புத்தகக் கண்காட்சியை காண செல்வதும் அதைப் பற்றி
கட்டுரை எழுதுவதும் ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது. புத்தகக்
கண்காட்சியைப் பற்றி எழுதும் எந்தஒரு கட்டுரையும் தினம் நடக்கும் ஒரு சாதாரண
நிகழ்வாகதான் பார்க்கப்படுகிறது செய்தி நிகழ்சிகளைப் போல, அறிக்கைகள் அறிவித்தல்போல,
புத்தகக்
கண்காட்சியின் கட்டுரைகள் வெளியாகின்றன. இதைப்
படிக்கிறவர்கள் அதிகமாகிவிட்ட ஈசல்களை
பிடிக்க எண்ணெய் தடவிய காகிதத்தை பயன்படுத்துவதுபோல கட்டுரைகளை வடிகட்டி கடந்து செல்கிறார்கள். கட்டுரைகளில் பேசப்படுகின்ற செய்திகளும் ஒன்றுபோல தங்களுக்கு
ஏற்பட்ட அனுபவங்களை ஒரே மாதிரி விளக்கி செல்வதுதான் எல்லா கட்டுரைகளிலும் காணக் முடிகிறது. அடுத்த ஆண்டும் வந்துவிடுகிறது, சென்னை
புத்தகக் கண்காட்சி போர்டில் முன்னால் இருக்கும் எண்ணில்
ஒரு எண் கூடிவிடுகிறது. அந்த ஆண்டு முந்தைய ஆண்டைவிட
எத்தனை அதிக பரப்பளவில் எத்தனை அதிக கடைகள்,
எத்தனை
பாப்க்கார்ன் கடைகள், எத்தனை தண்ணீர் தொட்டிகள் போன்ற
விவரங்கள் தாங்கிய அந்த படங்களுடன் கூடிய கட்டுரைகள்
வெளியாகி மீண்டும் பரபரப்பாகி விடுகின்றன. ஊடகங்களும் புத்தக கடைகாரரின் பேட்டியும்,
சாப்பாட்டு
கடைகளின் முதலாளியின் பேட்டி தொலைக்காட்சிலும் வாரஇதழ்களிலும் வெளியிட்டு மேலும்
பரபரப்பூட்டுகிறார்கள்.
ஆனால் புத்தகக் கண்காட்சி என்பது
அவ்வளவுதானா? வெறும் சம்பிரதாய பேட்டிகளும், கட்டுரைகளும் மட்டும் வாசகபரப்பை நிர்ணயிக்கிறதா? ஒவ்வொருமுறையும் புத்தக
கண்காட்சிக்கு சென்று வந்து யோசிப்பது இதுதான். இவைகளெல்லாம் தேவைதான் என்றாலும் எல்லா சம்பிரதாயங்களைக் கடந்து புத்தகக்
கண்காட்சி பொருட்காட்சிபோல் ஒரு பொருளியல் நிகழ்வாக நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்பதுபோல இருக்கிறது. தீவிர வாசிப்பு மனநிலைகொண்ட
ஒவ்வொரு வாசகர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வியாககூட இது
இருக்கும் எனவும் நினைக்கிறேன்.
ஒரு வேலை, பின் ஒரு குடும்பம், பின் ஒரு வீடு என்பது வரிசை மாறாமல் நடக்கும் ஒரு தமிழரின்
வாழ்வியலாக இந்த புத்தக கண்காட்சியும் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் மிக சம்பிரதாயமான மிக அவசியமான உலக
வழக்கு என்று கூறிக் கொண்டாலும், புத்தக வாசிப்பு அதைசார்ந்த ஒரு நிகழ்வுகளும், பொருட்காட்சி போன்ற ஒரு ஆரவாரமான நிகழ்வாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொருட்காட்சிக்கு நாம் கொள்ளும் பரபரப்பிற்கும் புத்தக்
கண்காட்சிக்க நாம் கொள்ளும் பரபரப்பிற்கும் இடையே பல்வேறு மைல்தூரம் இருக்கிறது. அதை இப்படி சொல்லலாம் என நினைக்கிறேன். பொருட்காட்சி புறவயமான
வெறும் சந்தோஷங்களை, நுகர்மனம் சார்ந்த வாடிக்கையாளர்களின்
பகுதி. புத்தக கண்காட்சி அகமன நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் முழுவதும் தன்வயம்
சார்ந்த ஒத்த கருத்துநிலைவாதிகளின் தொகுப்பு.
இன்றும் குடும்பங்களில் வாசிப்பு என்பது சமூக நிகழ்வாக
பார்க்கபடுவதில்லை.. புத்தக வாசிப்பு நேர விரயமாகவும், அத்தியாவசியமற்ற வாழ்க்கைக்கு தேவையற்றதாக மட்டுமே இன்றும் பார்க்கப்படுகிறது. பொதுஇடத்தில்
புத்தகம் வாசிப்பதும், நடைமுறையில் உள்ள ஆங்கில கலப்பில்லா
தமிழை பேசுவதும், புத்தகத்தின் பெயர்களையும், அதன் மேற்கோளை காட்டுவதும்கூட
இவன் நம் இனத்தை சேர்தவனல்ல என்பது போல பார்க்கப்பட்டு வெறுத்து ஒதுக்குவதுதான்
அதிகம் நடக்கிறது.
ஆனால் புத்தகத்தின் மீது அதீத
ஆர்வம் கொண்ட ஒரு இளைய தலைமுறை இருக்கத்தான்
செய்கிறது. அது பல இடங்களில் சாதாரணமாக நாம் புத்தகங்களுடன் செல்லும்போதே அதை
காணமுடியும். இது என்ன புத்தகம், எங்கு கிடைக்கும் என்று
கேட்டு தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அது ஒரு
வயதுவரைக்கும்தான் என நினைக்கிறேன். படிப்பு, வேலை, திருமணம் வீடு என்று
வரும்போது முழுவதும் அந்த ஆர்வத்திலிருந்து விலகிவிடுகிறார்கள். மிகக்குறைவான
எண்ணிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிப்பை அவர்கள் வாழ்வியலின் ஒரு
பகுதியாக எடுத்துச் செல்கிறார்கள். அப்படி எடுத்துச் செல்லமுடியாதவர்களுக்கு பல காரணங்கள் இருக்கிறது.
பள்ளி கல்லூரியில் படிக்க வேண்டியவைகளை எளிமையாக்கி மனனம் செய்து, மதிப்பெண் கிடைக்காதவைகளை சாய்ஸில்விட்டு பழகியவர்களுக்கு தீவிர
வாசிப்பு என்பது கடினமானதாக இருக்கிறது ஆங்கில மீடியத்திலேயே படித்தவர்கள் தமிழ்
வாசிப்பை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார்கள். கூட இருக்கும் அப்பா, அம்மா, மனைவி/கணவன் இவர்களின்
வாசிப்பு என்பது ‘பைசா பிரயோஜம் உண்டா’ என்கிற பார்வையும் சீண்டல்களின் காரணமாக வாசிப்பை விட்டவர்களே
அதிகம்.
பெஸ்ட் செல்லர்,
பரபரப்பு
அபுனைவு புத்தகங்களை மட்டுமே படிப்பவர்களிடம் நாம் அதிக எதிர்ப்பாக்க முடியாது.
அவர்களின் வாசிப்பு செயல் ஒரு வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் என்பது மாதிரியானது.
மக்களுக்கு வீடு கட்டும்போது அடுப்படி இத்தனை அடி, ஹால் இத்தனை அடி, பெட்ரூம் இத்தனை அடி என்று
பிரித்து பார்த்து முன்பே முடிவு செய்துதான் கட்டுகிறார்கள். டிவி வரவேண்டிய
இடத்தில் வெளிச்சம் எப்படி வரவேண்டும், வாஸ்த்துபடி அடுப்படி எங்கு
இருக்க வேண்டும், பெட்ரூமில் பெட் எந்த திசையில்
இருக்கவேண்டும் போன்றவைகள் மிக கவனமாகவும் கறாராகவும் செய்து முடிப்பார்கள்.
செருப்பு அலமாரி, சோகேஸ் அலமாரி போன்றவைகளின்
அளவுகள்கூட அப்படிதான் சரியாக தீர்மானிக்கப்படுகிறது.
ஆனால் வாசிப்பு அறை அல்லது புத்தக அலமாரி என்பதைப்பற்றி இதுவரை யாரும் பேசி நாம் பார்த்திருக்க முடியாது.
மேலைநாடுகளில் புத்தகமும் அதற்கான அறையும் தனியே
வைக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கான
புத்தகங்கள் அங்கு இருக்கும்.
பொருளாதார நிலையில் உயர்ந்துவிட்டபின்னும் இன்றும்
புத்தக அறை அல்லது புத்தக அலமாரி இல்லாத வீடுகளாகதான் கட்டிக்கொண்டிருக்கிறோம். இன்றும்
நம் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடம் இது என்னுடைய புத்தகம் என்று ஒன்று
இல்லை அந்த இடத்திற்கு நாம் வரும்வரை புத்தக வாசிப்பு என்பது சமூக நிகழ்வாக
இல்லாமல் வெறும் நுகர்வாகவே இருக்கும்.
No comments:
Post a Comment