Wednesday, April 7, 2010

காலாவதியும் கவர்மெண்டும்


எத்தனை பொருப்பில்லாமல் அரசியல்வாதிகள் நடந்துகொண்டாலும் அதை பொருத்துக்கொள்ளும் நல்ல மனசு நம் மக்களுக்கு. இல்லையென்றால் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் ஒன்று நடந்திருக்கும் போதும் எதும் கண்டுகொள்ளாமல் தம் வேலைகளை பார்த்துக்கொண்டு செல்லும் மக்களை என்னவென்று சொல்வது. எப்படி காலாவதி மருந்துகள் புழ‌க்கத்தில் உள்ளன என்று கேட்டபோது, முதல்வர் அவைகள் இப்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன, வேண்டுமானால் சிபிசிஐடிக்கோ அல்லது சிபிஐக்கோ உத்தரவிடஉள்ளதாக கூறினார். எதுவும் தெரியாது உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என்பதுதான் அதன் அர்த்தம்.
நம்மக்களுக்கு பொருமை அதிகம் என்று கூறியதற்கு காரணம் இருக்கிறது. மற்ற மாநில மக்களுக்கு அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்களை ஏதோ தேவதூதர்கள், ரட்சகர்கள் என்னும்படியாக பார்க்கும் பார்வை இல்லை. அவர்களை சாதாரண மனிதர்களாகவே நடத்துகிறார்கள். அவர்களை எளிதாக அணுகமுடிகிறது. தெருவிளக்கு சரியாக எரியவில்லை என்றால்கூட ஒன்றுகூடி சம்பந்த பட்ட அரசுஅதிகாரிகளை அடிக்கசெல்கிறார்கள்.
கொஞ்சநாள் முன்பு தெருகுழாயில் தண்ணீர்வரவில்லை என்பதற்காக தெருவாசிகள் ஒன்றுசேர்ந்து சம்பந்தபட்ட அலுவலகம் சென்று அந்த அதிகாரியின் முகத்தில் கரியை பூசினார்கள். இதேபோல் கர்நாடகவில் காவேரி பிரச்சனையின் போது அரசுஅதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அம்மக்கள் என்னபாடு படுத்தினார்கள் என்பது நாம் கண்டோம்.
இதய, சக்கரை நோயாளிகளும், கர்ப்பிணிகளும் தான் அதிகம் மருந்து எடுத்துக் கொள்பவர்கள். காலாவதி மருந்து உட்கொள்வதினால் அதற்கான பிரச்சனை உடனே தெரியப்போவதில்லை. முதலில் பாதிக்கபோவது உட்கொண்டவர்க‌ளின் கிட்னிதான். அதன்பின் ஒவ்வொரு பாகமாக பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் உட்கொள்வதால் பிறக்கும் குழந்தைக்கு என்ன பிரச்சனைகள் வரும் என்பதும் தெரியவில்லை. கொஞசநாள் முன்பு மர்மக்காய்ச்சல் பரவியதிற்கு இந்த மருந்துகள் முக்கிய காரணமாக கூட‌ இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கபட்டு இருப்பவர்கள் எத்தனை கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள். சொல்லப்போனால் இது எதனால் என்று தெரியாத அறியாமையில்கூட‌ இருக்கலாம். எதுஎப்படியோ தமிழ்நாட்டு மக்கள் நல்ல மனது படைத்தவர்கள்.

No comments: