Monday, January 12, 2015

மதக்குறியும் குலக்குறியும்




நான் தில்லியில் இருந்தபோது சார்ச்டர்ட் பஸ் எனப்படும் தனியார் பேருந்துகள் வரும். எங்கு எறி இறங்கினாலும் ஒரே கட்டணம்தான். எல்லாம் ஒரு இடத்தை நோக்கி செல்பவைதாம். ஆறு ரூபாய் இருந்தது. சரியான சில்லறையுடன் ஏறவேண்டியிருக்கும். சில கேரள உரிமையாளர்களின் பேருந்துகளும் தினம் வரும். அதன் பெயர்களைக் கொண்டு அதை புரிந்து கொள்ளலாம். கைரளி, ஐயப்பன் போன்ற பெயர்களாக இருக்கும். சில கேரள பெண்களும், ஆண்களும் நான் ஏறும் இடத்தில் ஏறுவார்கள். அவர்கள் இந்த பெயர்களைக் கொண்ட வண்டியில் மட்டுமே ஏறுவார்கள். இதில் ஆச்சரியம் இல்லைதான். மலையாளிகள் மலையாளிகளைதான் ஆதரிப்பார்கள். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அந்த வண்டியில் அவர்களுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே அதன் நடத்துனர் வாங்கிக் கொள்வார். பத்து ரூபாய் அவர்கள் கொடுத்தாலும் 5 ரூபாய் திருப்பி அளித்துவிடுவார். அவர்களின் இந்த செயல் கொஞ்சம் சீண்டுவதாகவே இருந்தது. நிறைய கேரள உரிமையாளர்கள் வண்டிகள் வருவதால் எந்த வண்டி எப்போது வருகிறது என்று தெரிந்து கொள்ளமுடியாது. எல்லா வண்டியிலும் இதைத்தான் செய்தார்கள் வேறு உரிமையாளர் வேறு நடத்துனர். அந்த மக்களை நடத்துனர் எப்படி கண்டுகொள்கிறார் என்பதும் புரியவில்லை. ஏனெனில் பொதுஇடங்களில் அவர்கள் இந்தியில் மட்டுமே பேசுவார்கள்.
கொஞ்சநாளில் சின்ன அடையாளங்கள் அவர்களிடையே இருப்பதை புரிந்து கொண்டேன். நெற்றியில் சந்தனப் பொட்டு, மலையாளம் கலந்த இந்தி உச்சரிப்பு, ஆண்களில் மெல்லிய தாடி, பெண்களில் விரிந்த தலைமுடி. மெல்லிய தாடி என்னால் வைத்துக் கொள்ளமுடியவில்லை அத்தோடு மலையாளம் கலந்துஅல்ல, இந்தியே தடுமாறிக் கொண்டுதான் இருந்தேன். சந்தனபொட்டு எளிதானதாக தோன்றியது.


ஒரு நாள் சற்று தைரியம்பெற்று சந்தனப் பொட்டு அணிந்து கூட்டமான ஒரு கேரள வண்டியில் ஏறி பத்துரூபாயை நீட்டினேன். ஒரு கணம் ரோட்டை கவனிப்பது போல கவனித்து 5 ரூபாயை திருப்பிதந்தார். என்னை கவனிக்கிறாரா என்று பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் கவனித்ததும் தவறு செய்துவிட்டோமோ என்று நடத்துனரும் ஒரு விநாடி என்னை கவனித்தார். வயிறு ஜீவென்று எகுற, தலையெல்லாம் சுற்றுவதுபோல் இருந்தது. கம்பியை பிடித்து கொண்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது மாதிரி அன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது..
நம்மவன், நம் இனத்தவன் என்பதில் எல்லோருக்கும் ஒரு பற்று இருக்கிறது. பிராமண‌ர்கள் ஒன்று சேர்வதும், நாடர்கள் ஒன்று சேர்வதும் பலசமயங்களில் அவர்களின் சின்ன உரையாடலிலேயே இது நடந்திருக்கிறது என்பதை கவனிக்கலாம். முன்பு மத, ஜாதிய அடையாளங்கள் பல்வேறு சமூக பழக்கங்களால் தேவையாக இருந்தன. ஆனால் இன்றைய நாகரீக உலகில் நேரடியாக கூறமுடியவில்லை என்றாலும் அதன் தேவை இருக்கவே செய்கிறது.
நான் இந்த மதத்தை சேர்ந்தவன், மதத்தின் இன்ன பிரிவை சேர்ந்தவன் என்றும், மொழியில் இன்ன மொழி, இந்த ஊரை சேர்ந்தவன், சாதியில் இன்ன சாதி, இன்ன உட்பிரிவு என்பதை எப்போதும் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதை உணர்த்துவதற்கு ஒரு அடையாளம் தேவையாக இருக்கிறது. அந்த அடையாளம் அவர்களை கவரவத்தை அளிப்பதாக, தங்களின் உயரத்தை தக்க வைத்து கொள்ள அது உதவுவதாக இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.
முதலில் மனிதர்கள் மத அடையாளத்தை வெளியிடுபவர்களாக இருக்கிறார்கள். இந்து, முஸ்லிம், கிருஸ்தவம் இம்மூன்றில் இந்துமதம் பெருவாரியானவர்கள் என்பதால் பெரிய அளவில் முயற்சிகள் தேவையில்லை. உட்பிரிவுகளில்தான் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும். முஸ்லீம்களை அவர்கள் நெற்றியில் உள்ள வடுவை கொண்டு முதல் பார்வையில் கண்டுகொள்கிறார்கள். நான் ஒருமுறை ரயில் தொடர் (24 மணி) பயணத்தின்போது ஒருவர் தலையில் சில‌ பிச்சைகாரர்களுக்கு மட்டுமே காசு கொடுத்துக் கொண்டுவந்தார். அதில் சிலர் முஸ்லிம் வலை தொப்பியுடனும், சிலர் இல்லாமலும் இருந்தார்கள் ஏன் அப்படி செய்கிறார் என்று புரியவில்லை. கொடுப்பவர் பார்க்க எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தார். உற்றுகவனித்ததில் அவர் கொடுக்கும் பிச்சைக்காரர்களின் நெற்றியில் கருவளையம் இருந்தது. உடனே அடுத்த‌ ஸ்டேசனில் இறங்கி ஓட்டியிருக்கும் லிஸ்டை பார்த்தேன். அவர் நம்பரில் முஸ்லீம் பெயர் இருந்தது.
கிருஸ்தவர்களுக்கு அவர்களின் கழுத்திலும் கைவிரலிலும் கிருஸ்து அல்லது மேரியின் படம் இருக்கும். உடனே கண்டுக் கொள்வார்கள். ஒரு இந்துவிற்கு சந்தனப்பொட்டு, விபூதி, குங்குமத்தில் எத்தனை வகைகள் என்று யோசித்துப்பாருங்கள். பூசாரி, ஜோதிடர் தவிர மற்றவர்கள் வைத்திருக்கும் சந்தன‌பொட்டில் இருக்கும் குறியீடுகள் பல. கிடைமட்டமாக இருந்தால் ஒன்று. நேராக இருந்தால் ஒன்று, நேரானதில் கீழே ஒரு வளைவு இருந்தால் ஒன்று. அதேபோல் முஸ்லீம், கிருஸ்தவர்களும் மதம் அடுத்து ஜாதியைதான் கேட்டு தெரிந்து கொள்வார்கள். கிருஸ்தவ நாடார், கிருஸ்தவ வெள்ளாளர்களுக்குள் பெரிய அளவில் வன்மமே உண்டு.
இந்துவுக்குள் ஜாதிகுறியீடுகள் இதைவிட அதிகம், ஒருவரின் ஊரிலிருந்து, பேச்சிலிருந்து, அவர் என்ன ஜாதி என்று கண்டு கொள்வார்கள்.
ஆனால் நீங்கள் என்ன...  என்று கேட்டுவிடமாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படியல்ல புதிதாக பழகிய கொஞ்ச நாளிலேயே நீங்கள் என்ன ஆட்கள் என்று கேட்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
சரி ஜாதி ஏன் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். நான் உன்னைவிட கொஞ்சம் உயர்ந்தவன் என்று மனதுக்குள் நினைத்து சந்தோஷப்படதான்.

No comments: