Thursday, December 19, 2019

இடலாக்குடி ராசா - நாஞ்சில் நாடன் சிறுகதை வாசிப்பனுபவம்



உடை இருப்பிடத்திற்கு முன்னே உணவு என்னும் அடிப்படையான விஷயம் வந்துவிடுகிறது. ஒருவேளை உணவு என்பதே உலகத்தில் பலருக்கு மிகப்பெரிய செலவினமாக இருக்கிறது. ஆனால் வேறோரு பக்கத்தில் உணவை வீணாக கீழே கொட்டுவது நடக்கிறது. பலஇல்லங்களில் உணவு ஒரு ஆடம்பரம் தான். உணவகங்களின் வழியே நாம் அளிக்கும் பணம் அந்த உணவிற்கு பலமடங்கு அதிகம் செலுத்துகிறோம். திருமணங்களில் பல உணவு வகைகள் ஆடம்பரத்திற்கே சேர்க்கப்படுகின்றன. பல உணவுவகைகள் சாப்பிடப்படாமல் வீணாவதுதான் அதிகம். அந்த கெளரவம் நமக்கு தேவையாக இருக்கிறது. உணவை எவ்வளவு வீணாக்குகிறாரோ அவ்வளவு வசதி படைத்தவராகிறார்கள். உணவை மற்றவர்களுக்கு அளிப்பதில் இருக்கும் இன்பம்கூட கெளரவத்தில் இணைந்துவிடுகிறது. உணவை பெறுபவர் அதை கீழ்மையாக நினைக்கவேண்டியவராகிறார்.

எளியமனிதர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் கண்களில் ஒன்று தெரியும், அது பிரிதொன்றறியா பேதமை. வீடுகளின் அருகில், வேலை செய்யும் இடங்களில் அருகில், கோயில், மண்டப தளங்களில் நாம் காணும் இம்மனிதர்கள் நம்மை கடக்கும் சமயங்களில் நாம் அறியும் ஒன்று அவர்களால் மதிப்பிடமுடியாதது. அவர்கள் காணும் உலகத்தில் உணவு பிரமானதாக எந்த கெளரவ, இழிவு தடைகலற்று இருக்கிறது. அவர்கள் உணவை பசியின் போது தேவைப்படும் பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள் மற்ற மனிதர்களுக்கு புரிவதில்லை.. உணவு விருந்துகளில் பணம், அந்தஸ்தில் உயர்ந்த மனிதர்களை கெளரவமாக நடத்தப்படுவதும், அந்தஸ்தில் குறைந்த, எளிய, மனவளர்ச்சி குன்றிய மனிதர்களை வேடிக்கை விளையாட்டு பொருளாக நடத்தப்படுவதும் நடக்கிறது.

நான் சிறுவனாக இருந்த சமயத்தில் ஒரு திருமண விழாவில் நடந்த காட்சி இன்றும் மனதில் இருக்கிறது. மனவளர்ச்சி குன்றிய சிறுவனை நீண்ட மெல்லிய குச்சிகளை வைத்து இருவர் அவரை அடித்து வெளியில் ஒலிப்பெருக்கி பாடலுக்கு ஆடவைத்துக் கொண்டிருந்தார்கள். சிறுவன் சோர்ந்து ஆட்டத்தை நிறுத்தும்போது விளையாட்டாக அடித்து ஆடவைத்துக் கொண்டிருந்தார்கள். பார்ப்பவர்களுக்கு ஒரு கேளிக்கையாக இருந்தது.

இடலாக்குடி ராசா ஒரு ஊர்ச்சுற்றி, எல்லா இடங்களிலும் சின்னச் சின்ன ஊர்களுக்கும் மற்றவர்களின் வேலை, விருந்து பொறுத்து எல்லா இடங்களுக்கும் செல்பவர். ஊருக்கு திரும்பும்போது யாராவது வீட்டில் அக்கா தம்பிக்கு சோறு கொடுக்கா என்று கேட்டு வாங்கி சாப்பிடுவது வழக்கம். கொடுக்கவில்லை என்றால் வண்டியை விட்றவாக்கா என்று கேட்டு கிளம்ப ஆரம்பிப்பான். ஆனால் பெண்களுக்கு மனது இடங்கொடுக்காமல் உடனே சோறு தட்டில் வைத்து கொடுத்துவிடுவார்கள். ராஜா விளையாட்டு பொருள்தான். எவ்வளவு கிண்டலுக்கு பின்னும் ஒரு பிடி சோறு கொடுத்தால் சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவான். யார்மேல் கோபமோ, வருத்தமோ கொண்டவனல்ல.

நல்ல சோறு என்பதே அவனுக்கு கனவுதான். எளிதில் கிட்டாத கனவு. வருடத்தில் சில நாட்கள் கல்யாண விருந்து அப்படி அமையலாம். எல்லாவகை உணவுகளை அன்றுதான் அவனால் சாப்பிடமுடியும். அவனுக்கு சோறு வழங்க அம்மா, அப்பா, அல்லது உறவினர்கள் யாருமில்லை. ஆனால் எல்லோரும் நல்ல மனிதர்கள், அவர்கள் சோறு அளித்தாலும் அளிக்கவில்லை என்றாலும். சோறு என்பதை தாண்டி அவன் அடையும் நிறைவு உறவற்ற மனிதர்களின் அன்பு.

ஒருநாள் ஊரில் நடக்கும் ஒரு விருந்தில் கடைசியாக வந்து கலந்துக் கொள்கிறான் இடாலங்குடி ராஜா. கடைசி பந்தி அதில் பரிமாறியவர்களின் பந்தி. வேண்டுமென்றே ஒரு விளையாட்டு செய்கிறார்கள். ராஜாவிற்குமட்டும் இலை வைக்கப்பட்டிருக்க வேறு எதையும் வைக்காமல் வைப்பவர்கள் தாண்டி தாண்டி செல்கிறார்கள். உப்பிலிருந்து சோறு சாம்பார்வரை செல்கிறது. அவனுக்கு அழுகைதான் வருகிறது. இந்த ராஜாவுக்கு இல்லையா? அப்ப நா வண்டிய விட்றவா என்று கேட்டுக் கொண்டிருந்தவன். சட்டென எழுந்து போய்விடுகிறான். அதுவரை சிரித்து மகிழ்ந்தவர்கள் சாப்பிட மனமே இல்லாமல் இருக்கிறார்கள்.

நாஞ்சில் நாடன் எழுதிய கதைகளில் முக்கிய கதை இடாலங்குடி ராஜா. கண்களின் ஓரங்களில் துளிர்க்கும் துளி கண்ணீர் இல்லாமல் இக்கதையை படிக்க முடியுமெனில் அவர் எதற்கும் அசரா முரட்டு மனிதர் என்று சொல்லிவிடலாம்.

எனக்கு உணவு கொடுக்கவில்லை என்று ராஜா அடுத்த நாள் கோபித்துக் கொள்ளப் போவதில்லை, தன் கெளரவம் சிதைந்ததாக வருத்தப்பட்டு ஒரு இடத்தில் அமரப்போவதுமில்லை. எப்போதும் போல அவன் பறந்துக் கொண்டிருப்பான். யாராவது ஒரு அக்காவிடம் சோறு கேட்டு திங்கவே போகிறான். ஆனால் இனி தன்னை ஏமாற்றிய மனிதர்களிடம் ஒருபோதும் வாங்கி சாப்பிடபோவதில்லை. அந்த மனிதர்களுக்கு பசியோடு வந்த ஒருவனை உணவளிக்காமல் பந்தியிலிருந்து எழுப்பிய வலி இருக்கும். இனி அவர்கள் வாழ்நாளில் அது மறக்கமுடியாத வலி அல்லவா?.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

விமர்சனமே மனதை கனக்கச் செய்கிறது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனுபவத்தை ரசித்தேன். நெகிழவைத்த அனுபவம்.