Tuesday, January 20, 2015

காலந்தோறும் உணவு



ஒரு காலை உணவகத்தில் சாப்பிடும்போது பக்கத்தில் இருந்த‌ 70 வயது மதிக்கதக்க‌ ஒரு முதியவர் ஒருவ‌ர் ஒரு பிளேட் ரவா கேசரியை முழுமையாக‌ உண்டு கொண்டிருந்தார். சற்று ஆச்சரியம் தான். அவரின் இந்த வயதில் பொதுவாக சர்க்கரை நோயாளியாக இருப்பார்கள் அல்லது இனிப்பை விட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் நிதானமாக‌, உற்சாக‌ உடல்மொழியுடன் அதை சாப்பிடுவதைப் பார்க்கும்போது அதை நீண்ட நாட்களுக்குப் பின் அவர் மிகவிருப்பி உண்ணும் உணவாக‌ இருக்கும் என‌ தோன்றியது. ஒருவேளை அவருக்கு சக்கரை கடுமையாக இருந்திருக்கலாம், அதன் அளவு குறைந்தபின், டாக்டர்களின் பரிந்துரையின்படி, அந்த மகிழ்ச்சியை கொண்டாட கேசரியுடன் தொடங்கியிருக்கலாம் என நினைக்கிறேன். இது ஒரு நினைப்புதான். இருந்தாலும் இந்த வயது உள்ளவர்களின் மிகப்பெரிய ஆசையே அவர்களுக்கு தடை செய்யப்பட உணவுகளை உண்ணவேண்டும் என ஆசைப்படுவதுதான்.
உறவு வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் நானறிந்த மனிதர்கள், குறிப்பாக‌ வயதானவர்கள், பேச்சினூடே தான் விரும்பும் உணவு தன‌க்கு கிடைப்பதில்லை அல்லது உண்ணமுடிவ‌தில்லை என்று புலம்புவதுதான் அதிகம் இருக்கும். வயது ஏறஏற உணவுகளின் மீது தீராத ஆசை வளர்ந்து வருகிறது. பதின்பருவம் வரை பிடிக்காத உணவுகளும், பிடிக்காத குறிப்பிட்ட பதார்த்தங்களும் என்று சிலது இருக்கும். ஆனால் ஒரு வயது தாண்டிய பின் அப்படி பிடிக்காதவைகள் இருப்பதில்லை என்பதை நாம் காணலாம். இந்த உணவுகளை விட்டுவிட்டேன் என்று அவர்கள் கூறுவதுகூட தாற்காலியமானதுதான். அந்த முதிய‌ வயதில் எல்லா உணவுகளும் விருப்பமுடையவையாக‌ இருக்கின்றன‌. இளவயதில் பிடிக்காது போன‌ கசப்பு, துவர்ப்பு போன்ற‌ சுவைகளும் அவர்களின் தினசரி உணவுகளுடன் சேர்க்கப்பட்டுவிடுகிறது.
சில சமயம், அதீத ஆசையில் ஏதாவது ஒரு விருந்தில் அவர்களுக்கான தடைகளை மீறி மிக அதிக அளவு உண்டு அவதிபடுவதும் இருக்கும். எனக்கு தெரிந்த வயதான‌ பெண்மணி ஒருவர் ஒரு கல்யாண‌விருந்தில் அவருக்கு விலக்கப்பட்டிருந்த புலால் உணவை அதிக அளவு சாப்பிட்டுவிட்டார். மறுநாள் அவரால் எழமுடியவில்லை. இடதுபக்கம் முழுவதும் செயல் இழந்துவிட்டது. பேசக்கூடமுடியாமல் பலவகை கஷ்டங்களுக்குபின் இரண்டு மாதத்தில் இறந்துபோனார். அப்படி அவர் உண்ணாமல் நாக்கை கட்டுபடுத்தியிருந்தால் நிச்சயம் இன்னும் பல ஆண்டுகள் இருந்திருப்பார். என் பெரியப்பா உடல்நிலை சரியில்லாமல் கிடந்தபோது இந்தந்த உணவுகள் மருத்துவர் விலக்கியுள்ளார் என்று கூறியதும், ‘அந்த டாக்டர‌ சாப்பிடவேணாம்ன்னு சொல்லு, அவர் சாப்பிடாம இருப்பாராமா என்று கேட்டார் கோபமாக.
ஏன் உணவை நம்மால் விலக்க முடிவதில்லை? அதுவும் ஒரு குறிப்பிட்ட சிலவகை உண‌வுகள் மட்டும்தான் உணவின் ஒரு பகுதியை நாம் விலக்கப் போகிறோம் என்பது கூட நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொதுவாக தடை செய்யப்படும்போது அதன் மீது அதிக ஆர்வம் உண்டாகிறது போலும். அவர்கள் விரும்பிய‌ அந்த உணவுகளில் இருக்கும் ருசியும் மணமும் காலமெல்லாம் நாவில் தங்கி அதற்கான நாளை நினைத்து நம்மை ஏங்க வைத்துக் கொண்டேயிருக்கிறது என தெரிகிறது. புதன்கிழமையும், ஞாயித்து கிழமை வந்தா போதும் நாக்க தொங்கப் போட்டு கறிகடை வாசல போய் நிப்பா என்று அவர் மனைவியை நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். ஆம் உண்மைதான் எல்லா மனிதர்களும் உணவிற்கு அடிமையாகிக் கொண்டே போகிறார்கள். இன்றைய தேதியில் பல வெளிநாட்டு உணவுவகைகள் பீட்சா, ரோல்ஸ், நூடுல்ஸ் என்று பலவையும் இந்தியாவிற்கு வந்துவிட்டன. பலவகை ருசிகள் பலவகை நறுமணங்கள் நம் நாக்கும் நரம்புகளும் கண்டபின்பும் உண்ணும் உணவை விடுவதோ உண்ணும் உணவின் அளவு குறைத்துவிடுவதோ முடிவதில்லை.
உணவிற்கு அடிமையாவது ஆல்கஹால், புகையிலைக்கு அடிமையாவது போலத்தான். வயதின் காரணமாக உணவுகளின் ருசி அதிகரித்துக்கொண்டே போகிறது ஆனால் உடலின் ஏற்றுகொள்ளும், செரிக்கும் திறன் குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொருவருக்கும் சில உணவுகள் ஒத்துக்கொள்வதும் ஒத்துக்கொள்ளாத‌ சிலவைகள் ஒதுக்க வேண்டியவையும் இருக்கும். அவைகளை கண்டறிந்தும் தேவையானவைகளை மட்டுமே உண்ணுவதும் ஒவ்வொருவரின் கடமை என நினைக்கிறேன்.. சிலர் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாத‌/ஆரோக்கியமில்லாத உணவுகளை ருசியின் காரணமாக தொடர்ந்து உண்ணுவதை கண்டிருக்கிறேன். உதாரணம் சிக்கன், பஜ்ஜி வகைகள்.
அசைவஉணவு உண்பவர்களுக்கு சிக்கனும், சைவஉணவு உண்பவர்களுக்கு உருளைக்கிழங்கு, வாழைக்காய் பஜ்ஜியும் ருசியான பொருட்கள். இந்த இரண்டுமே வயதில் செரிமான பிரச்சனைகளை உண்டாக்குபவைகள். சிக்கனையும், வாழைக்காய் பச்சியையும் சாப்பிட்டு அவதிப்படாத வயதான‌ நபர்களே இல்லை எனலாம்.
மேலைநாடுகளில் புதியதாக கட்டப்படும் வீடுகளில் அடுக்களை இல்லாமல் கட்டப்படுவதாக நாஸ்டால்ஜிக் கட்டுரைகள் எழுதப்படும் அளவிற்கு வேகமாக இந்த பாணி அங்கு பரவி வருகிறது. எல்லா வேளைகளிலும் வெளியிலிருந்தே உணவுகளை வரவழைத்து உண்பவர்களுக்கு அடுக்களை தேவையில்லை அல்லவா? இருசக்கர வாகன‌த்தில் பீட்சாவை டெலிவரி செய்யும் வசதி இதனால்தான் அங்கு பரவியது. இந்தியாவில், தமிழகத்தில் பீட்சா டெலிவரி செய்யும் வசதி பரவியதுபோலவே அடுக்களையற்ற‌ அதே மாதிரியான வாழ்க்கைமுறை பரவ அதிக காலம் ஆகாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் நம் சீதோஷண நிலைக்கு தகுந்தாற்போல உண்ணும் பழக்கம் மறைந்து கொஞ்சம் காலம் ஆகிவிட்டது. வெப்பமண்டல நாடுகளுக்கு ஒத்துக்கொள்ளாத பலவகை உணவுகளை தொடர்ந்து உண்டுகொண்டே இருக்கிறோம். அவற்றில் ஒன்று சீஸ். அமெரிக்காவில் சீஸ் உண்ணும் அளவு ஒவ்வொரு வருடமும் ஏறிவருவதும் அதனால் இதய நோய்கள் அதிகரிப்பதாக மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. மற்றொன்று சீனஉப்பு எனப்படும் அஜினோமோட்டோ. இது உண்பவர்களுக்கு வயற்று அல்சரிலிருந்து வயற்று கேன்சர் வருவதாக தொடர்ந்து கூறிவருகிறார்கள் மருத்துவர்கள். ஆனால் சீன உணவுகள் நூடுல்ஸ், சூப் போன்றவைகள் வந்ததுமே இந்த உப்பும் கூடவே வந்து நோய்களும் வரத்தொடங்கிவிட்டன.
இதில் மற்றொன்று ஜங்க் ஃபுட், இது வந்ததும் குழந்தைகளில் தேவையற்ற அதீத வளர்ச்சிகள் தொடங்கிவிட்டன. அந்த உணவுகளில் இருக்கும் எண்ணெய், அதற்கு போடப்படும் மெழுகு போன்றவைகள் குழந்தைகளின் உடல் நலத்திற்கு பெரும் தீங்கு என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தாலும், அரசாங்கமோ, சமூகநல இயக்கங்களோ பெரிதாக எதுவும் செய்வதில்லை. முக்கியமான காரணம் உடனடியாக வெளிப்படையாக எந்த தீங்கும் தெரிவதில்லை அத்தோடு அப்படி புதிதாக வரும் பிரச்சனைகளுக்கு இந்த உணவு பழக்கம் தான் என்று உடனடி தீர்ப்பு சொல்லப்படுவதில்லை. (அப்படி சொல்லப்பட்டாலும் அரசியல்வாதிகளால் தொடர்ந்து மறைக்கப்படுவதும் உண்டு.)
உணவு என்பதை ஒரு வகையான நுகர்வுபொருளாக பார்க்கபடுவது தவறு. கார், பிரிஜ், செல்போன் என்பது மாதிரி தொழில்நுட்பத்துடன் அதை சம்பந்தப்படுத்தி மெக்டொனாலில் தின்பது உயர்வர்க்கம் என நினைப்பது ஐரோப்பிய, அமெரிக்க குடும்பங்கள் கொடுத்த விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். மேற்குலகில் குடும்பம் என்ற அமைப்பு சிதைவதால், அடுக்களைகள் எடுக்கப்பட்டு, குடும்பங்கள் என்ற அக்கறையற்று கடைகளுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. நமக்கு அப்படியல்ல, நம் உணவுகளை நாம்தான் தயாரிக்க வேண்டும். நம் குடுப்பத்திற்கு எது சிறந்த‌து, எது உகந்தது என கண்டறிவதுபோல நம் உடலுக்கு எது சிறந்தது என கண்டறியவேண்டும்.
நம் உடலுக்கு சுவை என்ற ஒரு காரணத்திற்காக குட்பைகளை இடுவது தவறானது. எல்லாவற்றிலும் கொஞ்சம் சாப்பிடவேண்டும். பிடிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதும், சில உணவுகளை தொடர்ந்து தவிர்ப்பது கூடாது என்பது எல்லா மருத்துவ குறிப்புகளும் கூறுகின்றன.
வண்டிக்கு நல்ல பெட்ரோல் எங்கு கிடைக்கிறது, எங்கு போடும்போது நல்ல மைலேஜ் கிடைக்கிறது என்று தெரிந்து நாம் தேடிச்செல்லும் இடங்களைப் போல் எது நல்ல உணவு, அது எங்கு கிடைக்கிறது என்று அறிந்து கொள்ள ஆசை கொள்ள வேண்டும். வண்டிக்கு நல்ல பெட்ரோல்போல‌, நம் உடலுக்கு தேவையான‌ நல்ல ஆரோக்கிய உணவுகள், அது இந்திய உணவாக அல்லது அது சுவையற்றதாக அல்லது நம் நாக்கிற்கு பிடிக்காததாக இருந்தாலும், தொடர்ந்து எடுத்துக்கொள்வதே மட்டுமே நம் உடலுக்கு எப்போதும் நன்மை பயப்பதாக அமையும்.

No comments: