Thursday, November 21, 2019

நெடுஞ்சாலை வாழ்க்கை - கா. பாலமுருகன்



நெடுஞ்சாலையில் பயணிப்பது அலாதியான இன்பம் நிறைந்தது. உடனடி இலக்குகள் நமக்கு இல்லை என்பது ஒரு ஆயாசத்தை ஏற்படுத்திவிடுகிறது. அன்றாட தினசரி வேலைகள் இல்லாமல் வெறுமனே வேடிக்கைப் பார்த்தபடி இருக்கலாம் இல்லையா? பெரிய சலிப்பு நிறைந்த தொடர் வேலைகளுக்கு பின் ஒரு நீண்ட பயணம் செல்வது மனதிற்கு அமைதியை அளிக்க கூடியதுதான். அதையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையை எப்படி புரிந்துக் கொள்வது.

ஆரம்ப காலங்காலங்களில் நல்ல வேலையாகவும், பணம் கிடைக்ககூடிய தொழிற்நுட்பங்களைக் கொண்ட வேலைதான் இருந்தது. ஆனால் இன்று பல சிரமங்களையும் மனவலியையும் தரவல்லதாக மாறிவிட்டிருக்கிறது. அதில்தான் பயணமும் தொடர்கிறது. கிளினராக வேலைக்கு சேர்வதும் பின் ஒட்டுனராக மாறுவதுமான ஒரு வாழ்க்கை கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்கு செல்வதுபோல. அதில் குரு சிஷ்ய முறை ஒரு வரம். வாழ்க்கையை புரிந்துக் கொள்ளும் ஒரு சிறுவனின் உலகம் பயணத்தில் அமைந்திருப்பதை யோசிக்கும்போதே அலாதியான இன்பத்தை அளிக்கிறது.

ஒட்டுனர்களின் வாழ்க்கை பெரும் பகுதி நெடுங்சாலையிலேயே கழிகிறது. அவர்கள் அறிந்தது எல்லாமே சாலைகளின் ஒழுங்கற்ற விதிகள், பணத்தை மிச்சம் பிடிக்கும் சிக்கன வாழ்க்கை, என்னேரமும் உயிருக்கு உத்திரவாதமற்ற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கடந்து செல்வது. கனரக வாகனங்களை ஓட்டுபவர்களை நாம் கடினமான மனிதர்களாக நினைக்கிறோம், சில சமயங்களில் அது உண்மையாகவும் இருக்கலாம், ஆனால் அவர்களின் கடின வாழ்வை நாம் அங்கிகரிப்பதில்லை என்பதும் ஒரு உண்மை.

இந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் சாலைகள் பயணப்படவும் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுகின்றன. குடியிருப்புகளின் வழியாக சென்ற சாலைகள் பிறகு ஊரைச் சுற்றி வேகமாக பயணப்படவும், பொருட்களை எடுத்துச் செல்லவும் பைப்பாஸ் எனப்படும் புதிய நான்குவழி, எட்டுவழிச்சாலைகள் வந்துவிட்டன.

ஒரு காரில் அல்லது இருசக்கர வாகனத்தில் இந்தியா முழுவதும் சுற்றிவர பயணத்தை விரும்பும் எல்லோருக்கும் ஆசையிருக்கும். அப்படி என்ன நாம் அந்த பயணத்தில் அடைந்துவிடப்போகிறோம் என்கிற கேள்வி எழுந்தாலும் அந்த பயணம் நமக்கு பிடித்துதான் இருக்கிறது.

வேகத்தை அதிகரிக்க, பயணநேரத்தை மிச்சம்பிடிக்க, சொகுசை அதிகரிக்க என்று சாலைகள் வந்தாலும் கஷ்டங்களையும், சங்கடங்களையும் லாரி ஓட்டுநர்கள் தான் அனுபவிக்கிறார்கள் என நினைக்க தோன்றுகிறது. பலநாட்கள் பயணம், மழை வெய்யில் பாராமல் பயணம், திருடர்களின் பயம், கொள்ளையர்களின் மிரட்டல், போலீஸ் பூத்துகளின் பணம்பறிப்பு, காவலர்களின் லஞ்சம் என்று தொடர்ந்து இந்த நவீன உலகத்திலும் நடந்துக் கொண்டேயிருக்கிறது. மாநிலங்களில் மகாராஷ்டிரா மிக மோசமானதாக சித்தரிக்கிறார்கள் ஓட்டுநர்கள். இதெல்லாம் சாத்தியமா என்று நினைக்குமளவிற்கு லஞ்சங்களும், பணப்பறிப்புகளும், வசைகளும் ஓட்டுநர்கள் மீது கொட்டப்படுகின்றன. இதையெல்லாம் தாண்டி அவர்கள் வேலை செய்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.

இதற்கெல்லாம் காரணமாக நான் நினைப்பது நாம் அன்னியராக இருப்பதுதான். இந்தி தெரியாமல் நாம் அன்னியராக இருப்பதனாலேயே அவர்களை சமாளிக்க தெரியாமல் இருக்கிறோம். இந்தியாவில் இந்தி தெரியாமல் வாழ முடியாது. திருப்பதியை தாண்டிய ஒவ்வொருவரும் இந்த உண்மையை உணர்ந்திருப்பார்கள். அடித்தட்டு மக்களிடம் இந்தி மட்டுமே செல்லுபடியாகும். திராவிட அரசியலில் இருந்து விடுபடும்வரையில் இந்த ஓட்டுநர்களின் வாழ்க்கை மிகவும் கடினமாகவே கழியும். நாலாவதிலிருந்து ஒன்பதாவது வரை இந்தி படிப்பதனால் தமிழ் அழிந்துவிடும் என்பவர்களை முட்டாளாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

லாரி ஓட்டுநர்களுடன் சேலத்திலிருந்து ஐந்து வெவ்வேறு வழிகளில் செல்லும் பாதையை கொண்ட பயணத்தை இதன் ஆசிரியர் கா.பாலமுருகன் தன் புகைப்படக்காரருடன் பயணிக்கிறார் (சேலம்-கொல்கத்தா, சேலம்-டெல்லி, சேலம்-நாக்பூர், கோவை-காஷ்மீர்). கரடுமுரடாண பாதைகள், 30 டன் வரைக்கும் எடையுடன் கூடிய வண்டியில் பயணம், வழியில் சில பகுதிகளில் மக்கள் சிலர் மிரட்டி காசு பறிப்பது, இதையெல்லாம் தாண்டியே சரக்கை எடுத்துச் செல்கிறார்கள். மகாராஷ்டிராவில் ஒரு பகுதியில் மட்டும் இரவில் கடக்காமல் காலையில் கடக்கிறார்கள். அங்காங்கே நின்று சமையல் செய்கிறார்கள். கூட்டாக உண்கிறார்கள். சரக்கு இறக்க பிறகு புதிய சரக்குகளை ஏற்ற என்று சில நாட்களை வெறுமனே கழிக்கிறார்கள். காலைக்கடன்களை திறந்த வெளியிலும் குளியலை அங்காங்கே சில இடங்களில் இருக்கும் தண்ணீர் தொட்டியிலும் செய்து கொள்கிறார்கள்.

ஆனாலும் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கிறது அவர்களுக்கு. இந்தியாவின் சில வரலாற்று, ஆன்மீக தளங்களை பலமுறை கடந்து சென்றாலும் அங்கே சென்றதில்லை என்கிறார்கள். சாதாரண அலுவலக வாழ்க்கையிலிருந்து இந்த வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது என்பதை மறுக்க முடியாது. வயிற்றுக்காக, தன் பெற்றோருக்கு, மனைவி, பிள்ளைகளுக்கு பணம் சேர்க்க இப்படியும் வேலை செய்யவேண்டியிருக்கிறது. ஆனாலும் சமூகத்தில் இவர்களுக்கு கெட்ட பெயர்கள்தான்.

முதலில் இந்த வேலையில் இருக்கும் புதுமைக்காக செய்கிறார்கள். பின்பு அதுவே பழக்கமாகி தொடர்ந்து ஓட்டுநர்களாகிவிடுகிறார்கள். எல்லோரும் போன்று அதையேதான் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். வாழ்க்கையின் கடைசியில் மிஞ்சுவது என்னவோ அவர்களின் பயணஅனுபவம் மட்டுமாகத்தான் இருக்கும்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வாழ்க்கையில் மிஞ்சுவது அனுபவம்தான். யதார்த்தத்தை கடைசி வரியில் கூறிய விதம் அருமை.
தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.