Monday, January 5, 2015

நெடுந்தொடர்களின் உள‌வியல்மெகா சீரியல் எனப்படும் நெடுந்தொடர்களில் வரும் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நிஜவாழ்க்கையின் பிரதிபலிப்புகள்தான் அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஒரு தினத்தின் முக்கால்வாசி நேரங்களில் ஒளிப்பரப்பாகும் தொடர்களில் உள்ள காட்சிகளையும், கருத்துக்களையும், அவர்களின் பார்வைகளையும் ஒரு சேர புரிந்து கொண்டு எந்த குழப்பங்களும், குமட்டலும், வயிற்று பொருமலும், வயிற்று போக்கும் ஏற்படாமல் சஞ்சீவி லேகியம் தின்ற கணக்காக அமர்ந்து அடுத்த நாள் தொடர்களை பார்க்கும் மக்களை வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை. வெவ்வேறு நேரங்களில் ஒளிப்பரப்பாகும் தொடர்கள் ஒரே டெம்ளேட்டைக்கொண்டு ஒரேவகையான பாத்திரங்கள், ஒரேமாதிரியான நடிகர்கள் என்று இருப்பதை ஏன் என்ற கேள்வி கேட்காமல் பார்த்துவிடுகிறார்கள்.
எல்லா டிவி சேனலைகளை சேர்த்து கிட்டத்தட்ட 20 மெகா சீரியல்கள் வரை ஓளிபரப்படலாம் என தெரிகிறது. நிஜமாக மக்கள் இந்த சீரியல்களை முழுமையாக உள்வாங்கி கொள்கிறார்களா தெரியவில்லை. ஏனெனில் சாப்பிட மறந்து, தூங்க மறந்து, உறவுகளுடன் பேச மறந்து, வெளியே செல்லும் நடை பழக்கம் மறந்து இவர்கள் காணும் இந்த மெகா சீரியல்கள் எந்தவித அடிப்படை அலகுகள் இல்லாமல் வெறும் அன்றன்றைய விசயங்களை தீவிரமாக பேசி வருபவை. மக்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த சீரியல்கள் எந்த ஒரு தரமான, நேர்மையான‌ பார்வையையோ, கருத்தையோ வலியுறுத்தி எடுக்கப்பட்டவைகள் இல்லை என்பதை அவனைவரும் புரிந்தே இருக்கிறார்கள்.அட அதெல்லாம் பாக்க கூடாதுங்க... பாக்க விறுவிறுப்பா இருக்கா அவ்வளவுதான். என்று சற்றும் சளைக்காமல் பதிலளிக்கிறார்கள்.
ஒவ்வொரு சீரியலுக்கும் கிரியேட்டிங் ஹட் என்று ஒருவர் இருக்கிறார் அவர் டிஆர்பி ரேட் எப்படி இருக்கிறது என்பதை அலசி, எந்தெந்த நாளில் அதிகம் கவனிக்கப்பட்டிருக்கிறது என்பதை கணித்து அந்த பகுதிகளை மட்டும் மீண்டும் விரிவாக்கப்படுக்கின்றன.
தீவிரமாக சொல்லப்படாதவைகளை, ஒரே மாதிரி எடுக்கப்படுபவைகளை மக்கள் தொடர்ந்து எப்படி பார்க்கிறார்கள்? இதை அவர்களிடமே கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். விஷ‌யங்கள் பழசாக இருந்தாலும் புதியதாக எடுக்கப்பட்டிருப்பதனால் பிடித்திருக்கிறது.அதாவது புதிய நடிகர்கள், புதிய சூழல், ஆனால் ஒரேவகையான‌ காட்சிகள். பதின்பருவத்தில் படிக்கப்பட்ட கிளுகிளுப்பு/காதல் கதைகள் போல. தொடர்ச்சியாக எவ்வளவு முறை பார்த்தாலும் அவர்களுக்கு அலுப்ப‌தில்லை.
இதை கவனிக்கும்போது சராசரியாக உள்வாங்கும் திறம் சாராசரி சினிமாவின் தரத்தைவிட குறைவு என தோன்றுகிறது. ஒரேமாதிரியான பின்னனி இசை, ஒரே பின்னனி வண்ணம், ஒரேவீடு, ஒரேவகை முகபாவனைகள் என்று எத்தனை ஒரே உண்டோ அனைத்துமே முன்பே தீர்மானிக்கப்பட்டவைகள். மிகச் சில சீரியல்களைத் தவிர அனைத்துமே இப்படியானவைக‌ள்தான்.
இவையெல்லாம் சீரியல்களை பார்க்காத‌ பார்வையாளர்களின் பார்வைகள். ஆனால் தயாரிப்பவர்களின் பார்வை ஒன்று இருக்கிறது. காலையில் பார்பவர்களின் யார் மாலையில் பார்ப்பவர்கள் யார் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள். காலையில் சண்டையில் மாமியார் ஜெயிப்பதும், மாலையில் மருமகள் ஜெயிப்பதுமாமான காட்சிககளைக் கொண்டு அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
பகலில் வரும் சீரியல்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் கணவனை மதிக்காதவர்களாக, கெட்டவர்களாக சித்தரிப்பதும், இரவு/மாலையில் வரும் சீரியல்களில் வேலைக்கு செல்லும் பெண்களும் அவர்க‌ளின் கஷ்டங்களும் அதை குடுப்பத்தில் இருப்பவர்கள் புரிந்து கொள்ளாததுமாக காட்சிகள் இருக்கும். இது எதேட்சமாக‌ எடுக்கப்பட்டவை அல்ல என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
அதாவது காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் பார்க்காத பகுதிகளை வீட்டில் இருக்கும் மாமியார்கள் மாமனார்கள் தான் பார்க்கிறார்கள். மாலையில் அவர்கள் வந்ததும் அவர்களுக்கு சாதகமான விஷ‌யங்களை பேசுவதுமாக இருக்கும் இந்த சீரியல்களை, அது கலைக்காக அல்லது தாங்கள் விரும்பும் ஒரு சமூக அக்கறைக்காக‌ எடுக்கப்படவில்லை, வெறும் வெற்றிப்பெற துடிக்கும் வியாபர தந்திரம் தான்.
காலையில் 10.30க்கு ஆரம்பிக்கும் இந்த சீரியல்கள் மதியம் 3.00 முடிந்து பின் 5.30 ஆரம்பமாகி 12 மணிவரை தொடர்வதை, அதன் பார்வையாளர்களாக வீட்டிலிருக்கும் பெண்கள் மட்டுமல்ல வேலைக்கு செல்லும் பெண்களும் ஆண்களும் அடிமைகளாக இருப்பதை தினம் காணமுடியும்.
அதேவேளையில் இருவேளையும் அதாவது காலையிலிருந்து இரவுவரை பார்த்தபடி இருக்கும் மக்களுக்கு இதெல்லாம் புரியாமலா இருக்கும். ஒரு விஷயத்தின் வெவ்வெறு பார்வைகள் என்று மட்டும்தான் அவர்களுக்கு புரிகிறது. அப்படியே சற்று புரிந்து கொண்டாலும் சீரியலின் மேலிருக்கும் மோகத்தில் அதை கண்டுகொள்வது இல்லை என நினைக்கிறேன்.
பெரியளவில் வெற்றிபெறும் சீரியல்கள் ஒளிபரப்பாகும்போது தெருவில்கூட யாரும் நடமாடுவதில்லை. அந்த கால சினிமாக்களில் பழைய நினைவுகளில் செல்லும் காட்சியில் கருப்பும் வெள்ளையுமாக வட்டங்கள் சுழல்வதுபோல, தொலைக்காட்சி பார்பவரின் கண்களில் இப்படி வளையங்கள் சுழ‌ழும்போல. கையில் ரிமோட்டைப் பிடித்தபடி டிவி முன்னால் அமர்ந்திருக்கும் இம்மக்கள் இப்படி தொலைக்காட்சியை பார்ப்பதைவிட ஆக்கபூர்வமாக எதையாவது செய்யலாமே என முன்பு தோன்றும். ஆனால் குடும்பத்திலும் வெளியிலும் பெருமளவும் சண்டைகளையும் சச்சரவுகளையும் இது குறைக்கிறது என்பதால் விட்டுவிடலாம் என இப்போது நினைக்கிறேன்..

No comments: