Wednesday, March 18, 2015

மீனவர் கடல்

 கடல் அட்டை என்கிற உயிரினம் பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அது கடலின் அடியில் மண்பகுதியில் வாழக்கூடியது. கடலில் வந்து விழும் மனித கழிவுகள், ரசாயனப் பொருட்கள் போன்ற நமக்கு தேவையற்றவைகலை உண்டு வாழ்பவை. அவைகள் இனப்பெருக்க காலங்களில் கடலின் மேல்தளத்தில் வந்து பெண் அட்டைகள் முட்டையிட வரும் அப்போது மட்டுமே அவைகளைக் காணமுடியும். அவைகளை பிடிப்பதையோ உண்பதையோ  தண்டனைக்குரியதாக ஆக்கி தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் சில மருந்துகளை தயாரிக்க அவைகள் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் எங்கோ ஒரு கோடியில் உள்ள சில தொழிற்சாலைகளுக்கு தமிழகத்திலிருந்து அந்த அட்டைகள் ரகசியமாக கடத்தப்படுகின்றன. மேலே வரும் பெண் அட்டைகளை பிடிப்பதால் அவற்றின் இனங்களின் வளர்ச்சி பாதிக்கிறது. இதில் அரசியல்வாதிகளின் அழுத்தம் அதிகம் இருக்கிறது. படகுகளின் உரிமையாளர்கள் பெரிய அரசியல்வாதிகள்தான். ஆக மீனவர்கள் தப்பிக்கவே முடியாது. மீன்பிடிக்கையில் இலங்கை கடற்படையினரின் கெடுபிடி. இங்கே ஒன்றை சொல்லவேண்டும் 2009 வரை தமிழக இலங்கை மீனவர் பிரச்சனை பெரிதாக பேசப்பட்டத்தில்லை. அப்போதும் இந்த பிரச்சனைகள் இருந்தாலும் இருதரப்பிலும் சுமூகமாக்கிக் கொள்ளவே நினைத்தார்கள்.
இந்திய-பங்களாதேஷ், இந்திய-பாகிஸ்தான், இந்திய-இலங்கை கடற்ப்பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் பிரச்சனைகள் தாம். பிரபாகரனின் விழ்ச்சிவரை அமைதியாக இருந்த இலங்கை கடற்ப்படை, பின் மிக தீவிரமாக எல்லை தாண்டும் இந்திய படகுகளை பிடிக்க ஆரம்பித்தார்கள். அதுவரை சுதந்திரமாக எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிறகு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது.

ஏன் இந்திய/தமிழக மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டும்? அங்கே சென்று மீன்பிடிக்க வேண்டிய அவசியமென்ன? இந்தியாவில்கூட நமக்கென்று எல்லைகள் உள்ளன. மாநிலங்களுக்கு தனியான எல்லைகள் உள்ளன. அவற்றை தாண்டும்போது அடுத்த மாநில மீனவர்களையும் அந்தந்த மாநில அதிகாரிகள் பிடிக்கவே செய்கிறார்கள். சிலர் சட்டவிரோதமாக கடந்து சென்றதால் பிடிபடுகிறார்கள்.
ஏனெனில் அதிக மீன்கள் அந்த பகுதியில் கிடைக்கின்றன. ஆந்திரா, கேரளா கடற்ப்பகுதிகளைவிட தமிழக பகுதியில் மீனவர்களுக்கு மட்டும் குறுகிய பகுதியாக அமைந்துவிட்டது. ஆகவே பல லட்சங்கள் செலவழித்து வரும் தமிழக மீனவர்கள்   மீன் இல்லாமல் செல்ல விரும்புவதில்லை. கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தாண்டி செல்கிறார்கள். சில சமயங்களில் தப்பித்துக் கொள்வதால் இதை செய்ய அவர்கள் தயங்குவதில்லை.
நட்பு நாடு எது பரமஎதிரி நாடு எது என்கிற விவாதம் நடந்துக் கொண்டிருக்கும் இன்றைய தேதியில் மீனவர் பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பது என்பது எளிதானது அல்ல. எல்லை தாண்டி வந்தால் சுடும் அதிகாரம் உள்ளது என்று இலங்கை பிரதமர் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதே வேளையில் நாமும் சுடுவோம் என்பதும் அல்லது சுடக்கூடாது என்று சொல்வதும் ஒன்றாகத்தான் இருக்கும். மத்திய அரசாக இருக்கும் எந்த அரசிற்கும் இலங்கையின் வணிகம் தேவைப்படுகிறது. அதேவேளையில் சீனாவின் மீதான அச்சமும் இந்திய அரசுக்கு இருப்பதால் இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என இலங்கை நினைக்கிறது. ஒருபக்கம் வணிகத்தை பேசிவிட்டு ஒருபக்கம் சீனாவின் மிரட்டலை விட்டுக்கொண்டிருந்த இலங்கை இன்று நேரடியாகவே சுடுவோம் என்று மிரட்டலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்திய/தமிழக மீனவர்கள் இதில் அப்பாவியாக மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது நபர் தலையிட்டு பேசும்போது அதில் தமிழக மீனவர்களின் செயல்களும் வெளியே வரும் என்று நினைக்கிறார்கள் என தோன்றுகிறது.
எல்லை தாண்டுவதையும், அட்டைகளை பிடிப்பதை தடைசெய்வதும், தடை செய்யப்பட்ட வலைகளை தடுப்பதும் மட்டுமல்லாது மீனவர்களின் மீதான தமிழக/இந்திய‌ அரசியல்வாதிகளின் தலையீட்டை முதலில் நிறுததப்படவேண்டும். சுதந்திரமாக அவர்கள் மீன்களைபிடிக்க அனுமதிக்கப்படவேண்டும். அப்போது அவர்களின் தேவையை அவர்கள் செய்து கொள்வார்கள். அதை செய்யாமல் செயல்படும் எந்த அரசியல்வாதிகளும் அவர்களின் தலையீடு இந்த விஷயத்தில் ஏன் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டியது மீனவர்களையும் இலங்கை அரசையும் அல்ல, நம் அரசியல்வாதிகளைத் தான்.

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.