Thursday, January 8, 2015

பாவண்ணனுடன் ஓர் உரையாடல்

எழுத்தாளர் பாவண்ணனுக்கு அதிகம் அறிமுகம் தேவையில்லை. 3 நாவல்கள், 16 சிறுகதை தொகுப்புகள், 17 கட்டுரை தொகுப்புகள், 19 மொழிபெயர்ப்புகளை செய்தவர். அவரது கதைகளும் கட்டுரைகளும் நுண்ணிய வெளிப்பாடுகளாக எப்போதுமே உள்ளன. சமீபத்திய சிறுகதை தொகுப்பான பாக்குத்தோப்பும் அப்படிதான். நாவல்களில் சிதறல்களும், பாய்மரகப்பலும் முக்கிய நாவல்களின் வரிசையில் சேர்ந்தவைகள். பழகுவதற்கு எளிய இனிய மனிதர். அவருடன் அவ்வப்போது நடந்த உரையாடல்களில் சிறிய கேள்விகளுக்கும் விரிவான விளக்கமாக பதிலளித்து நிறைவாக இருந்தது. அவற்றின் தொகுப்புதான் இது.





கேள்வி: எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்எந்த வயதில் நீங்கள் எழுதமுடியும் என நினைப்பு தோன்றியதுஏன் இனி எழுத வேண்டும் என எப்போதாவது நினைத்ததுண்டா?

பாவண்ணன்:  பள்ளிப்பருவத்தில் ஒரு வாசகனாகவே இருந்தேன். என் படிப்பார்வத்தைப் பார்த்துவிட்டு, என் பள்ளி நூலகரும் எங்கள் கிராமத்து நூலகரும் நான் கேட்கும் புத்தகங்களை உடனுக்குடன் எடுத்துக்கொடுத்தார்கள். எங்கள் பள்ளியில் தமிழாசிரியர்களாக இருந்த ராதாகிருஷ்ணன், சாம்பசிவம் இருவருமே என்னை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். அதிலும் ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு நான் செல்லப்பிள்ளை. பாடமெடுக்காத நேரத்தில் பாரதியார் பாடல்களையும் பாரதிதாசன் பாடல்களையும் படித்துக்காட்டி பொருள் சொல்வார். சாம்பசிவம் ஐயா ராமாயணத்திலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் பாடல்களைப் படித்து பொருள் சொல்வார். எனக்குள் கவிதையார்வத்தை விதைத்தவர்கள் அவர்கள். நான் எழுதும் சின்னச்சின்ன கவிதைகளை புன்னகையுடன் திருத்திக் கொடுப்பார்கள். அவர்களின் தொடர்ச்சியைப்போல கல்லூரியில் 1976 ஆம் ஆண்டில் நான் சேர்ந்தபோது, ம.இலெ.தங்கப்பா அவர்கள் எனக்கு ஆசிரியராகக் கிடைத்தார். பாடத்திட்டத்துக்கு அப்பால் அவர் சங்கப்பாடல்களை நடத்தினார். என் கவிதையார்வம் அந்தச் சமயத்தில்தான் உச்சத்தை அடைந்தது. என்னால் எழுதமுடியும் என்கிற தன்னம்பிக்கையை அப்போதுதான் அடைந்தேன். அப்போது கவிதைகள் மட்டுமே என் ஊடகமாக இருந்தது. அனைத்தும் மரபுப்பாடல்கள். ஆசிரியப்பா, வெண்பா, அறுசீர்விருத்தம், எண்சீர்விருத்தம் என எல்லா விதமான பாவகைகளிலும் எழுதித் தேர்ச்சி பெற்றிருந்தேன். சின்னச்சின்ன காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கவிதைகளாக்குவது எனக்குப் பொழுதுபோக்காக இருந்தது. கதைகளுக்குரிய கருவை மையமாக எடுத்துக்கொண்டு பல குறுங்காவியங்கள் எழுதிப் பழகினேன். புதுவையில் சவரிராயலு நாயக்கரின் நூற்றாண்டு விழா அப்போது கொண்டாடப்பட்டது. அதையொட்டி  அரசு குறுங்காவியப்போட்டியொன்றை அறிவித்தது. அந்தப் போட்டியில் நான் எழுதிய பெண்மை போராடுகிறதுஎன்னும்  குறுங்காவியத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. 1981 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையில் இளம்பொறியாளர் பணிக்குத் தேர்வாகி, ஓராண்டுப் பயிற்சிக்காக நான் ஐதராபாத் செல்லும்படி நேர்ந்தது.  ஒரு பக்கம் தனிமை. மறுபக்கத்தில் என் குடும்பத்துயரங்கள். என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. மருத்துவமனையில் நீண்ட காலம் இருக்கும்படியான சூழல். குடும்பபாரம் முழுக்க என் தாயின்மீது விழுந்துவிட்டது. எப்படியோ அவர் தன்னந்தனியாக சமாளித்துக்கொண்டிருந்தார். அருகில் நின்று துணையாக இருக்கவேண்டிய நான், எங்கோ தொலைதூரத்தில் இருந்தேன். அந்தக் குற்ற உணர்ச்சி என்னை வருத்தியது. அப்போதுதான் என் கவனம் கவிதையிலிருந்து உரைநடையை நோக்கி விரிவடைந்தது. தொடர்ந்து எழுத்துவேலைகளை உருவாக்கிக் குவித்துக்கொள்வதன் வழியாக, அந்தத் துயரங்களை கடந்துசெல்ல முடிந்தது. 1982 ல் என்னுடைய முதல் சிறுகதையை எழுதி படிகள் என்னும் இதழுக்கு அனுப்பினேன். படிகள் இதழ் சமூக விமர்சன இதழாக பெங்களூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தது.  அதில் என் சிறுகதை வெளிவரவில்லை என்றாலும், ஆசிரியர் பொறுப்பிலிருந்து தமிழவன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதற்குப் பிறகு ஒரு சிறுகதை எழுதி தீபம் இதழுக்கு அனுப்பிவைத்தேன். அது பிரசுரமானது.  அக்கணத்திலிருந்து, என்னுடைய அறிதல்களை முன்வைப்பதற்கு பொருத்தமான வழிமுறையாக படைப்பிலக்கியத்தை அமைத்துக்கொண்டேன். இன்றுவரைக்கும் அதில் மாற்றமில்லை.

 எழுத்தையொட்டி ஒருநாளும் என் மனம் அலுத்துக்கொண்டதே இல்லை. ஏன் இனி எழுதவேண்டும் என ஒரு கணமும் நினைத்ததே இல்லை. எழுத்து எனக்கு வேலையல்ல. மாறாக, என்னை இயக்கும் சக்தியே அதுதான். ஏற்கனவே இங்கே இருக்கக்கூடிய மரம், பாறை, வானம், நிலா, சூரியன், மேகம், காடு, செடி, மலர், ஆறு, தண்ணீர், கோவில், காக்கை, குருவி, குயில், குரங்கு, யானை என ஒவ்வொன்றையும் பார்த்து, தானே அதைப் புதுசாக பார்த்துக் கண்டுபிடித்ததுபோல நாக்குக்கும் நெஞ்சுக்கும் உவப்பான ஒரு சொல்லை பெயராக வைத்து, உற்சாகம் ததும்ப கூச்சலிட்டு புன்னகைத்துக் குதிக்கும் குழந்தையைப்போல, நானும்  இந்த உலகத்தை ஒவ்வொரு கணமும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொன்றையும் என் மனத்தாலும் எண்ணங்களாலும் அளக்க முயற்சி செய்கிறேன். அவற்றையே என் படைப்புகளாக முன்வைக்கிறேன். இந்தச் செயல்கள் எனக்கு ஒருபோதும் அலுப்பைக் கொடுத்ததில்லை.

கேள்வி: ஏன் மொழிபெயர்க்க வேண்டும் என நினைக்கிறீர்கள்மொழிபெயர்ப்பைவிட சுயபடைப்பு முக்கியமில்லையா? மொழிபெயர்ப்பதனால் தனிப்பட்ட முறையில் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்கும் பயன் என்ன?

பாவண்ணன்:  மொழிபெயர்க்கும் வேலையில் நான் தற்செயலாகவே ஈடுபட நேர்ந்தது. ஐதராபாத்தில் என் பயிற்சியை முடித்துக்கொண்டு 1982 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில்  நான் கர்நாடகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். எஸ்.டி.டி. வசதிக்காக மாவட்டப் பெருநகரங்களை மாநிலத்தலைநகரங்களோடு கேபிள் மூலமாக இணைக்கும் பிரிவில் நான் வேலை செய்து வந்தேன். பெல்லாரியிலிருந்து ஹோஸ்பெட், கொப்பல், கதக் வழியாக ஹூப்ளியைச் சென்று சேரவேண்டும். மிகப்பெரிய திட்டம். முதல்நாள் வேலையில் சேர்ந்தபோதே, இனி இந்த மாநிலத்தில்தான் வேலை செய்யப் போகிறோம் என்கிற எண்ணம் என் நெஞ்சில் அழுத்தமாக விழுந்துவிட்டது. அன்றே கன்னடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டேன். தனிப்பட்ட முறையில் கன்னடம் எனக்கு மிகவும் பிடித்த மொழியாக இருந்தது.  அதற்குக் காரணம் என் வாசிப்பின் வழியாக நான் அறிந்துகொண்ட சிவராம காரந்த் அவர்களுடைய படைப்புகள். சிவராம காரந்த்தின் படைப்பை கன்னடத்திலேயே படிப்பது என்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தி என்றெல்லாம் என் மனத்தில் எண்ணங்கள் ஓடின. பிறகு அதுவே ஒரு பெரிய இலட்சியமாக மாறிவிட்டது. அன்று மாலையே கன்னட அரிச்சுவடியை வாங்கிக்கொண்டு வந்து நண்பர்கள் உதவியோடு படிக்கவும் எழுதவும் பயிற்சிசெய்யத் தொடங்கினேன். நண்பர்களோடும் என் ஊழியர்களோடும் பேசிப்பேசி பேச்சுமொழியிலும் தேர்ச்சி பெற்றேன். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம்  வகுப்பு வரைக்கும் உரிய பாடநூல்களையே வாங்கிப் படித்துப் பழகினேன். பாடங்கள் படிப்பது பிடிபட்டதும் செய்தித்தாட்கள், பிறகு வார இதழ்கள், அதற்கப்புறம் இலக்கிய நூல்கள் என படிப்பைத் தொடர்ந்தேன். என் கனவுத்திட்டத்தின்படி, சோமன துடி நாவலை கன்னடத்திலேயே படித்து மகிழ்ந்தேன். கிட்டத்தட்ட எண்பத்தொன்பதான் ஆண்டு வரைக்கும் கன்னட இலக்கியங்களை வாசிப்பது என்கிற அளவிலேயே ஈடுபட்டிருந்தேன். 89 ல் நான் பெங்களூர் வந்த பிறகு மறைந்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்னாத் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க கன்னட ஓரங்க நாடகமொன்றை அவருடைய தொகுதியொன்றுக்காக மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அதற்குப் பிறகுதான் என்னால் மொழிபெயர்க்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கே வந்தது. அதைத் தொடர்ந்து கனவு இதழுக்காக கன்னடக் கவிதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்துக் கொடுத்தேன். அப்புறம் ஆர்வத்தின் காரணமாக நாடகம், சிறுகதை, நாவல்கள் என அவ்வப்போது மொழிபெயர்த்துக்கொண்டே வந்தேன். மொழியோடு மனத்தளவில் வாழ்கிற ஒரு எழுத்தாளன் என்கிற முறையில், நான் அறிந்த வேறொரு மொழியில் சில புதிய, நல்ல விஷயங்களைப் பார்க்கும்போதும் தெரிந்துகொள்ளும்போதும் அதை நம் மொழியுலகத்துக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடவேண்டும் என்கிற ஆர்வம் இயற்கையாகவே எழுகிறது. அதை என்னால் கட்டுப்படுத்த இயல்வதில்லை.  மொழிபெயர்ப்பையும் ஒரு எழுத்துமுயற்சியாகவே நான் பார்க்கிறேன். சொந்தப் படைப்புக்கு எந்த அளவுக்கு கவனம் எடுத்துக்கொள்கிறேனோ, அதே அளவுக்கு மொழிபெயர்க்கவும் கவனம் எடுத்துக்கொள்கிறேன். மொழிபெயர்ப்பைவிட சுயமான படைப்புகள் முக்கியம் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. எழுதும் ஆர்வம் உந்தித் தள்ளினாலும் தொடக்கக் காலத்தில் படைப்புமனநிலை கைகூடி வராத தருணங்களில் தவித்துத்தவித்து அலைபாய்ந்துகொண்டே இருந்ததுண்டு.  இப்படி தவித்தலையச் செலவிடும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள மொழிபெயர்ப்பு பெரிதும் உதவியது. தவித்தலையும் தருணங்கள் எப்போதும் அவஸ்தையானவை. அப்படிப்பட்ட நிலையில் படிக்கவும் முடிவதில்லை.  மொழிபெயர்க்கத் தொடங்கிய பிறகுதான் இந்தத் தவிப்புகளை என்னால் எளிதில் கடந்துசெல்ல முடிந்தது. மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு கட்டத்தில் சொந்தப் படைப்பை எழுதுவதற்கான மனநிலை உருவாகிவிடும். சட்டென்று, அங்கிருந்து இங்கே தாவி, என் எழுத்தை எழுத உட்கார்ந்துவிடுவேன். பிறகு, அதை முடித்த பிறகுதான் மொழிபெயர்ப்பின் பக்கம் செல்வேன். இரண்டு குதிரைகளில் மாறிமாறிப் பயணம் செய்வதுபோல என்று வேண்டுமானால் சொல்லலாம். மொழியோடும் எழுத்தோடும் வாழ்கிறோம் என்கிற மனநிறைவு தரும் தெம்பு வலிமைமிக்கது. மொழிபெயர்ப்பு முயற்சிகளில் மொழிபெயர்ப்பாளன் தன் மொழியை எப்போதும் வளமாகவும்  உயிரோட்டம் மிகுந்ததாகவும் கூர்மையாகவும் வைத்துக்கொள்ள முடியும். மொழியோடு புழங்குகிறவனுக்கு இதைவிட பெரிய பயனாக எது அமைந்துவிட முடியும்?  




கேள்வி: கன்னட இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஓப்பிடும்போது எதை நினைத்து நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்கள்?

பாவண்ணன்:  இலக்கிய ஈடுபாடுகள் என்கிற அளவில் தமிழுக்கும் கன்னடத்துக்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் இலக்கியச் சூழல்களில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. ஒரே ஒரு எடுத்துக்காட்டை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உலக அளவில் எழுத்தாளர்கள் வந்து, ஒரு மாத அளவில் தங்கியிருந்து, அவர்கள் விரும்பும்வகையில் படைப்பு முயற்சிகளில் ஈடுபடத் தேவையான தங்குமிட வசதிகளையும் சாப்பாட்டு வசதிகளையும் ஒரு மாத காலத்துக்குச் செய்துதரும் அமைப்புகள் முப்பதாண்டுகளுக்கும் மேலாக கர்நாடகத்தில் இயங்கி வருகின்றன. அந்த அமைப்புகள் அரசு சார்ந்தவை அல்ல. தனிப்பட்ட ஆர்வலரின் ஊக்கத்தால் உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவை. தமிழ் மொழியிலிருந்து கந்தசாமி, மாலன், யோகநாதன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் என பல எழுத்தாளர்கள் அந்தக் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் வந்து தங்கியிருந்து எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். உலக அளவில் பல மொழிகளிலிருந்து பல எழுத்தாளர்கள் இப்படி வந்து செல்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு அமைப்பை தமிழில் ஏற்படுத்துவதைப்பற்றிய கனவு கூட இங்கே யாரிடமும் இல்லை. மொழி வேறுபாடு இன்றி, படைப்பாளிகளை மதித்து, அரவணைத்துச் செல்லும் பண்பாட்டுச் சூழல் மிகவும் உயர்ந்தது. அது தமிழில் இல்லை.  ஒரு படைப்பாளியின் படைப்பை, உடனுக்குடன் பிறமொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக கன்னடத்தில் நடைபெற்று வருகின்றன. மராத்தியும் கன்னடமும் இணைந்து புழங்கக்கூடிய பகுதியில் வசிப்பவர்களில் ஒரு சிலர் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்களாக எப்போதும் விளங்கி வருகிறார்கள். அவர்கள் வழியாக முக்கியமான படைப்புகள் கன்னடத்தில் எழுதப்படும் போதெல்லாம் அவை மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டுவிடும். அதுபோலவே மராத்திப்படைப்புகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுவிடும். போன ஆண்டில் வெளிவந்த பைரப்பாவின் நாவல் இந்த ஆண்டு மராத்திக்குச் சென்றுவிட்டது. தெலுங்கும் கன்னடமும் சேர்ந்து புழங்குகிற பெல்லாரி பகுதியிலும் பரஸ்பரம் மொழிபெயர்க்கப்படுகிற நிலையே நீடிக்கிறது. கனனடமும் மலையாளமும் சேர்ந்து புழங்குகிற காசர்கோடு, மங்களூர் பகுதியிலும் இந்த நிலையே நீடிக்கிறது. தமிழும் கன்னடமும் இணைந்து இயங்கும் பெங்களூரு, கோலார் பகுதி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. தமிழில் எல்லையோரப்பகுதியில் இதுபோன்ற இலக்கியப் பரிமாற்ற முயற்சிகள் எதுவுமே இல்லை. சூழல் சார்ந்த இப்படிப்பட்ட குறைபாடுகளை நாம் எப்படி களைந்துகொள்ளப் போகிறோம் என்பது புரியவில்லை. கன்னடச்சூழலின் மிகப்பெரிய பலம், கன்னடப்படைப்படைப்புகளுக்கு உடனுக்குடன் உருவாகிவிடும் ஆங்கில மொழிபெயர்ப்புகள். கன்னடத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் உள்ளார்கள். அதைவிட முக்கியமாக, கன்னடப்படைப்புகளைப்பற்றி விதந்தோதி ஆங்கில நாளேடுகளில் எழுதுகிற ஆங்கிலப்புலமை உள்ள கன்னட எழுத்தாளர்களும் பலர் உள்ளார்கள். கர்நாடகத்தில் வெளிவரக்கூடிய டெக்கன் ஹெரால்டு, டைம்ஸ் ஆப் இண்டியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ஆங்கில நாளேடுகளின் இலக்கிய இணைப்புகளைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்துவிடும். வைதேகியின் சிறுகதைத்தொகுதி வெளிவந்து  ஒரு மாதம்தான் ஆகிறது. ஆனால், அதற்குள் அந்தத் தொகுதிக்கு விரிவான ஒரு அறிமுகக்கட்டுரை ஆங்கிலத்தில் வெளிவந்துவிட்டது. பைரப்பாவின் நாவல் வெளிவந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அதைப்பற்றி ஒட்டியும் வெட்டியும் ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன. தமிழ்நாட்டின் ஆங்கில நாளேடுகளில் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைக்கும் இடம் மிகவும் குறைவானது. எழுதுவதற்கு ஆளே இல்லை என்பதுதான் உண்மை.

கேள்வி: மற்றமொழிகளில் இருந்து தமிழுக்கு வருவதுபோல தமிழிலிருந்து மற்ற மொழிகளில் செல்கிறதாஅவர்களால் வாசிக்க/பாராட்டப்படுவதாக நினைக்கிறீர்களா?

பாவண்ணன்: இதற்கு முன்பு சொன்ன பதிலிலிருந்தே, இந்தக் கேள்விக்கான பதிலைத் தொடங்கவேண்டும். தமிழிலிருந்து செல்லவில்லை என்பதே உண்மை.  தமிழ்ப்படைப்புகளுக்கு முறையான ஒரு அறிமுகம் என்பதே கிடைப்பதில்லை. தமிழறிந்த பிறமொழி ஆளுமைகள் எந்த மொழியிலாவது இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. யாருமே இல்லாத நிலையில் தமிழ்ப்படைப்புகளின் வளத்தை யார் அந்தந்த மொழிகளிடம் சொல்வார்கள்? குறைந்தபட்சமாக தமிழ்ப்படைப்புகளைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதுபவர்களாவது நம்மிடம் இருக்கவேண்டும். அந்த வகையிலும் நம்மிடம் திறமைசாலிகள் இல்லை. ஆங்கிலத்தில் எழுதக்கூடிய ஒருசிலர் மேலோட்டமான தட்டையான நூல்களைப்பற்றி எழுதுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வளமான இலக்கிய ரசனை என்பதே இல்லை. இச்சூழலில் தமிழிலக்கிய அறிமுகம் எப்படி நிகழும்? இன்றைய தேதியில், அரசு நிறுவனமான சாகித்ய அகாதெமியும் நேஷனல் புக் டிரஸ்டு மட்டுமே தமிழ்ப்படைப்புகளை பிற மொழிகளுக்கு அறிமுகம் செய்துவருகின்றன. தமிழறிந்த பிறமொழிப் படைப்பாளிகள் அநேகமாக இந்தியாவிலேயே இல்லாததால் பிறமொழியை அறிந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் வழியாகவே அவை அந்தந்த மொழிக்குச் செல்கின்றன.  வங்க மொழியைத் தெரிந்திருக்கும் தமிழரே வங்கமொழியில் மொழிபெயர்க்கிறார். இந்தி மொழியைத் தெரிந்திருக்கும் தமிழரே இந்தியில் மொழிபெயர்க்கிறார். இப்படி செய்யக்கூடாது என்பதல்ல என் எண்ணம். இப்படிப்பட்ட முயற்சிகள் இரண்டாம் நிலை முயற்சிகளாக இருக்கலாம். முதன்மை முயற்சிகளாக அந்தந்த மொழியினரே தேடி எடுத்துச் செய்துகொள்ளும் முயற்சிகளாக இருக்கவேண்டும். தமிழின் படைப்புகளை மற்ற மொழியினரால் படிக்கப்படவே இல்லை என்கிற நிலையில், பாராட்டுவது பற்றிய கேள்விக்கே இடமில்லை. இதுதான் இன்றைய சூழல்.




கேள்வி: தமிழில் நாடகம் வளர்ச்சியை முன்னெடுக்க முடியாமல் செய்தது எது என நினைக்கிறீர்கள்?

பாவண்ணன்:  நாடகத்தைப் பொருத்தமட்டில் நான் ஒரு பார்வையாளன் மட்டுமே. அந்தக் கோணத்திலிருந்துமட்டுமே என்னால் பதில் சொல்ல முடியும். சங்கரதாஸ் ஸ்வாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற ஆளுமைகளின் முயற்சிகளால் நாடகத்துறை நல்லவிதமாகவே இயங்கத் தொடங்கியது. எல்லா மொழியிலும் கையாண்டதுபோலவே தமிழிலும் புராணத்தருணங்களே நாடகத்துக்கான கருக்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. பிறகு, அவை மெல்லமெல்ல வளர்ந்து, சமூக நாடகங்களாகவும் மாறின. அதற்கிடையில், 1916 ஆம் ஆண்டில் மெளனப்படம் உருவாகி, 1931 ஆம் ஆண்டிலேயே பேசும் படம் உருவாகிவிட்டது. நாடக மேடையில் பயன்பட்ட கருக்களையே அக்காலத்தில் திரைப்படங்களும் எடுத்துக்கொண்டன. நாடகத்துக்கும் திரைப்படத்துக்கும் வேறுபாடே தெரியாத சூழல் உருவாகிவிட்டது. டி.கே.சி., கலைவாணர், சகஸ்ரநாம் போன்றோர்கள் ஏராளமான சமூக நாடகங்களை தமிழகமெங்கும் நடத்தினார்கள். திரையுலகம் சமூகப்படங்களை எடுக்கத் தொடங்கியபோது, மீண்டும் நாடக மேடையின் கருக்களோடு காட்சிப்படங்களாகின. திரையில் தோன்றக்கூடிய திறமையான நடிகர்களைத் தயாரித்துக்கொடுக்கக்கூடிய கூடமாக மட்டுமே நாடக மேடை நினைக்கப்பட்டுவிட்டது. இப்படி சில சிக்கல்கள். அடிப்படையில் நாடகம் என்பதும் திரைப்படம் என்பதும் வேறுவேறு ஊடகங்கள். புராணக்கருவை எடுத்துக்கொண்டாலும் சரி, சமூகக்கருவை எடுத்துக்கொண்டாலும் சரி, அக்கருவை வாழ்வின் மாபெரும் உருவகமாக மாற்றி முன்வைத்தாக வேண்டிய சவால் நாடகத்துக்கு உண்டு. பாஸன் நாடகங்கள்  ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அத்தகையவை. திரைப்படத்தில் காட்சிமொழியின் வழியாக அவற்றைச் சாதித்தாக வேண்டிய சவால் உண்டு. பாஸன் நாடகங்களை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், மூன்றாம் நூற்றாண்டிலேயெ உருவாகிவிட்ட சாதனைகள் அவை என்பதால்தான். அந்தச் சாதனையே இந்தியாவின் அனைத்துமொழிகளுக்கும் அளவுகோல். அந்தச் சாதனையை தமிழின் நாடகங்கள் நெருங்கிக்கூட செல்லவில்லை. ஏன் இப்படி நேர்ந்தது என்று எனக்குள் பல முறை கேட்டுக்கொள்வேன். தேர்ந்த நாடகங்களைப் பார்த்து ரசிக்கக்கூடிய பார்வையாளர்கள் நம்மிடையே உருவாகவே இல்லை என்பதுதான் உண்மை. ஒரு எடுத்துக்காட்டுமூலம் இதை விளக்கமுடியும். பெங்களூருக்கு கிழக்கே கக்கதாசபுர என்னும் கிராமம் இருந்தது. நான் இங்கே வந்த பிறகுகூட அது ஒரு கிராமம்தான். சைக்கிளில்தான் அங்கே செல்லமுடியும். அல்லது கால்நடையாகச் செல்லலாம். முதலில் அங்கே ராணுவ ஆய்வுக்கூட அறிவியலாளர்களுக்கான குடியிருப்பு தொடங்கப்பட்டது. பிறகு ஊழியர்கள் குடியேறினார்கள். இடம் மலிவாகக் கிடைத்ததால் ஒரு கல்லூரி கட்டப்பட்டது. உலகமயத்தைத் தொடர்ந்து மென்பொருளுக்கான சந்தை உருவான பிறகு ஏராளமான அலுவலகங்களும் அந்த ஊழியர்களுக்கான வாழ்விடங்களும் உருவாகின. பளபளப்பான பாதைகள் வந்தன. பேருந்து நிலையம் வந்தது. ரிலையன்ஸ் காய்கறி அங்காடிக் கிளையும் விதவிதமான உணவகங்களும் உருவாகி நிலைபெற்று வளர்ந்தன.  இவ்வளவும் பதினைந்தாண்டு காலத்தில் எப்படி உருவாகின? நுகர்வோர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஒவ்வொன்றாக முளைத்து வந்தன. கலையின் வளர்ச்சியையும் இதே அளவுகோலால் மதிப்பிடலாம். தரமான ரசனையுள்ள பார்வையாளர்கள் உருவாகியிருந்தால், நாடகங்களுக்கு சரிவு நேர்ந்திருக்காது. துரதிருஷ்டவசமாக, தமிழில் நாடகத்துக்கு நல்ல பார்வையாளர்கள் உருவாகவே இல்லை. கொள்வார் இல்லாத கடையை யார் உருவாக்குவார்கள்? அந்த நிலைதான் நாடகத்துக்கும். இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகங்கள் எத்தனை முறை தமிழ்ச்சூழலில் அரங்கேறி இருக்கும், எத்தனை குழுக்களால் அரங்கேறியிருக்கும்? யோசித்துப் பாருங்கள். நம் சூழலில் உள்ள இடர்ப்பாடுகள் என்ன என்பதை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள். கர்நாடகத்தில் கிரீஷ் கார்னாட் எழுதிய ஒவ்வொரு நாடகமும் இருநூறு முன்னூறு முறைகளுக்கும் மேல் அரங்கேற்றப்பட்டவை. இருபதுக்கும் மேற்பட்ட குழுக்களால் மாறிமாறி நடிக்கப்பட்டவை. ஒரு தகவலுக்காக இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

(மேலும்)
இரண்டாம் பகுதி:
http://kjashokkumar.blogspot.in/2015/01/blog-post_9.html

No comments: