Wednesday, May 20, 2020

எம்.வி. வெங்கட்ராமின் உயிரின் யாத்திரை



எல்லாம் புரியும்படியாக வாழ்க்கை தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வாழ்க்கையின் விந்தைகளை சில விசித்திரங்களை சிலவற்றை நம் நனவிலி மனதால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். சில உண்மைகள் ஒளித்து வைக்கப்படுவதால் நினைவுமனதால் புரிந்துக் கொள்ளமுடியாமல் போகிறது. மர்மத்தின் நோக்கமே ஒளிதலில் தான் இருக்கிறது. நினைவு மனதுக்கும் நனவிலி மனதுக்குமாக ஒரு பயணமாக உயிரின் யாத்திரை இருக்கிறது. எம்.வி. வெங்கட்ராம் எழுதியிருக்கும் உயிரின் யாத்திரை எனும் சிறுநாவல் நனவிலி மனதின் பயணத்தை சொல்லிவிடுகிறது.

ராஜா, ராணி, சதாசிவம், லீலா, கோபு என்று ஐந்து பாத்திரங்களைக் மட்டுமே கொண்ட சிறிய நாவல். தொடர்ந்து எழுதிப் பழகிய எம்.வி.வியின் கைகளுக்கு இச்சிறிய நூலிலும் தெரிகிறது அவர் எழுத்தின் லாவகம். ராஜாவின் மனைவி ராணிக்கு உடல்நலமில்லாமல் இருக்கும் சமயம், நண்பரும் பெண்பித்தருமான கோபுவின் வாயிலாக சதாசிவத்தின் மருத்துவமுறைகளை அறிந்து அவரை காண்கிறார். அவர் அளிக்கும் மருந்து ராணியை காப்பாற்றுகிறது. நன்றி சொல்லவும் வீட்டிற்கு அழைக்கவும் சதாசிவத்தை காண செல்கிறார். அவர் வீட்டில் சதாசிவத்தின் மனைவி லீலாவுடன் சல்லாபத்தில் இருக்கும் கோபு அவரைக் கண்டதும் தப்பித்து ஓடுகிறார். மனசஞ்சலம் கொண்டு அலைந்து, இருநாட்களுக்கு பின் மீண்டும் காணச் செல்கிறார்.

மற்றொருநாள், லீலா பேய் உருவம் கொண்டு சதாசிவத்தை காணவிடாமல் செய்கிறாள். ஆழ்மன உந்துதலில் ஒரு கதவை உடைத்து உள்ளே செல்கிறார். எல்லாம் அமைதியடைகிறது. லீலா காணாமல் போகிறாள். நடுவில் அமர்ந்து தியானத்தில் இருக்கும் அவருடனான பேச்சு ராஜாவை மனசஞ்சலங்களை நீக்கி அமைதியை மனதில் நிலைநாட்டுகிறது. வீட்டிற்கு சென்றால் மனைவி அவர் கால்களில் கண்ணீர் விட்டு அழுகிறாள். இனி வாழ்க்கை எந்த சூழலிலும் வழித்துணையாக அவர் வருவார் என நம்புகிறார்.

சிறிய நூல் சில நேரங்களில் பல்வேறு வித்தைகளை காட்டுவதுண்டு. வித்தைகள் என்றால் சித்துவித்தைகள் கூடதான். ராஜாவின் ஆழ்மன பயணம்தான் இக்கதை என தோன்றுகிறது. ராஜாவின் நல்ல குணங்கள் சிந்தனைகள் சதாசிவமாகவும், அவரது வக்கிரங்கள் லீலாவாகவும், சந்தேக எண்ணங்கள் கோபுவாகவும் நாம் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

நனவு மனம் பற்றிக் கொள்ளும் ஒன்றை அதில் உண்மை-பொய் எவை என்கிற குழப்பத்தை விடுவித்து நனவிலி மனம் வெளிக்காட்டுகிறது. சந்தேகம் மனதின் கரையான். தீராமல் வளர்ந்துக் கொண்டிருப்பது. மனைவி மீதான சந்தேகத்தை ராஜாவின் நனவிலி மனம் மட்டுமே அறிந்திருக்கிறது அதை தீர்க்கும் மருந்தும் அதனிடம்தான் இருக்கிறது. அதை அடைய ராஜா செய்யும் பிரயத்தனங்கள் உயிரின் யாத்திரை.

எம்.வி வெங்கட்ராம் கதைகள் ஆன்மீக தளத்தை தொடுபவை. அவரது நாவல்களான நித்யகன்னியும், காதுகளும் நேரடியாக ஆன்மிகம் மிளிர துலங்குபவை. இலக்கியத்தில் ஆன்மீகம் என்பது கடவுள் ஏற்பல்ல, மனதின் போக்குகளையும், நிச்சலமற்ற தன்மையை அடையும் அமைதியும் தான். மனசஞ்சலங்கள் ஒருவரது உயிர்வாழ்தலை எவ்வளவு தூரம் பின்னுக்கு இழுத்துச் செல்கிறது என்பதை கதைச்சொல்லி உணரும் தருணங்கள் வாசகர்களும் உணர முடியும்.

அத்தியாயங்களின் இடையே திருமூலரின் சில வரிகள் வெளிப்படுவது கதைக்கு மிக நெருக்கமான உணர்வுகளை ஊட்டுகிறது. எம்.வி.வி எளிய சொற்களையே பயன்படுத்துகிறார். மனதின் இருப்பைப் பற்றிய கேள்விகள் கொண்ட சிறு நாவலில் கடின தத்துவ சொற்களை பயன்படுத்தாமல் எளிமையான சொற்கள் வழியாகவே வாசகர்களை சென்று சேர்ந்துவிடுகிறார். திருமூலரைப் போன்று சொற்சேர்க்கைகளில் அவருக்கு அசாத்தியமான தன்னமிக்கை இருக்கிறது.

ராஜாவும் ராணியும் என்று இருபாத்திரங்களுக்கு பின்னால் கற்பனையான இருபாத்திரங்களில் தங்கள் இருப்பை வெளிப்படுத்துவதில் இருக்கும் ஆசிரியரின் கற்பனை அலாதியானது. கூடவே அதை கதைச்சொல்லியின் கனவாகவும் சில விஷயங்கள் தெரிவது கதைக்கு நம்பத்தன்மையை அளிக்கிறது. நனவிலி மனம் என்பதே கனவில்தான் தொடங்குகிறது. அவற்றை சரியாகவே ஆசிரியர் பயன்படுத்துகிறார்.

யதார்த்த நாவல் வகைமையிலிருந்து விலகி மனதின் நகர்வை வெளிப்படுத்துகிற உயிரின் யாத்திரை நாவல் ஒரு தத்துவார்த்த அல்லது மிகுபுனைவு வகையை சேர்ந்ததோ அல்ல. ஆனால் யதார்த்த தளத்தில் நின்றே தத்துவார்த்தமாக மனதின் பயணத்தை விவரிக்கிறது என கொள்ளலாம். மனம் போகும் பயணம் உயிரின் பயணமும் தான். எல்லா வகையிலும் நமக்கு அது அனுபவம் தான். முடிவுறா நனவிலி அனுபவம்.

(அடவி இதழில் வெளியான கட்டுரை.)

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான விமர்சனம்
நன்றி ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிறந்த எழுத்தாளரின் எழுத்தைப் பகிர்ந்த விதம் அருமை. பாராட்டுகள்.