Thursday, November 28, 2019

நாயனம் - ஆ.மாதவன் சிறுகதை வாசிப்பனுபவம்



சலிப்பில்லாத வாழ்க்கையில்லை. எவ்வளவுதான் உயர் எண்ணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு வந்தேவிடுகிறது. வேண்டாத பொருள் கைவிட்டு போகும்போது அதுகுறித்து கவலை கொள்வதில்லை, அது நம்மைவிட்டு செல்கிறதே என்கிற மகிழ்ச்சி உண்மையில் அடைவதில்லை. மாறாக சலிப்பை அடிநாக்கின் கசப்பைபோல உணர்கிறோம். இதுநாள்வரை பொறுத்திருந்ததின் பொருளின்மைதான் உண்மையில் அப்படியான சலிப்பு தோன்றுவதற்கு காரணம் என்றால் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

இறப்பிற்கு பின் இறந்தவரின் கெட்ட செய்கைகள் குறித்து பேசுவது அநாகரீகம் என்கிற எண்ணம் நமக்குண்டு. இறந்தவரை உயிரோடு இருக்கும் காலங்களில் தூற்றியது போல் இறப்பிற்குபின் தூற்றுவதில்லை. ஏதோ ஒரு மென்மையை கடைபிடிக்கிறோம். அவரது நல்லவைகளை தேடித்தேடி சொல்லி மகிழ்கிறோம். அல்லது மகிழ்ச்சியாக இருப்பது போன்று காட்டிக்கொள்கிறோம். எல்லா காலங்களிலும் அது நாகரீகத்தின் வெளிப்பாடாக சமூக நோக்கத்தின் தூய வடிவாக பார்க்கப்படுகிறது. தன் இறப்பிற்குபின் செய்யவேண்டியவை என்று அவர் சொல்லிய காரியங்களை நிறைவேற்றும் பொருட்டு ஏற்படும் சங்கடங்களையும் பொறுத்துக் கொள்கிறோம்.

எனக்கு தெரிந்த நபரொருவர் தன் இறப்பிற்குபின் தன் இறப்பு செய்தி குறித்து எல்லா இடத்திலும் போஸ்டர் அடித்து ஒட்டவேண்டும் என்றும் ப்ளக்ஸ் பேனரை எங்குவைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். கூடவே என்னென்ன வாசகங்கள் தன்னைப் பற்றி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆமா இவரு வந்து பாக்க போறாறாமா என்கிற கேலி பேச்சுகள் அவர் முன்னமே பேசப்பட்டன. எல்லோரும் காமெடியாக கடந்து சென்றாலும் அவர் இறந்தபின் மறக்காமல் அவர் சொல்லியவைகளை செய்து முடித்தார்கள். அவர் ஆன்மா சாந்தியடையட்டும் என்கிற எண்ணம்.

,மாதவன் அவர்கள் எழுதிய நாயனம் என்கிற சிறுகதை, இறந்தவரின் ஆசையை நிறைவேற்றும் ஒரு கதை என்று சொல்லலாம்.

வயதானவர் ஒருவர் இறந்துவிடுகிறார். அவரை கிடத்தியிருக்கிறார்கள், மாலையாகிவிட்டது, சுடுகாட்டிற்கு இன்னும் எடுத்துச் செல்லவில்லை. இருவர் நாயனக்காரர்களை அழைத்துவரச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வந்தபின்தான் செல்ல வேண்டும். இறந்தவர் தனக்கு இறுதி சடங்கில் நாயனம் வேண்டும் என கேட்டிருந்ததால் அவர்களை தேடிச் சென்றிருக்கிறார்கள். திருவிழா நேரம் என்பதால் அவர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது.

கடைசியாக தாமதித்து இருவரை அழைத்துவருகிறார்கள். இறுதி ஊர்வலம் கிளம்புகிறது. நாராசமாக ஒலிக்கிறது நாயனம். இருட்டில் எல்லோரும் சலிப்புடன் செல்கிறார்கள். சுடுகாட்டை நெருங்க பொறுமை இழக்கிறார்கள். வாசிக்கும் இருவரையும் அடித்து துரத்துகிறார்கள். அவர்களும் தலைதெறிக்க ஓடி தப்பிக்கிறார்கள். இப்படி முடிகிறது கதை.
"விடாப்பிடியாகக் கழுத்தை அழுத்திய சனியன் விட்டுத் தொலைத்த நிம்மதியில் ஊர்வலம் சுடுகாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது."

அங்கிருப்பவர்களுக்கு பாரமாக இருந்தது நாயன வாசிப்பு மட்டுமல்ல, இறந்தவருக்கு செய்யவேண்டியதாக இருந்த திருப்தி படுத்துதலும்தான். கதையின் ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளை சிலர் வைது கொண்டிருக்கிறார்கள். ஊர்வலத்தில் செல்ல நினைத்த பிள்ளையை ஒருவர் வைகிறார். இங்கே நாயனக்காரர் கிடைக்கவில்லை என்பதால் வேறு ஊருக்கு சென்றிருக்கிறார் என்பதை சொல்லவந்தவரிடம் எரிச்சல் அடைகிறார்கள்.

இறந்தவர் வாழ்வில் என்ன நன்மைகளை செய்தார், என்ன தீமைகளை பிறருக்கு வழங்கினார் என்பதை குறித்து எதுவும் பேசப்படவில்லை. அவர் படுத்திருக்கும் தோற்றம் மட்டுமே சொல்லப்படுகிறது. வயதான அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியம் எதுவுமில்லை. அவர் எப்படி வாழ்ந்தார் என்கிற நினைப்பை உண்மையில் மறந்தேயிருப்போம். அவர் வாழ்ந்தார் என்பதற்கான தடயங்களை அழித்துக் கொள்ளவே நினைக்கிறோம். இறந்தவர் குறித்த நினைவுகளை மனிதர்களின் தினப்படி வாழ்வோடு நினைவில் வைத்துக்கொள்ள நாம் பிரியப்படுவதில்லை. இறந்தவரோடு அவர் துக்கங்களும் போகவேண்டும். துக்கங்கள் எங்கே போகும்? அவர் சுடுகாட்டிற்கு போனபின்தானே போகும். இறந்தவரோடு அவர் ஆசைகளும் போய்தொலையவேண்டும். குறைந்தது வேண்டாவெறுப்பாக. நாயனக்காரர்களை அடித்து துவைத்து விரட்டியது போல.

இறந்தவரை காயப்படுத்த முடியாது, இறந்தவரை பொதுவில் திட்டவும் முடியாது. இரண்டும் நம் மரபிலேயே இல்லை. இறந்தவர் தெய்வத்திற்கு சமமானவராக பார்க்கப்படுகிறார். அவரது புகைப்படம் பூவும் பொட்டுமாக வைக்கப்படும். பல வீடுகளில் பெயர் தெரியாத, நேரில் பாத்திராதவர்களின் புகைப்படங்களுக்கு பூவும் பொட்டும் அணிவித்து சாந்தி செய்திருப்பார்கள். அவர்களை வணங்குவது குடும்பத்திற்கு நன்மை என்கிற எண்ணத்தை தவிர வேறு எதுவுமில்லை. உண்மையில் கழுத்தை அழுத்திய சனியன் நாயனக்காரர்கள் இல்லை.

மனிதர்களின் ஆழ்மன ஆசை தன் குடும்பமும் சந்ததியினர் அடையும் நன்மை மட்டுமே, அதை இறந்தவரும் அறிந்தேயிருப்பார். அது புரிய நமக்கு நம் மரபும் ஐதிகங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கத் தூண்டும் விமர்சனம்