மற்றொருவரை சார் என்று ஒருவர் அழைக்கவில்லை என்றால் அவருக்கு மரியாதை
தெரியவில்லை அல்லது திமிர் பிடித்தவன் என்பதுதான் அர்த்தம். இது தமிழகத்தில் நிலவும் பொதுவாக விஷயம். அரசாங்க வேலையில்
இருப்பவர், கொஞ்சம் வயதானவர், பேண்ட் சட்டை அணிபவர், கார் வைத்திருப்பவர், இப்படி யாரோ ஒருவராக அவர் இருந்தால் அவரை சார் என்றுதான் விளிக்கவேண்டும்.
மாறாக அவர் பெயர் சொல்லியோ, அண்ணன் என்றோ, ஏங்க என்றோ சொன்னால் அதற்குபின்னால் அவர்களுக்கு அதனால ஏற்படும்
பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆங்கிலேயர்கள்தான் சார் என்று சொல்வதை நமக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
வேலைக்காரன் முதலாளியை சார் எனலாம், அல்லது பெரிய சாதனைகளை படைத்தவரை
சார் எனலாம் என்பதே அவர்கள் வழக்கம். ஆங்கிலேயர்களும் அமெரிக்கரும் யாராக இருந்தாலும்
இதுதான் நடைமுறையில் உள்ளது.
ஆங்கில, அமெரிக்க நிறுவனங்களின் ஐடி துறையில்
உள்ள பல்வேறு ஊழியர்களுக்கு தன் பாஸை சார் என்று விளிக்க கூடாது என்று தெரிந்திருக்கும்.
ஆனால் நம் அலுவலகத்தில் நமக்கு மேலே உள்ள சகஊழியர்களை சார் என்றுதான் விளிக்க வேண்டியிருக்கும்.
இத்தனைக்கும் அவர் முதலாளியாககூட இல்லை. ஏன் இந்த முரண்பாடு.
நான் தில்லியில் இருந்த போது எனக்கு மேல் உள்ளவர்கள் சார்
என்று விளிக்ககூடாது என்பார்கள். பெயரின் பின்னால் ஜி என்றோ அவரின் இரண்டாம் பெயரை
சொன்னாலே மரியாதை என்று தெரிந்துவிடும். ஆனால் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் சார் என்று
சொல்லி அவர்களை சங்கடப்படுத்துவார்கள். ஆனால் தமிழகத்தில் நேர்மாறுதான்.
தில்லியிலிருந்து விடுமுறையில் வந்திருந்த போது திருச்சியில் ஒரு நண்பரை
சந்திக்க சென்று அவரது அறை நண்பரை அறிமுகமானபோது வாங்க போங்க என மரியாதையாக விளித்தபோதும்
நான் போன பின்னால் மரியாதை தெரியாதவன் என்று என்னை குறித்து நண்பரிடம் கூறியிருந்தார்.
மொத்தமே அவரிடம் நான்கு வார்த்தைகள்தான் பேசியிருப்பேன். வடமாநிலங்களில் எங்குமே சார் என்று அழைப்பதை
விரும்புவதில்லை. ஏன் அமெரிக்கர்களை அப்படி அழைத்தால் அரண்டு போய்விடுவார்கள். என்னை
என் பெயரை சொல்லியே அழைக்க வேண்டும் என்பார்கள் கண்டிப்பாக.
எங்கள் ப்ளாடில் இருந்த வயதான பெண்மணி ப்ளாட் பராமரிப்பு
விஷயங்களைப் பேசும்போது நான் சார்கிட்ட சொல்கிறேன் என்றார். ஒரு நிமிடம் புரியவில்லை
அவர் யாரை சொல்கிறார் என்று. ஆம் அவர் சொன்னது அவரது கணவரைதான். டிவியில் நேரடி நேயர்களிடம்
கேள்வி கேட்கும்போது மனைவியிடம் சார் என்னென்லாம் உங்களுக்கு உதவி பண்ணுவாரு என்று
கேட்பார். எனக்கு
தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார் அவர் எல்லோரையும் சார் என்றுதான் கூப்பிடுவார். ஏனென்று
எனக்கு ரொம்பநாள் புரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது அவரை நாம் சார் என்று அழைக்க
வேண்டும் என விரும்புகிறார் என்று. திருப்பி அவரை சார் அழைக்காத யாரையும் அவர் மதித்ததில்லை, பேசுவதும் இல்லை.
நான் இருக்கும் பகுதியில் உள்ள கடையில் உள்ள பையன் ஒரு ராஜஸ்தானியன்.
அவன் கொஞ்ச நாள் தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் அவர்களது ஒரு கடையில் வேலைக்கு இருந்திருக்கிறான்.
நான் தமிழகம் என்றதும், ரொம்ப மரியாதை தெரிஞ்சவங்க எல்லோரையும்
சார் என்றுதான் கூப்பிடுவாங்க என்றான்.
சார் என்பதில் நமக்கு இத்தனை ஆசை ஏன் வருகிறது. அந்த மோகம் எங்கிருந்து வருகிறது.
நமக்கே உண்டான தாழ்வுமனப்பாண்மைதான் காரணம். சார் என்று
விளிக்கப்பட்டதுமே நம்மை உயர் கணவானாக நினைத்துக்கொள்கிறோம். அதை அடையத்தான் இத்தனை
உடைகளும், படிப்பும், வேலையும் நமக்கு வேண்டியிருக்கிறது. சார் என்று விளிக்கப்படும்வரை தன் படிப்பை, தான் செய்யும் வேலையின் மதிப்பை, தன் வெளித்தோற்றத்தை பெரிதும் சந்தேகிக்கிறார்.
அதனால்தான் சாதாரண வேலைகள் எல்லாம் மதிப்பு குறைச்சலாக படுகிறது.
சார் என்று விளிக்கப்படாத வேலையை ஒருவன் செய்வான் என்றால் அவனது கஷ்டகாலம் என நினைத்துக்கொள்கிறான்.
அதில் எத்தனை வருமான வந்தால் கூட அவனது நினைப்பு அப்படிதான் இருக்கும். ஆட்டோ டிரைவர்
ஒருவர் சாதாரண ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவனைவிட அதிகம் சம்பாதிப்பவராக இருப்பார்.
ஆனால் அவரை யாரும் சார் என்று அழைக்காததால் இந்த வேலை ரொம்ப கஷ்டங்க, என் புள்ளையெல்லாம் இந்த வேலைக்கு வரகூடாது என்பார். சின்ன அலுவலக்த்தில் வேலை செய்யும்
அந்த நபரோ பல்வேறு பிரச்சனைகள், வேலையில் அவமானங்கள் சந்தித்தாலும்
அதை அவர் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை.
எனக்கு தெரிந்த ஒரு புரோக்கர் இருந்தார். வீடு மனை விற்பனை, பத்திரபதிவு போன்றவேலைகளை செய்பவர். மற்றவரிடம் காரியம் ஆகனும் என்றால்
அவரை சார் வாங்க சார் பண்ணலாம் சார் என்று ரொம்பவே குழைவார். தன்னிடம் மற்றவருக்கு
காரியம் ஆகனும் என்றால் பண்னிக்கலாம்னே வாண்ணே என்பார். நேற்று சார் என்று, இன்று அண்ணே என்று விளிக்க அவர் கவலை/கூச்சமெல்லாம்
பட்டதில்லை. அதே போல் நாளையே மீண்டும் சார் என்று விளிக்க அவருக்கு தயக்கமும் இல்லை.
எது எப்படியானாலும் சின்னதோ பெரியதோ காரியம் ஆகணும் என்றால் சார் என்று
நாம் விளிக்க வேண்டும்.
2 comments:
அசோக்குமார் சார்,சூப்பர் சார், இதனை முகப்பு வலைதளத்தில் பதியலாம் சார்.உங்கள் blog ல எழுதிவிட்டு நண்பரே இதனை படியுங்கள் என்று நீங்கள் கூறுவது எனக்கு புடிக்கல சார்...
அப்புறம் கடைசியா நான் உங்களை இத்தனை தடவை சார் சார் னு கூப்பிடறதும் உங்களுக்கு புடிக்காது. சரி சார் சார் உங்களை இனிமேல் சார் னு கூப்பிட மாட்டார் சார்..... . ...
ok, sir
Post a Comment