Tuesday, January 13, 2015

இன்றைய காமம்



நான் பள்ளியில் படித்தபோது சக‌பெண் பிள்ளையை கிண்டல் அடித்தார்கள் என்பதற்காக அந்த பெண்ணின் மாமா எங்கள் வகுப்பறைக்கு வந்து அந்த இரண்டு சிறுவர்களையும் ரத்தம்வர‌ அடித்து நொறுக்கி மிரட்டிவிட்டு சென்றார். அந்த நேரம் மதிய உணவு இடைவெளி நேரம். ஆகவே அவர் வந்தது யாருக்கும் தெரியவில்லை. தெரிந்தபின் பள்ளியில் ஆசிரியர்களிடையே பெரிய விவாதமாக ஆகிவிட்டது. எப்படி ஒருவர் உள்ளே வந்து அடிக்கலாம் என்று. அந்த சிறுவர்கள் வறிய ஏழ்மை குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் பெரிய பிரச்சனையாக ஆகாமல் தடுக்கப்பட்டுவிட்டது. அப்போது நாங்கள் படித்துக்கொண்டிருந்தது நான்காம் வகுப்பு.



ஒன்பது அல்லது 10 வயது சிறுவர்கள் பெண்பிள்ளைகளை கிண்டல் அடிப்பது பெரிய குற்றமாக கருதப்பட்டது ஒரு சமயம். ஆனால் இன்று அந்த அளவிற்கு இல்லை மக்களிடையே பெரிய மாறுதல்கள் ஏற்ப்பட்டுவிட்டன. மாணவர்கள் மாணவிகள் பேசிக்கொள்வது, சிரித்துக் கொள்வது பெரிய குற்றமாக இன்று இல்லை. பன்னிரெண்டாம் வகுப்புவரை மாணவ மாணவியர்கள் சேர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. கல்லூரிகளில் இருசாராரும் சேர்ந்து படிப்பது இப்போது ஒன்று பெரியதாக பார்க்கப்படுவதில்லை. (சில தனியார் பள்ளிகளில் இருசாரார் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பேசிக்கொள்ளக்கூடாது என்று கூறப்படுவதும், அதற்கு பெரிய தண்டனைகள அளிப்பதும் உண்டு.) பொதுவாக பார்க்கும்போது ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்த இறுக்கங்கள் பெண் பிள்ளைகள் குறித்த கவலைகள் இன்று இல்லை என்று சொல்லலாம்.
அதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம். சமூகத்தின் பார்வை மாறியிருக்கிறது. அடுத்த தலைமுறை அம்மா அப்பாக்கள் தங்கள் குழந்தைகள் மீதும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது என்று சொல்லலாம். தங்கள் பிள்ளைகள் எதை தேர்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களிடம் விட்டுவிடும் தைரியம் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம். சின்ன சமூகத்தின் உள்ளே மட்டுமல்லாமல் உலகளவில் பரந்தபட்ட பார்வை ஒன்றை பெற்று காதல் குறித்தும், கற்பு குறித்தும் புதிய எண்ணங்களை கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
ஆனால் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று பாலியல் குற்றங்கள் அல்லது பெண்கள் மீதான‌ பலாத்காரங்கள், கற்பழிப்புகள் அதிகமாகியிருக்கின்றன. இன்றைய பேப்பர்களில் தினம் ஒரு செய்தி இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் பார்க்கப்போனால் குறைந்த்தானே இருக்கவேண்டும். படித்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பத்தாண்டு அதிகரித்தும், சமூக வெளியில் ஆண்-பெண் நட்புகள் அதிகரிப்பதும் கூடவே இது போன்ற அசிங்கங்கள் நட்ப்பது புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.. அத்தோடு பெண்களுக்கான சுதந்திரத்தையும், அவர்கள் மீதான புரிதல்கள் அதிகரித்துள்ளதை ஆண்கள் தங்களிடையே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும் முன்பிருந்ததைவிட‌ ஆண்-பெண்களுக்கு கிடையே நல்ல இணக்கும் ஒன்று வளர்ந்து இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்கு சம்பந்தம் இல்லாததுபோல் பெண்கள் மீது அளவுக்கு அதிகமான‌ வன்மமும், கோபமும் அதிகரித்திருப்பது வெளிபடையாக தெரிகிறது.
தில்லியில் நடந்த சம்பவம், ஒரு பெருநகரத்தில் இப்படி ஒன்று நடக்குமா என்ற ஆதங்கமே மேலோங்கி நின்றது. இதே மாதிரியான சம்பவங்கள் இந்தியாவில் பல கிராமங்களில் தினமும் நடந்து சில வெளியில் தெரிந்தும் சில வெளியில் தெரியாமலும் இருக்கின்றன. முன்பு இல்லாத ஆண் பெண்களுக்கு இடையேயான புரிதல்கள் அதிகரித்தபின்பும் இந்த பலாத்காரம், கற்பழிப்புகள் நடப்பது ஏன் என‌ யோசிக்க வேண்டியிருக்கிறது
முன்பு இல்லாத அளவிற்கு செக்ஸ் குறித்த எல்லா விஷய‌ங்களும் இணையம் மூலம் கிடைத்துவிடுகின்றன. ஒரு கணினி ஒரு இணைய தொடர்பு இருந்தால் போதுமென்றிருந்து ஆனால் இன்று ஒரு செல்பேசிகூட‌ போதுமானது. அதில் எல்லா செய்திகளும், கண்ணொளிகளும் எந்த தடுப்பும் இல்லாமல் பார்த்துவிடலாம். பார்ப்பதற்கு ஒரு இடமோ வீடோ கூட தேவையில்லை. எந்த இடத்திலும் அவர்கள் வைத்திருக்கும் சிறிய மடி கணினி அல்லது செல்பேசியில் பார்த்துக்கொள்ளலாம்.
ஒரு ஐம்பது அதற்கு மேல் வயதுள்ள‌ மனிதர்கள் இதை பார்க்கும்போது தான் இத்தனை காலம் அனைத்தையும் இழந்துவிட்டதாக நினைக்கிறார். கற்றற்ற காமம் என்பது உலகநட‌ப்பு என்று நினைக்கிறார். அதுவும் பெருநகரங்களில் வசிப்பவர்களிடம் இந்த காமம் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. அப்போது மிக அருகில் இருக்கும் பெண்ணின் சாதரண பேச்சுகள், தொடுகைகள் கூட காமத்துடன் தொடர்புடையதாக நினைத்துக்கொள்கிறார்.
ஒவ்வொருவருக்கும் பிறப்பு வயது, சரீர வயது என இரண்டுண்டு என்று சொல்ல‌ப்படுகிறது. பிறப்பு வயதைவிட சரீர வயது கூடியவர்களும், சரீர வயதைவிட பிறப்பு வயது கூடியவர்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்களின் உடல் மனம் பொருத்து இந்த வேறுபாடுகள் மாறுபடக்கூடும். ஆனால் காமம் அப்படி எங்கும் நிற்பதில்லை. இது ஒரு உதாரணம்தான். நம்முடைய சமூகம் செக்ஸ் குறித்த பார்வையைவிட அதற்கு கிடைக்கும் உள்ளீடுகள் அதிகமாக இருக்கும்போது இதுபோன்ற வரம்பு மீறல்கள் ஏற்படுகின்றன. நாம் மேற்கத்திய பாணி வாழ்க்கைக்கு மாறும் விகிதத்தைவிட அங்கிருந்து வரும் இது மாதிரியான செக்ஸ் சம்பந்தமான செய்திகள், படங்கள், கண்ணொளிகளின் அளவு நாளுக்கு நாள் தொழிற்நுட்பத்தின் காரணமாக அதிகரிப்பதுதான் அதிகமான என்றுமே இல்லாத அளவிற்கு பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்க காரணம்.
பெங்களுரு, மும்பை, தில்லி போன்ற நகரங்களின் தினம் ஒரு சிறுமி பாலத்காரம் செய்யப்படுவதை, பள்ளி ஆசிரியர்களின் அத்துமீறல்கள் அதிகரிப்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். சமூகத்தின் வேகம் தொழிற்நுட்பத்துடன் சேர இன்னும் பத்தாண்டுகளாவது ஆகலாம் என நினைக்கிறேன். அது வரை இது போன்ற குற்றங்கள் தொடரவே செய்யும்.

No comments: