Thursday, January 22, 2015

சினிமாவும் குடியும்

தமிழகத்தில் மிக முக்கிய நிகழ்வு ஒன்று உண்டு என்றால் அது சினிமாதான். ஒவ்வொரு வெள்ளியும் சினிமா வெளியானாலும் வருடத்திற்கு 200க்கு மேற்ப்பட்ட சினிமாக்கள் வந்தாலும் தமிழ‌கத்தில் சினிமா மீதான மோகம் குறைய செய்யாது. சினிமா தவிர வேறு எந்த பொழுதுபோக்குகளும் தமிழ் மக்களுக்கு கிடையாது. கலைகளுக்கு தொடர்புடைய வாசிப்பு, இலக்கியம், புராணம், நாடகம், போன்ற எதுவும் நமக்கு கிடையாது. அப்படி இருந்தவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக கவனிப்பாரற்று காணமல் போய்விட்டது. பட்டிமன்றம் என்ற வகை மட்டும் கொஞ்சம் உயிரோடு இருக்கிறது. அதுகூட ஆழ்ந்த கலைவெளிப்பாடாக இல்லாமல் தினசரி பிரச்சனைகளை பேசுகின்ற அல்லது சினிமாவையே அடியொற்றி (சினிமா பாடல்கள், காட்சிகள் பற்றி) பேசுவதாகவே இருக்கிறது.



அடுத்த மிக முக்கியமான நிகழ்வாக சமீபத்தில் மிக அதிகளவில் அதிகரித்திருக்கும் ஒன்று குடி. எல்லா வகையான குடிப்பழக்கங்கள் தமிழ‌கத்தில் வளர்ந்துள்ளன. இந்த பழக்கமும் மற்ற எந்த பொழுதுப்போக்குகள் இல்லாத வாழ்க்கை ஒரு சுவாரஸ்ய வஸ்துவாக‌ தமிழர்களிடையே வளர்ந்திருக்கும் பழக்கமாக குடி இருக்கிறது. மற்ற எந்த கலைவகையும் ஒழித்து சினிமா வளர்ந்து வந்ததுபோல, குடியும் மற்ற எந்த கேளிக்கையையும் சமூகத்தில், மிக கேவலமாக பார்க்கப்பட்டதால், கிழே தள்ளி குடி வளர்ந்து வந்துள்ளது.
சினிமா சென்றால் கெட்டவன், மீசை வைத்தால் ரவுடி, புத்தகம் வாசித்தால் மோசமானவன், என்று ஒரு காலத்தில் இருந்த சமூகம் இன்று சற்று உயர்ந்திருக்கிறது. அதாவது சினிமா வாரம் ஒன்று பார்த்தால் நல்லவன், குடிப் பழக்கம் வாரம் ஒருமுறை இருந்தால் அவன் மிகநல்லவன். சினிமாவும், குடியையும் தவிர வேற எந்த ஒன்றையும் செய்தால் அவன் எல்லா வற்றையும்விட மிக கெட்டவனே.
ஊரில் இருக்கும் என் பழைய நண்பர்கள் வாரம் இரு திரைப்படங்களையாவது பார்த்துவிடுபவர்களாக இருக்கிறார்கள். நண்பர்களோடு ஒன்று மனைவி, குழந்தைகளோடு ஒன்று. விடுமுறை நாட்களில் டிவியில் சினிமா. அது இல்லாமல் தினமும் டிவியில் சீரியல்கள்: மதியம் ஒரிரண்டு, இரவு இரண்டுமூன்று. தொழிற்நுட்பங்கள் வளர்ந்ததும் அது சம்பந்தமான காட்சிஊடகங்கள் வளர்ச்சி பெற்றுவிட்டன. அவை பார்க்க தூண்டுவிதமாகவையோ, பல்வேறு தொழிற்நுட்பங்களை பயன்படுத்தப்பட்ட கார்டூன் படங்களோ, அல்லது புதிய வாழ்க்கைமுறையை வெளிப்படுத்தும் கதைகருக்களோ கொண்டவைகள் அல்ல. திரைப்படங்களில் அதே வகையான பழிவாங்கும் கதை, டிவி சீரியல்களில் அதே வகையான மாமியார்மருமகள் சண்டை.
நெடுங்காலமாக எந்த மனபயிற்சியோ, நுட்பமான ரசனையோ எதுமில்லாமல் கேளிக்கை மனநிலையை வளர்த்துவந்ததின் விளைவு இது. வெறும் சினிமாவை மட்டுமே உயர்ந்த கலையாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே சினிமா நடிகர் ஒரு விஷ‌யத்தை கூறுவதும், அதை தன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதாக கேட்பதும் நமக்கு பெரிய மகிழ்ச்சியளிக்கிறது.
உலகம்முழுவதும் சினிமா நடிக, நடிகைகள் விளம்பரங்களில் தோன்றுவது நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் வாழ்க்கையே நமக்கு பாடமாக இருக்கிறது. படையப்பா படம் பார்க்கும்போது பக்கத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் அதை ரஜினியின்  நிஜவாழ்க்கையாக நினைப்பதுபோல என்னிடம் தொடர்ந்து கதை கூறிக்கொண்டிருந்தார். பாருங்க அவரே அழுதுட்டாரு..., இப்ப பாருங்க அவன என்ன பண்றாருன்னு..., போன்றவைகளால் என்னால் படம் பார்க்க முடியவில்லை. ஆனால் அவரின் இந்த அறியாமை எப்போது என் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. இன்றும் அதே அறியாமைதான் தொடர்கிறது.
இன்றைய தினம் ஒரு சினிமாவிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். சராசரியாக 300ரூ வரை ஒரு டிக்கட்டிற்கு செலவழிக்க தயங்குவதில்லை. சராசரியாக ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் என்று கணக்கெடுத்துக் கொள்ளலாம். அவர்களின் குழுந்தைகளின் கல்விக் கட்டணத்திற்கு, ந‌ல்ல உடைகளுக்கு, நல்ல ஆரோக்கிய உணவிற்கு இந்தளவு பணம் செலவழிக்க நிச்சயம் தயக்கமே கொள்கிறார்கள். நமக்கு தெரிந்த நபர்களின் வருமாணத்தையும் அவர்கள் சினிமாவிற்கு செல்வழிக்கும் செலவையும் கண்டு இதை தெரிந்துக்கொள்ளலாம்.
குடிப்பவர்களை சினிமாவில் கெட்டவர்களாக காட்டியிருந்த காலம் இப்போது இல்லை. குடிப்பது மிக சாதாரண தினப்படி நிகழ்வுபோல காட்டப்படுவது மிக கொடுமையானது. இன்றைய இளைஞர்கள் குடிப்பதற்கு அரசு மட்டுமல்ல சினிமாவும் ஓரு காரணம். சினிமா கதாநாயகன் சந்தோஷம், மகிழ்ச்சியில் குடிப்பதாக காட்ட தவறுவதில்லை. அதை சுற்றியிருப்பவர்கள் அந்த மகிழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் இருக்கிறது. நிஜத்தில் அப்படியா இருக்கிறது. எந்தவித அடிப்படை பராமரிப்பும் இல்லாத பார்கள் தமிழகத்தில் தான் உண்டு. அதில் நம் மக்கள் தன் மனைவியின் நகைகளை வைத்தும், தன் சம்பாதியத்தின் பெரும்பகுதியை வைத்தும் குடித்துக் கொண்டிருக்கிறான்.
கிராமங்களில் இளம் விதவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஒரு சர்வே கூறுகிறது. ஒருசமயத்தில் கள்ளு குடித்து இறந்தவர்கள் என்று கூறப்பட்டவர்களின் சதவிகிதத்தைவிட இன்று சாராயம் குடித்து இறப்பவர்களின் சதவிகிதம் மிக அதிகம். காரணம் டாஸ்மார்க் தெருவிற்கு இரண்டு இருக்கிறது. ஒஎம்ஆர் சாலையில் வண்டியில் சென்றாலே எத்தனை கடைகள் வருகின்றன என்று அறிந்துக் கொண்டுவிடலாம். இது பெரிய சாலையில் இருப்பவைகள் ஊருக்கு உள்ளே சென்றால் இதே அளவு இருக்கும்.

சினிமாவையும், குடியையும் விட்டவர்களின் வாழ்க்கை பொருளியல் ரீதியாக சட்டென்று உயர்வதை பலர் கூறக்கேட்டிருக்கிறேன். ஆனால் அரசும், சமூக அமைப்பும் அதை விரும்புவதில்லை. அவர்கள் வாழ பிறரை கெடுக்க வேண்டியிருக்கிறதே.!

No comments: