Wednesday, January 14, 2015

பெருமாள் முருகனின் சரணாகதி



 
பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலை அதில் சொல்லப்பட்ட ஒரு பகுதிக்காக‌ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டி, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து மன்னிப்பு கேட்கவைத்து, என்று பல்வேறு விஷயங்கள் செய்யப்பட்டு புத்தகம் திரும்ப பெற்றுக்கொள்வதாக அதில் உள்ள திருச்செங்கோடு என்று ஊரின் பெயரை நீக்குவதாக, இனிமேல் எழுதப்போவதில்லை என்றும் கூறவைத்திருக்கிறார்கள்.
ஒரு எழுத்தாளருக்கு மட்டும் பெரிய இழப்பு அல்ல இந்த சமூகத்திற்கும்தான். இந்த ஒரு விஷயம் கேரளாவிலோ கர்நாடகாவிலோ நடந்திருக்காது என நினைக்கிறேன். பஷீர் இறந்தபோது முதல் பக்கம் முழுவதும் செய்தி வந்ததாக கூறுவார்கள். அனந்தமூர்த்தி இறந்தபோது அப்படி கர்நாடகாவில் நடந்து நாமே பார்த்தோம். தமிழகத்தில் பழமையான மொழி, தொன்மையான மொழி, தனிபெரும் மொழி என்று கூறிக்கொள்ளும் நாம் இன்னும் மொழி, இலக்கியம் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இருப்பதும், நம்மைவிட சகிப்பு தம்மையுடன் அவர்கள் செயல்படுவது நாம் இன்னும் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது தெரிவித்துவிடுகிறது.




பெருமாள் முருகன் தவறாகவே எழுதியதாக இருந்தால்கூட, அவர்கள் கூறும் நன்கு எழுதிய எந்த‌ எழுத்தாளரை நம் சமூகம் இதற்குமுன்பு கொண்டாடி இருக்கிறது. பாரதியை, புதுமைபித்தனை, திஜானகிராமனை, சுந்தரராமசாமியை கண்டுகொண்டதே இல்லை. அவர்களுக்கு தேவையான சின்ன மரியாதையைகூட காட்டாத இந்த சமூகம் தான் இப்போது பெருமாள் முருகனை மிரட்டியிருக்கிறது. இதற்கு முன்னால் ஜோடி குரூஸ், ஜெயமோகன், சுஜாதா என்று தொடர்சியாக மிரட்டப்பட்டிருந்தாலும் பெருமாள் முருகனை அரசு அலுவலகரின் முன்னால் கையெழுத்து வாங்கியிருப்பது என்பதெல்லாம் அதிகமே.
இதற்கு முன்பு பெருமாள் முருகன் சாதியும் நானும் என்ற கட்டுரை எழுதியதிலிருந்து அவர் மேல் ஜாதியவாதிகளின் கோபம் அதிகரித்திருந்தது. சரியான சமயம் கிடைத்ததும், வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட ஒரு நாவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது இந்துதுவத்தின் வெற்றி என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்துதுவத்தை ஆதரிக்கும் பத்திரிக்கையாளர்கள் அவரது திரும்பபெறும் இந்த செயலும், இனி எழுதப்போவதில்லை என்ற வார்த்தையும் பெரிதளவில் அவர்களை பாதித்திருக்கிறது என தெரிகிறது. இந்துதுவ பின்புலமுள்ள பிஜேபி இந்த பிரச்சனையை எடுத்தது அவர்களின் ஓட்டு வங்கிகாக மட்டுமே. அங்கிருக்கும் கவுண்டர்கள் இதை பெரிய பிரச்சனையாக கொண்டுசெல்ல பிஜேபியை துணைக்கு கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான்.
வாசிப்பவர்கள் பத்து சதவிகிதம்கூட இல்லாத இந்த சமூகத்தில் இது உண்மையல்ல, க‌தைதான், புனைவுதான், எப்படி சொல்லி புரியவைப்பது. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்று சொன்னால் புரிந்துவிடபோகிறதா?
புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்கூட பதிப்பகங்களும், எழுத்தாளர்களும், வாசகர்களும் ஒன்று சேர்ந்து பெருமாள் முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியவில்லை என்பது வேதனைதரும் விஷ‌யம். அப்படி ஆதரவு தெரிவித்தவர்கள்கூட மிகமிகக் குறைவு. அரசியல்சார்புடைய ஒரு எழுத்தாளர் இப்படி எழுதியிருந்தால் அவருக்கு இவ்வளவு மிரட்டல்கள் நிகழ்ந்திருக்காது என தோன்றுகிறது. இனி எந்த எழுத்தாளரும் நடுநிலைவாதியாக தொடரமுடியாதுபோல் இருக்கிறது. இது எழுத்தாளர்களுக்கு இருண்டகாலம்.

1 comment:

கிருஷ்ண மூர்த்தி S said...

இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம், பதிப்பாளர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும் கொஞ்சம் சேர்த்தே சொல்லியிருக்கலாமே! அதிலேயே கொஞ்சம் வெளியே தெரியாத சங்கதிகள் கொஞ்சம் புரியுமே !