Wednesday, January 21, 2015

வீட்டுவிலங்குகளும் குழந்தைமனமும்

விடுமுறையில் மாட்டுப்பொங்கல் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் கவனித்துக்கொண்டிருந்த என் ஐந்துவயது மகன் அன்றிரவு நான் வீட்டிற்கு வந்ததும் ஸ்டிக்கர் பொட்டு, மை என்று அலங்கரித்திருந்த நாயை பெருமையுடன் எடுத்துவந்து காட்டினான், என்னப்பா இது என்றேன். மாட்டுப்பொங்கல் பா என்றான். அது ஒரு பொம்மை நாய். மாட்டுப்பொங்கல் அன்று விலங்குகளை அலங்கரிக்க வேண்டும் என தெரிந்து வைத்திருக்கும் அவன் அறிவை நினைத்து வியந்தேன். அதேவேளையில் நான் பெற்ற மாட்டுப்பொங்கல் அனுபவங்களை அவன் பெறவில்லை என்ற வருத்தமும் ஏற்பட்டது. ஒருவேளை என் அப்பாவும் அப்படி நினைத்திருக்கலாம். நான் சிறுநகரத்தில் என் இளமைபருவத்தில் வாழ்ந்தவன், கிராமத்தில் வாழ்ந்தவர்கள் இதைவிட விலங்குகளுடன் நன்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவர்களாகவே இருப்பார்கள்.


விலங்குகளுடன் பழகுவதே பெரிய அனுபவஅறிவாக ஒரு குழந்தைக்கு இருக்கும் என தெரிகிறது. அதன் உண்ணும்முறை, மற்ற விலங்குகளை அது அழைக்கும்முறை அல்லது எதிர்க்கும்முறை என்று நிறைய சொல்லலாம். பொதுவாக மனிதர்களை அண்டி இருக்கும் விலங்குகள் மனிதர்களுக்கு தேவையை அறிந்து செயல்படுகிறது. பசு, எருமை, ஆடு, கோழி, நாய், பூனை போன்றவைகள் மனிதர்களுக்கு பலவகையிலும் பயனுள்ளதாக இருக்கின்றன.
இந்த விலங்குகளை முதன்முதலில் பார்க்கும் ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை வார்தைகளில் சொல்லிவிடமுடியாது. கோழி சேவலை முதலில் காணும் ஒருவயது குழந்தை அமர்ந்த நிலையிலேயே குதித்து ஊ... என்று சத்தத்துடன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை பலமுறை கவனித்திருக்கிறேன். பலவிலங்குகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு பெரியளவில் பரவசமும், ஆச்சரியத்தையும் அளிப்பது பசுக்கள்தான்.
அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தையை வேறு எந்த விலங்கையும் விட பசுவின் முன்னால் அதை அழைத்து சென்றால் அமைதி அடைந்துவிடும். பசுக்களின் பிரம்மாண்டமும், அசையும் கொம்புகள் கொண்ட அதன் முகமும், அதன் வாள்களின் சுழற்சியும் குழந்தையை அமைதியடைய‌ செய்துவிடும்.
மாட்டு தொழுவத்திலேயே குழந்தைகள் இருக்க பிரியப்படுவார்கள். நான் சிறுவனாக இருந்த போது எதிர் வீட்டில் ஒரு மாட்டு தொழுவம் இருந்தது. அங்கிருந்த ஒரு பசு கயனி தண்ணீர் அருந்துவதை நாளெல்லாம் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறேன். அதன் கழுத்துவழியே நீர் செல்லும் அசைவுகளை கவனிக்க மிகுந்த ஆர்வமாக இருக்கும். பின் கன்று அதன் மடியை சுவைக்கும்போது மாடு கொள்ளும் ஆர்வமும், கன்று நக்கல்களும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
மாடு அப்படி பால்கொடுக்கும் போது, இரண்டு கைவிரல்களை ஒன்றன்பின் ஒன்றாக புல்லாங்குலலாக வாய்க்கு அருகில் வைத்து கால் ஒன்றை மாற்றிவைத்து நான் தான் கிருஷ்ணன் என்று கூறி அந்த வீட்டு மனிதர்களை சிரிக்க வைத்திருக்கிறேன்.
மற்றொரு எதிர்வீட்டில் நிறைய மாடுகள், எருமைகளும் உண்டு. என்னேரமும் சாணத்தின் வாடையுடன் அந்த வீட்டை கடந்து செல்லவேண்டியிருக்கும். பால் கரக்கும்போதுமட்டும் பார்க்க கூடாது என்பார்கள். அந்த நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அங்குதான் இருந்திருக்கிறேன். தவிடு, புண்ணாக்கு போன்றவைகளை போட்டு ஒரு பெரிய மண் தொட்டியை கலக்கும்போது அதன் சுழற்சியை கவனித்துக் கொண்டிருப்பேன். அப்போதே சில மாடுகள் மூக்கை உறிஞ்சி எச்சில் ஒழுக தலையாட்டிக் கொண்டிருக்கும். கயிறை அவிழ்த்ததும் பிடித்திருப்பவரை தரதரவென்று இழுத்துக் கொண்டு முன்னால் வந்து குடிக்கும்.
ஒரு நாளில் சிறுவர்களான எங்களுக்கு பல விளையாட்டுகள் இருந்தாலும் ஒரு நாளில் சில நேரங்களாவது ஆடு, மாடு, கோழி இவற்றோடு கொஞ்ச நேரங்கள் கழிந்தன. குறைந்தது பத்து மாடுகளாவது இருக்கும். அவைகளை குளிப்பிக்க, ஓட்டிசெல்ல என்று ஒருவர் வருவார். ஒரு கால் சற்று விந்தி ஒருகையால் அந்த காலின் மேல் வைத்து நடந்துவருவார். மாடுகளைப் பற்றி அத்தனை விவரங்களும் அவருக்கு தெரிந்திருக்கும். இந்த மாட்டுக்கு ஒடம்பு சரியில்ல, இதை காளைக்கு போடனும் என்று எல்லாவற்றையும் விலாவரியாக கூற அவரால் முடியும்.
அவர் வந்ததும் அந்த வீட்டில் இருக்கும் ஒரு நாய் ஒன்று அவருடன் ஒட்டிக்கொண்டுவிடும். அவர் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவது, அவருக்கு அளிக்கப்படும் உணவு, சிற்றுணவுகளை இருவரும் பகிர்ந்து உண்பதும் நடக்கும்.
இன்றைய தேதியில் எந்த விலங்குகளும் குழந்தைகளுக்கு நண்பனில்லை. எல்லா விலங்குகளும் கார்டூன்களாக மாறிவிட்டன. அவைகளின் சேட்டைகளை விளையாட்டுகள், வளர்ச்சிகள் எல்லாம் கார்டூன்களாக கண்டுகழிக்கின்றன குழந்தைகள்.
உண்மை சொல்வதென்றால் குழந்தைகள், சிறுவர்களுக்கு வீட்டுவிலங்குகள் பிடித்திருக்கின்றன. ஆனால் பள்ளி, வீட்டுபாடம், தேர்வு இல்லாத விடுமுறை நாட்களில்கூட விளையாட அவர்கள் பக்கத்தில் வீட்டுவிலங்குகள்தான் இல்லை.

No comments: