நான் நினைத்து பார்க்கவில்லை. வேடிக்கையாக காட்டும்படியாக அது எப்படி சாத்தியமானது என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன். சிறுவனாக இருந்த போது நான் பார்த்த மற்றொரு தமிழ் சினிமாவில் தன் காதலிக்கு ஒரு பிரா வாங்கிவருவார் காதலன். அதை மறைத்து வைத்து ஒரு கோயிலில் வைத்து அவளிடம் கொடுக்க நினைப்பான். காதலி அதை பார்த்து சற்று பயந்து ஓடிப்போக அந்நேரம் அந்த கோவில் குருக்கள் அந்தப்பக்கம் வருவார். மறைக்க நினைக்கும் காதலன் பிராவை கைகளின் நடுவில் வைத்து சாமி கும்பிடுவதுபோல முருகா முருகா என்று கோபுரத்தைப் பார்த்து கைகளை தேய்ப்பார். குருக்கள் திகைத்து நிற்க காதலி தூரத்தில் நின்று வெற்றி சிரிப்பு சிரித்துக் கொண்டிருப்பார், திரையங்கு இப்போதும் சிரிப்பொலியில் அதிர்ந்தது.

Sunday, August 2, 2015

ஓடிப்போனவர்கள்


மின்சார ரயிலில் ஒரு நாள் பயணம் செய்தாலே எத்தனை விதமான காதலர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். விதவிதமான எல்லா வயது காதலர்கள் இருப்பதை காணமுடியும். 15 வயது முதல் 30 வரை என்று சொல்லலாம். திருமணமானவர்களை நாம் எதுவும் சொல்வதில்லை. கண்டதும் காதல், தெய்வீக காதல் போன்று எதாவது இருக்கும் காதலர்கள் இப்படி வெளியே சுற்றுவதில்லை என தோன்றுகிறது. ஆனால் வெளியே சுற்றும் இந்த காதலர்களில் ஒரு பொதுதன்மை உண்டு என்பதை நாம் கவனிக்கமுடியும். குறிப்பிட்ட ஒரே வயதினராக இருப்பார்கள், பொருளாதார முறையில் ஒரே இடத்தில் இருப்பவர்களாக இருப்பார்கள். ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். ஒரே தெருவில், ஒரே சேரியில், ஒரே பேட்டையில் இருப்பவர்களாக இருப்பார்கள். ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள் என்பதை அவர்கள் அணிந்திருக்கும் உடைகளிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக இவர்களை நாம் எதுவும் சொல்வதில்லை. இவர்களை இப்படி சுற்றுவது அவர்களின் சுதந்திரமாகவும், தங்கள் முடிவுகளை தாங்களே எடுத்துக்கொள்ளும் தைரியத்தை பெற்றவர்களாகவும், இவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் நினைத்துக்கொள்கிறோம். எந்த வகையிலும் நாம் இடையூறாக இருப்பதில்லை.

சில ஜோடிகளுக்கு நாம் இடையூறாக இருப்பதாக தோன்றுகிறது. படிக்காத ஏழை மனிதன் ஒரு பணக்கார காதலியுடனும், ஏழைப் பெண் பணக்கார காதலனுடனும், ஒரு வயது வந்த பள்ளி மாணவி/மாணவன் ஒரு சாதாரணமான ஒருவருடனும் இப்படி சிலவர்கள் சென்றால் நாம் கொதித்துப் போகிறோம். இதெல்லாம் எங்கே உருப்பட போகிறது என்கிறோம். இந்திய சூழல் குறித்தும், குடும்ப அமைப்பு குறித்தும் கவலைக் கொள்கிறோம். எதாவது செய்ய வேண்டும் என துடிதுடிக்கிறோம்.