Friday, October 18, 2019

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன் சிறுகதை வாசிப்பனுபவம்




எளிய மனிதவாழ்வில் நடக்கும் கனமான சம்பவங்கள் பேய்க்காற்றில் அறுந்து நொடியில் வானத்து பரப்பிலிருந்து காணாமல் போய்விடும் பட்டம் போன்றது. ஆனால் அதன் நினைவுகள் முகத்து வடுக்கள் போல நம் மனதிலிருந்து நீங்குவதேயில்லை. அசோகமித்திரன் எழுதிய கதைகளில் இம்மாதிரியான பொதுத்தன்மை ஒன்றுண்டு. மிக எளிய மக்களின் அன்றாட பிரச்சனைகளை கொண்ட கதைகள் என்கிற பிம்பத்திற்கு பின்னால், தினசரி வறுமையும், தோல்வி பற்றிய சித்திரமும், கைவிடப்பட்ட நிலையையும் எவ்வித உணர்ச்சிகரமான எதிர்வினைகளற்று சொல்லப்பட்டிருக்கும். உணர்ச்சிகரமற்ற என்பதை இங்கு அழுத்திச் சொல்லவேண்டும். ஏனெனில் உத்வேகத்துடன் சொல்லப்படுதலை, உச்சஸ்தாதியில் குரலெடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து, அப்படியானவைகளைகூட சாதாரண சம்பவங்களோடு பிணைத்து மனிதர்கள் இவ்வளவுதான் என்று சொல்லிவிடுபவர் அசோகமித்திரன். கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் இது நிகழ்கிறது. ஆனால் அதே அன்றாடப் பிரச்சனைகளை மெல்லிய நகைச்சுவை பின்ன சொல்லிவிடுவதில் இருக்கும் அழகு அசோகமித்திரனின் முத்திரை என்று சொல்லலாம்.


அன்றாடம் சாலையில் பார்க்கும் மனிதர்கள், தங்களுக்கான தனித்தன்மைகள் எதுவுமற்ற, கைவிடப்பட்ட மனிதர்களாக இருப்பவர்கள். அவர்களுக்கு இந்த சமூகமாற்றத்தின் மீது பெரிய நம்பிக்கைகள் இல்லை. தினமும் ஓடிக்கடக்கும் ஒருநாளை நினைத்து ஏங்குபவர்களும் இல்லை. வாழ்வில் சாதனைகளை செய்ய லட்சிய ஊக்கத்துடன் பரபரப்பவர்களும் இல்லை. ஓடும் நீரின் வேகத்தில் ஓடும் படகைப் போன்றவர்கள். ஆனால் அம்மனிதர்களுக்கு அறம் என்று ஒன்று இருக்கிறது. அதை எக்காலத்திலும் மீறுபவர்கள் அல்ல. எதன் பொருட்டும் தங்களுக்கான அறத்தை விட்டுக் கொடுப்பதில்லை. அதுதான் அவர்களது வாழ்வியல் நோக்காக இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.

அவர் எழுதிய கதைகளில் 15வது கதையானஅவனுக்குப் பிடித்த நக்ஷத்திரம்” என்கிற விரக்தியும் நிராகரிப்பையும் வெளிப்படுத்தும் கதையின் உள்ளே உற்சாகமும் பகடியையும் கொண்ட எப்போதும் எழுதும் அதே பாணி கதைதான். இரு பக்கத்துவீட்டு மனிதர்களின் வெறுப்புகள் ஒருவரது பிள்ளையை இழக்கும் நிலையை கொண்டு சென்றுவிடுகிறது. அதை அறிந்து பக்கத்துவீட்டுக்காரரிடம் மனமுறுகி மன்னிப்பு கேட்க செல்கிறார் அவர். விரக்தியில் இருக்கும் பக்கத்துவீட்டுக்காரர் தன் மனைவியை அழைக்கிறார் இவளிடம் சொல் என்கிறார். மன்னிப்பு கேட்கிறான், கேட்டுவிட்டு அவள் எதையும் சொல்லவில்லை. கதை முடிகிறது. வாசகர் தன்னை இழப்பது இங்குதான். மன்னிப்பே தண்டனையாக ஒருவர் பெறுவது எத்தனை கொடியது. வாசிக்கும் ஒவ்வொரு சமயமும் நாம் அடையும் துயரத்தின் வலியை அன்றாட வாழ்வின் துயரத்துடன் பொருத்திக் கொள்கிறோம். சிறுவனின் தாய் எதாவது சொல்லவேண்டும் என நினைக்கிறோம். ஆனால் வாழ்வு எதையும் சொல்வதில்லை, அது உணர்த்த மட்டுமே செய்கிறது.

(கதையின் லிங்க்:
https://azhiyasudargal.wordpress.com/2011/02/28/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be/)

No comments: