Tuesday, August 18, 2015

முஸல்மான்

முஸ்லீம் மக்களில் சிறுவியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரையான மக்களை பார்க்கமுடியும். அவர்களின் பொதுவாக வேலைக்கு செல்பவர்களை காண்பது சற்று கடினம் தான். ஒரு பெரிய அலுவலகத்தில் 200 பேர் இருந்தால் அவர்கள் 5 பேர் இருந்தாலே அதிகம். ஆனால் கணிசமான கிருஸ்தவர்கள் இருப்பார்கள். உலகம் முழுவது முஸ்லீமகள் பற்றிய பயம் இருந்துக் கொண்டே யிருக்கிறது. அவர்களால் நமக்கு எதுவும் நேரக்கூடும் என்கிற பயம். வீடுகள், கடைகள் வாடகைக்கு அவர்களுக்கு விடுவதை சற்று யோசிக்கதான் செய்கிறார்கள்.


நான் தில்லியில் இருந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துக் கொண்டே இருந்தது. அவற்றிற்கு முஸ்லீம் அமைப்புகள் காரணம் என்று பத்திரிக்கைகளில் வெளியாகிக் கொண்டுதான் இருந்தது.
ஆனால் முஸ்லீம்கள் மீது எந்த கோபமும் வெறுப்பு எழுவில்லை என்பதை அங்கு இருந்தவரை தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். பழங்களை தள்ளுவண்டியில் விற்கும் முஸ்லீமகள், ஆட்டோ ஓட்டும் முஸ்லீம்கள், என்று மக்கள் எதிர்ப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். வெள்ளை அல்லது கருப்பு வண்ண சின்ன வலைதொப்பிகள், மீசை இல்லாமல் தாடி மட்டும் வைத்து அவர்கள் எதிர்படும்போது எந்த பயமும் இல்லாமல் அவர்க‌ளுடன் பேசமுடிந்தது, வழி கேட்க முடிந்தது.
உண்மையில் அந்த முஸ்லீம்கள் ஞாயவான்களாக இருந்தார்கள். மீட்டருக்கு மேல் பணம் கேட்பதில்லை, பழங்களை, ஷாப் கடை பொருட்களை அதிக விலைக்கு விற்றதில்லை. அவர்களின் மதம் தேவைக்கு அதிகம் விற்ககூடாது என்று கட்டளை இட்டுள்ளது ஒரு காரணம் என நினைக்கிறேன்.
புனே, மும்பை, பெங்களூரு நகரங்களில் சந்தித்திருக்கும் இந்த ஆட்டோ, கடைகார முஸ்லீம்கள் பொதுவாக மிக ஞாயவான்களாகவே இருந்தார்கள். நிச்சயம் நம்பி அவர்கள் கடையில் எதையும் வாங்கலாம். புனேயில் என் அலுவலகத்தின் அருகில் ரோட்டில் பழங்களை (பொதுவாக அவர்களில் பழவியாபாரிகள் அதிகம்) விற்கும் இரு முஸ்லீம்கள் அதிக விலைக்கு விற்கவேண்டும் என்கிற எண்ணம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். வாங்கி செல்ல அழைப்பதும் இல்லை, வாங்கும்போது கட்டாயப்படுத்தி நம்மிடம் திணிப்பதும் இல்லை. இதுதான் தில்லியில் இருக்கும் மக்களுக்கு அவர்களை நண்பர்களாக நினைக்க தோன்றுகிறது.
மொகலாயர்கள் இங்கு இருந்தபோது பார்ஸி மொழியை வேவ்வேறு மொழிகள் பேசும் இந்துகளும் முஸ்லீம்களும் கற்றுக்கொண்டு அவர்க‌ளுக்கு சேவகம் செய்து வந்தார்க‌ள். ஒரு பெரிய மத்தியதர வர்க்கம் இரு மதங்களிலும் உருவாகியிருந்தது. மொகலாயர்கள் ஆட்சி முடிந்து ஆங்கிலேயர்கள் வந்தபோது ஆங்கிலம் கற்று இந்துகள் அதே மத்தியதர வர்க்கம் தொடர்ந்து பணியாற்ற, முஸ்லீம் மத்தியதரம் கொஞ்ச கொஞ்சமாக பின் தங்கி போனது.
இரு மதத்தின் மேல்தட்டுகள் தொடர்ந்து அவர்களை வளமைப்படுத்திக் கொண்டாலும், இரு மத்தியதரங்களில் முஸ்லீம்கள் ஆங்கிலத்தால் பின் தங்கிவிட மிகப்பெரிய வியாபார முஸ்லீம் உலகம் உருவாகிவிட்டது. அது இந்தியாவின் வடபகுதியிலிருந்து தென் இந்தியாவின் கடைசி பகுதிவரை இந்த மக்களின் பரவலை காணலாம்.
நான் பள்ளியில் படித்தபோது என்னுடன் படித்த இரு முஸ்லீம் மாணவர்களில் ஒருவன் பானை செய்து விற்பனை செய்பவனின் மகன், மற்றொருவன் சென்ட் வியாபாரியின் மகன்.
நாம் அறிய‌முடியாத, ஏன் முஸ்லீம்களே அறியமுடியாத, உட்பிரிவுகளை கொண்டது இஸ்லாம் மதம். அதில் சின்ன புள்ளியாக இருக்கும் எளிய மக்கள் தங்களின் வாழ்க்கைக்கு தேவையானவற்றை மட்டுமே சேகரித்துக் கொண்டு மிக எளிய வாழ்வை வாழும் மனிதர்களே அதிகம். என் பகுதியில் முடிதிருத்தும் ஒரு முஸ்லீம் உண்டு. அவரிடம் எல்லா மக்களும் சென்று முடிவெட்டிக்கொள்கிறார்கள். இத்தனைக்கும் மைதிலி மொழி பேசும் முஸ்லீம். இந்தி மட்டுமே தெரிந்த அவருக்கு மராட்டி மக்களின் மூலம் எந்த தொந்தரவும் இல்லை.
மக்கள் எல்லாவற்றையும் எளிமைப்படுத்திக் கொள்ளத்தான் நினைக்கிறார்கள்.  சிக்கலாக்கிக் கொள்ளும் ஒரு குழு எல்லாப்பக்கத்திலும் இருக்கிறது. ஆனால் அதையும் கண்டுக்கொள்ளாமல் தன் வேலை உண்டு என் இருக்கும் மக்களே இந்தியாவை நடத்திச் செல்கிறார்கள்.

No comments: