உங்களது ' யாக்கை' நாவல் வாசித்து முடித்தேன் தற்போது. ஒரே வாசிப்பில் முடிக்க முடியாமல், காலம் எடுத்து படிக்க வேண்டிய கனமான கருப்பொருளுடன் இருந்தது. கதையின் ஊடாக வரும் விவரணைகளில். எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் வரிகளில் ஆழ்ந்து வாசிக்க வேண்டியிருந்தது. மனித வாழ்க்கையை உடல் எந்தளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறது.அறியாமையில் வைத்திருக்கிறது. அகத்தேடலுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உடலை புறத்தேடல்களும்..புற சூழ்நிலைகளும் புரிந்துகொள்ளாத குடும்ப உறவுகளும். சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் சட்ட திட்டங்களும் எந்தளவுக்கு சீர்குலைக்கின்றன என்பதை சுப்பிரமணியின் வாழ்க்கை மற்றும் எண்ண ஓட்டங்கள் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.
பத்மாவின் வாழ்க்கை மற்றும் எண்ண ஓட்டங்கள் வழியாக பெரும்பாலான பெண்களின் மன ஓட்டங்கள் உடலின் ஆசைகளை ஒட்டியே அமைந்திருப்பதும், அவர்களின் தேடல் குடும்பம் சார்ந்தும் புறத்தேவைகளை சார்ந்தே இருப்பதையும் புலப்படுத்துகிறது. பத்மாவின் இன்னொரு வடிவங்களே ரேஷ்மி, சுருதி, வானதி எல்லோரும். சாமியப்பாவின் வாழ்க்கை. முதலில் பெண்ணுடல் தேடல்களின் வழியே தன்னுடல் பற்றி புரிதலால் அகத் தேடலை நாடி பயணம் செய்பவராக மாறிவிடுவதும் சுப்பிரமணியனுக்கு சிறுவயதில் ஏற்படும் சில துக்க அனுபவங்கள் அவனையறியாமலயே அகத்தேடலுக்கு அவனை பிற்காலத்தில் இட்டுச் செல்கிறது. உடல் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாவல் பல கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துகிறது. கனமான விஷயத்தை முடிந்த வரை எளிமையாக சொல்ல முயற்சித்திருப்பது வாழ்த்துக்குரியது.
நாவலை படித்து முடித்தவுடன் உடல் மனம் ஆன்மாவை பற்றி பல கேள்விகளையும் தேடலையும் ஏற்படுத்துகிறது.. முன்னுரையில் கூறியபடி அங்கங்கே சில தடுமாற்றமும், திணித்தலும் தென்படுவது சின்ன குறைதான். ஆனால் வாழ்க்கை பற்றியும். உடல் பற்றி மிக தெளிவான எண்ண ஓட்டங்கள் வழியாக எடுத்துச் சொல்வதில் நாவல் வெற்றி பெறுகிறது. வாழ்த்துக்கள் சார்.
இயக்குநர் விஜய் மகேந்திரா
No comments:
Post a Comment