கேள்வி: கிரிஷ் கார்னாட்டின் நாடகங்களை பல தமிழில்
மொழிபெயர்த்திருக்கிறீர்கள். குறிப்பாக பலிபீடம், அதில் முன்னுரையிலேயே இது தமிழில்
அறங்கேறுமா என பார்த்து மொழிபெயருங்கள் என்று கூறியிருக்கிறார் கிரிஷ் கர்னாட், அவர் சொன்னது போல் இதுவரை
ஒருமுறைகூட மேடை ஏறவில்லை. வருங்காலத்தில் நாடகம் என்றவகை தமிழ் இலக்கியத்தில்
இல்லாமல் போய்விடுமா?
பாவண்ணன்: நாடகமே இல்லாமல்
போய்விடும் என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. கண்டிப்பாக நாடகச் செயல்பாடுகள்
தொடர்ந்தபடியேதான் இருக்கும். தமிழ்ச்சூழலின் பிரச்சினை, நாடகங்களுக்கான
பார்வையாளர்கள் இல்லை என்பதுதான். ரசனையுணர்வும் மேலான தேடலுணர்வும் கொண்ட
பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக நாடகங்களுக்கான வரவேற்பும் பெருகும்.
அதுவரை, ஒரு சிறிய கூட்டத்தினருக்கான செயல்பாடாக மட்டுமே நாடகம்
சுருங்கியிருக்கும். கிரிஷ் கார்னாடின் நாடகங்கள் புராணம், வரலாறு, நாட்டுப்புறவியல்
ஆகிய பின்னணிகளைக் கொண்டவை. அந்தக் களங்களிலிருந்து நாடகத்துக்கான கருக்களை அவர்
தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். சமகாலத்துக்குரிய பார்வையை விவாதிக்கும் ஒரு களமாக
அக்கருக்களை அவர் புனைந்துகொள்கிறார். நாடகத்தில் துக்ளக் பேசினாலும், அதை ஒரு நவீன
அரசியல்வாதியின் பேச்சாகவே பார்வையாளர்கள் உணரும் வகையில் அவருடைய புனைவு
கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இந்தியத்தாயை மனத்தில் வைத்துக்கொண்டு பாரதியார்
பாஞ்சாலி சபதம் எழுதியதுபோல கார்னாட் தன் நாடகங்களை அமைக்கிறார்.
புராணத்தையும் நாட்டுப்புறவியலையும் ரசிக்கும் மனமுள்ள பார்வையாளர்களால் மட்டுமே, அந்த நாடகங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். துரதிருஷ்டவசமாக, புராணம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றின்மீது தமிழ்ப்பார்வையாளர்கள் வைத்திருக்கும் மதிப்பு அவ்வளவு உயர்வானதாகச் சொல்லமுடியாது. அவை எல்லாவற்றையும் யாரோ செய்துவைத்த சதி என்கிற ஒற்றைச் சொல்லோடு தள்ளிவைக்கவே நம் பார்வையாளர்கள் முயற்சி செய்கிறார்கள். கார்னாடின் நாடகங்கள் ஏன் இங்கே கொண்டாடப்படவில்லை என்று யோசிக்கும் இத்தருணத்தில் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த நிலை இப்படியே நீடிக்கும் என நினைக்கத் தேவையில்லை. கண்டிப்பாக மாறும். அப்போது கார்னாடின் நாடகங்களுக்கு ஒரு புதிய செல்வாக்கு உருவாகும் என்றே நம்புகிறேன்.
புராணத்தையும் நாட்டுப்புறவியலையும் ரசிக்கும் மனமுள்ள பார்வையாளர்களால் மட்டுமே, அந்த நாடகங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். துரதிருஷ்டவசமாக, புராணம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றின்மீது தமிழ்ப்பார்வையாளர்கள் வைத்திருக்கும் மதிப்பு அவ்வளவு உயர்வானதாகச் சொல்லமுடியாது. அவை எல்லாவற்றையும் யாரோ செய்துவைத்த சதி என்கிற ஒற்றைச் சொல்லோடு தள்ளிவைக்கவே நம் பார்வையாளர்கள் முயற்சி செய்கிறார்கள். கார்னாடின் நாடகங்கள் ஏன் இங்கே கொண்டாடப்படவில்லை என்று யோசிக்கும் இத்தருணத்தில் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த நிலை இப்படியே நீடிக்கும் என நினைக்கத் தேவையில்லை. கண்டிப்பாக மாறும். அப்போது கார்னாடின் நாடகங்களுக்கு ஒரு புதிய செல்வாக்கு உருவாகும் என்றே நம்புகிறேன்.
கேள்வி: ஆரம்பத்தில் புதைந்த காற்று, ஊரும் சேரியும், கவர்மெண்ட் ப்ராமணன் போன்ற தலித்
எழுத்துக்களை மொழிபெயர்த்த நீங்கள் பிற்பாடு ஓம்நமோ, தேர் போன்ற ஆன்மீக தொடர்புடைய
நூல்களை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். இந்த மாற்றம் எப்படி ஏற்ப்பட்டது?
பாவண்ணன்: புதியபுதிய வகைமைகள்
என்கிற வகையிலேயே மொழிபெயர்ப்புக்குரிய நூல்களை நான் தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன்.
ஓம் நமோ, தேர் ஆகியவை முக்கியமான நாவல்கள். இந்தத் தலைப்புகளைப் பார்த்து
இவை ஆன்மிகம் தொடர்பான நாவல்கள் என நினைத்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது. ஓம்
நமோ,
வணிகத்தில்
ஈடுபடும் ஒரு சமணக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் கதைகளைக் களமாகக் கொண்ட
படைப்பு, சமணக்கொள்கையை மனமார ஏற்றுக்கொண்டு, அதையே ஒரு
வாழ்க்கைமுறையாக ஏற்று வாழும் ஒரு தலைமுறை. வாழும் விதம் எப்படியாக இருந்தாலும், சமணக்கொள்கையை
மனத்தளவில் மட்டும் ஏற்றுக்கொண்டு வாழும் அடுத்த தலைமுறை. சமணக்கொள்கையை ஒரு
ஆய்வுப்பொருளாக மட்டுமே எடுத்துக்கொண்டு கள ஆய்வு செய்யும், கொள்கையிலிருந்து
முற்றிலும் துண்டித்துச் சென்றுவிட்ட இன்னொரு தலைமுறை. இப்படி மூன்று தலைமுறைகளின்
இணைவும் மோதலுமாக வளர்ந்து சென்று சமயத்துக்கும் வாழ்க்கைக்கும் உள்ள உறவுநிலையை
விவாதப்பொருளாக மாற்றுகிறது நாவல். தேர் தன் வடிவ
அமைப்பில் முற்றிலும் புதிய வகைமையைச் சேர்ந்தது. நூறாண்டுகளுக்கு முன்பு உருவான
ஒரு சடங்கு மெல்லமெல்ல பொருளற்றுப் போய்விடுவதையும், அச்சடங்குக்கும்
அதிகாரச்சாதிகளுக்கும் இடையிலான உறவை உணர்ந்துகொண்டு ஊரைவிட்டே போகிற
தலைமுறையையும் பற்றி விரிவாகப் பேசும் நாவல். சமயத்துக்கும் எதார்த்த
வாழ்க்கைக்கும் உள்ள உறவுகளையும் முரண்பாடுகளையும் இந்த இரண்டு நாவல்களும்
முன்வைக்கின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்த நாவல்களை அடுத்து, நான்
மொழிபெயர்த்த ’வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்’ புத்தகத்தை
நீங்கள் படித்திருக்கக்கூடும். இதன் வகைமையும் புதியது.
கேள்வி: பிறமொழி இலக்கியங்களின் தாக்கத்தால் உங்கள் எழுத்தில் தமிழ்மொழி
எழுத்தாளர்களின் வாழ்க்கைப் பார்வையைவிட முற்றிலும் வேறுபட்டு இருப்பது போல
தெரிகிறது. குறிப்பாக ’பாய்மரக்கப்பல்’ நாவல்.
அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
பாவண்ணன்: என் நாவலைப்பற்றி நானே
எப்படிச் சொல்வது? எழுதும் முன்பு என்ன நினைத்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஒருவர் விருப்பமே அவரை இயக்கும் விசை. அதுவே அவரைச் செலுத்துகிறது. அதுவே அவரை
மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் விருப்பமொன்று, அவரைச்
சார்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பது ஒரு பெருந்துயரம். அவர்களுக்கு
வேறொரு விருப்பம் இருக்கிறது. அந்த விருப்பத்தையொட்டியே அவர்கள் தம் மகிழ்ச்சியைக்
கண்டடைய முயற்சி செய்கிறார்கள். ஒரே கூரையின் கீழே வேறுவேறு விருப்பங்கள்.
வேறுவேறு பாதைகள். இப்படிப்பட்ட முரண்கள் முட்டி மோதினால் எப்படி இருக்கும்? என் கிராமத்து
வாழ்க்கையனுபவங்களின் அடிப்படையில் ஒரு மூன்று தலைமுறைக்கதையாக இதை எழுதிப்
பார்க்கவேண்டும் என நினைத்தேன். அதுதான் பாய்மரக்கப்பல்.
கேள்வி: கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், ஏன் குழந்தை பாடல்கள் எழுத கவனம் செலுத்தும்
நீங்கள், நாவல்கள் எழுத தயங்குவது ஏன்? தனிப்பட்ட காரணங்கள் உண்டா?
பாவண்ணன்: என்னை நானே சுயபரிசீலனை
செய்துகொள்ளத் தூண்டும் கேள்வி. பாய்மரக்கப்பல் 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது.
அதற்குப் பிறகு ‘வலசைப்பறவைகள்’ என்னும் தலைப்பில் ஒரு நாவலை எழுதத் தொடங்கினேன். ஒரு
மூன்றாண்டு காலம் எழுதிமுடித்து 2000 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும் என்பது என்
எண்ணமாக இருந்தது. ஏறத்தாழ 500 பக்கங்கள் எழுதி முடித்த நிலையில் எங்கோ ஒரு
இடத்தில் முட்டி நின்றுவிட்டது நாவல். அது ஒரு பெரிய அதிர்ச்சி. அடுத்து செல்லும்
திசையை அறியாமல் அப்படியே நின்றுவிட்டது. அந்தக் குழப்பத்திலிருந்து என்னால்
விடுபடவே இயலவில்லை. சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடரலாம் என
நினைத்தும், அது நிகழவில்லை. அந்தக் கருவின் பிடியிலிருந்து என் மனம் விடுபடாத
நிலையில் வேறொரு கருவையும் யோசிக்கமுடியவில்லை. புத்தாயிரத்தாண்டின் தொடக்கம்
தமிழில் நாவல்கள் எழுச்சியோடு வெளிவந்த காலம். இந்தக் காலத்தில் என்னால் நாவல்
எழுதமுடியாமல் போய்விட்டதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. இதை
உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும் என நினைக்காத நாளும் இல்லை. சமீபத்தில்
ஜெயமோகனுடன் பேசிக்கொண்டிருந்தபோது கூட, இதைப்பற்றி ஒரு பேச்சு
வந்தது. நின்ற இடத்திலிருந்து தொடர நினைக்காமல், முற்றிலும் வேறொரு
இடத்திலிருந்து அல்லது வேறொரு பாத்திரத்திலிருந்து அல்லது வேறொரு காலத்திலிருந்து
தொடங்கி எழுதினால் வெற்றிகரமாக முடித்துவிடலாம் என ஆலோசனை வழங்கினார். அந்த ஆலோசனை
எனக்கு உதவியாக இருக்குமென்று நினைக்கிறேன். பார்க்கலாம், எல்லாம்
நல்லபடி அமைந்தால், என்னுடைய ’வலசைப்பறவைகள்’ இந்த ஆண்டுக்குள்
வந்துவிடும்.
கேள்வி: இன்றைய ஆங்கிலமோக வேக உலகத்தில், இன்னும் 50 ஆண்டுகளில் தமிழ் மொழி, இலக்கியம் எப்படி இருக்கும் என
நினைக்கிறீர்கள். 100 ஆண்டுகளுக்குப்பின் தமிழ் மொழி இருக்குமா?
பாவண்ணன்: எவ்வளவோ
மோகங்களையெல்லாம் எதிர்கொண்டுதான் நம் தமிழ்மொழி, பல நூற்றாண்டுகளைக்
கடந்து வாழ்ந்துவந்திருக்கிறது. அது அவ்வளவு எளிமையான முறையில் வழக்கொழிந்து
போகாது. ஆங்கிலமொழியை ஒரு பாடமாக கற்றுக்கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. அது
கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு மொழிதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், இன்று
இந்தியாவில் ஆங்கிலத்தை தாய்மொழிக்கு ஒரு மாற்றாக வைத்துப் பார்க்கிற, கற்கிற ஒரு
சூழல் உள்ளது. இது ஆபத்தானது. அம்மா என்று நாம் பேசாமல், அம்மா என்று
நாம் படிக்காமல், அம்மா என்று வாய்குளிர அழைக்காமல், அச்சொல்லை ஒரு மொழி
எவ்வளவு காலம் தக்கவைத்திருக்கமுடியும்? தொழிற்பயிற்சிக்கான
மொழியறிவு என்பது வேறு, தாய்மொழியறிவு என்பது வேறு என்பது நம் மக்களுக்குப்
புரியவில்லை. தொழிற்பயிற்சிக்கான மொழியறிவே போதும் என நினைக்கும்போது, தாய்மொழியறிவுக்கான
நாட்டமே இல்லாமல் போய்விடுகிறது. தாய்மொழியைப் பயிலாமலேயே ஒரு தலைமுறை
உருவாகுமெனில், அந்தத் தாய்மொழி பேச்சுமொழியாகமட்டுமே எஞ்சும் அபாயம் இருக்கிறது.
இது சமூகத்தில் கவலை தரக்கூடிய ஒரு பக்கம்தான். இன்னொரு பக்கத்தில் தமிழை
அறிந்துகொள்ளும், தமிழில் வாசிக்கும், தமிழ் இலக்கியத்தில்
ஈடுபாடுகொள்ளும் தலைமுறையினர் இருந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
விகிதாச்சார அளவில் சிறிய வேறுபாடு இருந்தாலும்கூட, சமூகத்தின் இந்த
மறுபக்கம் மிகமுக்கியமானது. இவர்களால் தமிழ் தொடர்ந்து வாழவும் தழைக்கவும்
செய்யும். அதில் சந்தேகமே இல்லை. இந்த இரண்டு பக்கங்களும் இன்றுள்ள அமைப்பில் உள்ள
நிலைகள். மாற்றம் ஒன்றே மாறாத விதி என்கிற கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, எதிர்காலத்தில்
இந்த இரண்டு பக்கங்களும் இடம் மாறவும் கூடும். சுருங்கவும் கூடும். விரிவடையவும்
கூடும். எது வேண்டுமானாலும் நிகழலாம். எந்த நிலையிலும் தமிழை வாசிக்கக்கூடிய, தமிழ்
இலக்கியத்தில் அமிழ்ந்திருக்கக்கூடிய ஒரு பக்கம் இருந்துகொண்டே இருக்கும் என்றும்
அது இயங்கிக்கொண்டே இருக்கும் என்றே நம்புகிறேன்.
No comments:
Post a Comment