முன்பு பழைய சினிமாக்களில் நாயகன் கிராமத்திலிருந்து கிளம்பி
நகரத்திற்கு செல்லும் முதல் காட்சியுடன் படம் ஆரம்பிக்கும். அதற்குபின் டைட்டில்கள்
வரும் அந்த அளவிற்கு அடுத்து என்ன என்கிற சஸ்பென்ஸை உருவாக்குகிறார்கள். இது எல்லா
இந்திய மொழி திரைப்படங்களிலும் காணலாம். அந்த சமயங்களில் நகரம் மிக செலவு ஏறியதாக இருந்தது. இன்றும் நகரம்
செலவேறிய விஷயம்தான் ஆனால் அதற்கு தகுந்தாற்போல் வரவு வரகூடிய இடமும் இன்று நகரம்தான். முன்பு பஞ்சத்திற்காக நகரத்திற்கு
வந்துகொண்டிருந்தார்கள் இன்று வேலைக்காக வந்து கொண்டிருந்தவர்கள் மீண்டும் பஞ்சத்திற்காக
வர தொடங்கியிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் செய்தி.
எங்கள் ஊர் கும்பகோணத்திற்கு பக்கத்தில் இருந்த கிராமங்களுக்கு
சென்றிருந்தேன். இரு சிறுநகரங்களை இணைக்கும் சாலையில் உள்ள கிராமங்களில் மட்டும் மக்கள்
நடமாடுகிறார்கள். அதிலிருந்து பிரிந்து செல்லும் ஊர்களில் பொதுவாக மக்கள் நடமாட்டமே
இல்லை. எப்போதும் அப்படிதான் என நினைத்திருந்தேன். ஆனால் ஊர்களில் மக்களே இல்லை. வேலை
படிப்பு என்று நகரங்களுக்கு வந்துவிட்டார்கள். அதனால் குடிநீர், சுகாதாரம் என்று எந்த வசதியும் இல்லாமல் கிராமங்கள் கேட்பாரற்று
கிடக்கின்றன. சிறுநகரத்தை தாண்டியதுமே குடிநீர் கிடைப்பதில்லை. சிறுநகரத்தில் இருக்க
வசதியற்றவர்கள் சிறுநகரத்தின் ஓரத்தில் உள்ள சின்ன கிராமங்களில் இருக்கிறார்கள். தண்ணீர்
தேவைக்கு உள்ளூரில் வந்து எடுத்துச் செல்கிறார்கள். கிராமங்களில் அவசரப்பட்டு வீடு வாங்கியவர்கள்
இன்று விற்கமுடியாமல் திணறுகிறார்கள். ஒவ்வொரு சமயம் பக்கத்து கிராமங்களுக்கு செல்லும்போது
அங்கு ஏற்படும் மாற்றங்களில் எதோ ஒரு அவசரம் இருப்பது தெரியும். இருப்பதை எடுத்துக்கொண்டும்
ஓடிவிடும் அவசரம்தான்.
ஆமாம் கிராமங்களில் விவசாயம் பொய்துக் கொண்டிருக்கின்றன.
எங்கள் ஊர் நண்பர் ஒருவர் காவேரியில் சரியாக தண்ணீர் வந்தால் அந்த வருடம்
சென்னைக்கு, திருப்பூருக்கு செல்லும் கூட்டம்
குறைந்துவிடும் என்பார். இன்று அப்படியே சரியாக தண்ணீர் வந்தாலும்
விவசாயம் செய்ய ஆள்வருவார்களா என்பது சந்தேகம்.
ஒரு இருபத்துஐந்து வருடங்களுக்கு முன்னால் சென்னையிலிருந்து
கொஞ்ச தூரத்தில் உள்ள அத்திப்பட்டு என்னுமிடத்தில் நிலம் வாங்கி வீடுகட்டி குடியேறினார் ஒரு உறவினர். அந்த இடமும் சூழலும்
பார்க்க ஆச்சரியமாக இருந்தது அன்றைக்கு அது பெரிய கிராமமாக இருந்தது. இன்று வளர்ச்சியடைந்த
ஒரு சிறுநகரம். இது மாதிரி புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டவர்கள் எல்லோரும் பொருளாதாரத்தில்
உயர்ந்து இருக்கிறார்கள். சென்னை அடுத்து மதுரை, கோவை போன்ற நகரங்கள் பெரும் வளர்ச்சியை சந்தித்துள்ளன. பக்கத்தில்
உள்ள கிராமங்கள் எல்லாம் சேர்த்து ஒரு பெருநகரமாக மாறிவிட்டன. சென்னை கொஞ்சம் கொஞ்சமாக
செங்கல்பட்டுவரை மாநகரமாக உருக்கொண்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னால்வரை நிலங்கள், ப்ளாட்டுகள் சகட்டு மேனிக்கு உயர்ந்து வாங்குபவர்களை பெரும் குழப்பத்தில்
ஆழ்த்திக் கொண்டிருந்தது. இன்றும் தினமும் டிவியில், பேப்பரில்
நிலங்களின், ப்ளாட்டுகளின், ஃப்ளாட்டுகளின் விற்பனையை ஜோராக செய்துவருகிறார்கள். ஆனால் மக்கள்
சற்று தெளிவு பெற்றிருப்பது போல் தெரிகிறது. எல்லாமே ஒரே நகரங்கத்தில் அல்லது ஒரே
இடத்தில் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருக்கிறார்கள். வேறு மாநிலங்களில் வாங்கவும்
செய்கிறார்கள்.
ஆனால் இன்று நகரமும் அழுக்கும், தூசியும், சுற்றுசூழல்மாசுப்பட்டும் காணப்படுகிறது.
எத்தனை நல்ல நிர்வாகம் இருந்தாலும் நகரத்தை பராமரிப்பது, மேம்படுத்துவதும் சிரமமாகவே இருக்கிறது. ஒரு நூறு பேருக்கும் சமையல்
செய்யும்போது 150 பேர் வந்துவிடுவது போல நகரம் செய்வதறியாது
திணறுகிறது.
ஒவ்வொருவரின் மூச்சுகாற்று மற்றவருக்கு படுவதுபோல மிக நெறுக்கமாக
வாழவேண்டியிருக்கிறது. எந்த வேலையையும் கண்ணியில் முடித்துக் கொள்ளலாம் எனும்போது அவசரத்திற்கு
வெளியே செல்லும்போது ஏற்படும் அசெளகரியத்தில் நகரவாழ்க்கையே வேண்டாம் என்கிற எண்ணம்
தோன்றுவிடுகிறது. அதற்காக கிராமத்திற்கு செல்லமுடியாது. தண்ணீர், இணையம், மருத்துவ வசதியில்லா இடத்தில்
எப்படி மக்கள் இருப்பது. அதற்கு இல்லாதபட்டவர்கள் இருக்கலாம். இருப்பவர்கள்?
வேறுவகையான இருப்பிடங்கள் இப்போது உருவாகி வருகின்றன. கிராமம்தான்
அது ஆனால் எல்லா வசதிகளுடன் கூடிய கிராமம். கேட்டடு கம்யூனிடி எனப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட
கிராமநகரம். இனி வரும்காலங்களில் இதுமாதிரியான வாழ்விடங்கள்தான் உருவாகிவரும். ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்களில் சிறு காலணிகள் தங்களுக்காக அமைத்து வாழ்த்த வெள்ளையர்களை
போன்றது இது. இங்கு எல்லா வசதிகளும் உண்டு. பெரிய நிலப்பரப்பில் ஏரி, காடு, ஷாப்பிங் மால், கோல்ப் மைதானம், கிரிக்கெட் மைதானம், திறந்தவெளி வாழ்க்கைக்கும்,
நீச்சல் குளம், கலாசார மையம், திரையரங்கு, உடற்பயிற்சிகூடம் உள்வெளி வாழ்க்கைக்கு தேவையானவைகளும் இதில் இருக்கும்.
இதனால் நாம் அடைவது எல்லா வசதிகளும் கொண்ட கிராமம். கிராமத்திலிருந்து
நகரத்திற்கு இடம்பெயரும் போக்கு மாறி, நகரத்திலிருந்து கிராமத்திற்கு
இடம்பெயருகிறார்கள். அவர்களுக்கு
தேவையான உணவுகள்,
உடைகள், என்று அனைத்தும் உலகின் எல்லா பகுதியிலிருந்தும்
பெற்றுக்கொள்ளமுடியும். மெதுவாக
நகரங்கள் என்று இப்போது அறியபட்ட வாழ்விடங்கள் பெரிய சேரிகளாக மாறிப்போகும். முன்பு நகரங்களுக்கு கிராமங்கள்
உழைத்தன, இனிமேல் புதிய கிராமங்களுக்கு
நகரங்கள் உழைக்கப் போகின்றன.
இந்த புதிய கிராமத்திற்கு புதிய சட்டங்கள் உருவாகலாம். அதில
யார் உள்ளே வரலாம், யார் உள்ளே வரக்கூடாது என்றுகூட இருக்கலாம் எப்படி பழைய கிராமங்களுக்கு மரபான சட்டங்கள் உருவாகிவந்தது
அது மாதிரி.
No comments:
Post a Comment