Monday, May 18, 2020

எம்.வி. வெங்கட்ராம் 100 ஆண்டுகள்


"தமிழ்நாட்டில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வது ஒரு மானங்கெட்ட பிழைப்பு" என்று பேட்டியில் சொல்லியிருந்தார் சாகித்ய அகாதமி விருது பெற்ற எம்.வி. வெங்கட்ராம். முழுநேர எழுத்தாளனாவது இன்றுவரை தமிழகத்தில் மானங்கெட்ட பிழைப்பாகத்தான் இருக்கிறது. முழுநேர எழுத்தாளன் என்பது ஒருவகையில் லெளகீக வாழ்க்கையை கொண்டவர்களுக்கு தற்கொலை முயற்சிதான். எம்விவி அவர்கள் தன் 16வது வயதிலிருந்தே மணிக்கொடியில் சிறுகதைகள் எழுத தொடங்கிவிட்டவர். 1948ல் தேனீ என்கிற பத்திரிக்கையையும் நடத்த தொடங்கினார்.

சிறப்பாக நடந்துக் கொண்டிருந்த பட்டுஜவுளி வியாபாரமும் அவருக்கு இருந்தது. தேர்தலில் கூட ஒரு சமயம் நின்று செலவு செய்தார். நல்ல நிலையில் இருந்த அவர் முழுநேர எழுத்தாளனாவது ஒன்றும் பெரிய சிக்கலாக அவருக்கு அமைந்துவிடவில்லை. ஆனால் காலத்தில் அவரது கையிருப்புகள் குறைந்து இனி உண்வு உண்ண எழுதி மட்டுமே சம்பாத்திக்க வேண்டும் என்கிற நிலைக்கு வந்தார். ஒரு பதிப்பகத்தில் 60 அபுனைவு நூல்கள் எழுத ஒப்பந்தம் செய்துக் கொண்டு எழுதினார். இப்படி நடந்துவந்த அவர் வாழ்வின் அந்திம காலத்தில் ஒரு பேட்டியில் தான் மேற்ச் சொன்ன வாக்கியங்களை குறிப்பிட்டிருந்தார்.

மே 18, 1920 ஆண்டும் வீரையர் சீதையம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். தாய்மாமன் வெங்கடாசலமையரின் சஷ்டியப்பூர்த்தியில் வெங்கடாசல்மையர் சரஸ்வதி தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்டார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என்று எழுதி தள்ளினார். ருக்மணி அம்மாளை திருமணம் செய்து 4 ஆண்களும் 3 பெண்களும் உள்ளார்கள். கும்பகோணத்தில் தோப்பு தெரு என்கிற இடத்தில் அவர் இல்லம் இருக்கிறது. அவர் வீட்டு திண்ணையில் எப்போது இலக்கிய கூட்டங்கள் நடக்கும் இடமாக இருந்திருக்கிறது. தி. ஜானகிராமனில் தொடங்கி கும்பகோணத்தில் இருந்த அத்தனை இலக்கிய வாதிகளும் அவருக்கு நண்பராக இருந்திருக்கிறார்கள்.

மணிக்கொடியில் வெளியான அவரது சிறுகதையின் பெயர் சிட்டுக்குருவி. அதில் 18 சிறுகதைகள் வரை எழுதினார். நித்தியகன்னி, வேள்வித்தீ, இருட்டு, உயிரின் யாத்திரை, அரும்பு, ஒரு பெண் போராடுகிறாள், காதுகள் என்று ஏழு நாவல்களை எழுதியிருக்கிறார். பைத்தியக்காரப் பிள்ளை, தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை உட்பட 200  சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறார். நாட்டுக்குழைத்த நல்லவர்கள் என்று தலைப்பில் இந்திய/உலகத் தலைவர்களின் வாழ்க்கை ஒட்டிய நூல்கள் 60க்கு மேற்பட்டவை வறுமையின் காரணமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பழனியப்பா பிரதர் பதிப்பகத்திற்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்.

என் பள்ளி பருவத்தில் அவரை காணச் சென்றிருக்கிறேன். ஒரு பத்திரிக்கையில் வெளியான மணிக்கொடி எழுத்தாளர் இங்கு இருக்கிறார் என்கிற செய்தியை கொண்டு அவரை காணச் சென்றேன். காது கேட்காத, கண்பார்வை மிகக் குறைந்த அவரிடன் பேசியது இன்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்க மணிக்கொடியில எழுதியிருகீங்களாமே இதுல போட்டிருக்கு என்று அவரிடம் பாயிஸ்சாக கேட்ட கேள்வியை மற்றவரிடன் காதருக்கில் கேள்வியை மீண்டும் கேட்டு வசீகரிக்கும் சிரித்த முகத்துடன் பதிலளித்தார். சிறிய சிரிக்கும் கண்கள், வெற்றிலை பற்கள் தெரியும் அகன்ற சிரிப்பு அப்போது இருந்த எல்லா இலக்கியவாதிகளையும் ஈர்த்திருக்கிறது. அவரது இலக்கிய சந்திப்பு பேச்சுகள் கூட்டம் ராமசாமி கோயில், காந்தி பார்க், ஜனரஞ்சனி ஹால் போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. தி.ஜானகிராமனது மோகமுள் நாவலில் ஒரு பாத்திரமாக வருமளவிற்கு வசீகரமானவராக இருந்திருக்கிறார் எம்விவி. அவரது இலக்கிய நண்பர்கள், கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், திரிலோக சீதாராமன், தேனுகா, தஞ்சை ப்ரகாஷ், சி.எம்.முத்து, நா.விச்வநாதன், பொதிகைவேற்பன் போன்றவர்கள்.

தன் நாவல்களைப் பற்றி சொல்லும்போது “ஒரு
நாவல் மாதிரி மற்றொன்று இருக்கக் கூடாது என்று திட்டமிட்டே எழுதினேன். ‘நித்திய கன்னிபோல்வேள்வித் தீஇருக்காது. ‘வேள்வித்தீபோல்அரும்புஇருக்காது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்”. என்றார். காதுகள் நாவலுக்காக 1993ல் சாகியத அகாடமி விருது ரேடியோவில் அறிவிக்கப்பட்டது அவராலே நம்ப முடியவில்லை என்று பேட்டியில் ('சாரதா', 1994) சொல்லியிருக்கிறார்.

அவர் நடத்திய தேனீ இதழில் மெளனி, தி.ஜா., க.நா.சு போன்றவர்களின் முக்கிய படைப்புகள் அதில் வெளியாயின. க.நா.சுவின் எழுத்து தேனீயில் வெளிவந்த பின்னே பிரபல்யமடைந்தது. தேனீயில் வெளியான ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் அப்போது யாரும் கொடுக்காத சன்மானத் தொகையை அனுப்பிக் கொண்டிருந்தார். அதனாலேயே நஷ்டம் ஏற்பட்டு அவர் சொத்துக்களை விற்க வேண்டியிருந்தது. கடைசி காலத்தில் காதுக்குள் ஓசைகள் கேட்க தொடங்க கண் பார்வை மங்க தொடங்கியது. ஜனவரி 14, 2000 ஆண்டில் அவரது 80வது வயதில் மறைந்தார்.

ஒர் இலக்கிய தமிழ் எழுத்தாளனின் கொண்டாட்டமும் நிறைவுடனும் துயரமும் மனசஞ்சலத்துடனும் வாழ்ந்து மறைந்தார்.

3 comments:

KILLERGEE Devakottai said...

ஓர் அரிய மாமனிதரின் வரலாறு அறிந்தேன் நன்றி நண்பரே..
- கில்லர்ஜி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசினர் பள்ளியில் படித்த என் நண்பர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவரை ஒரு முறை சந்தித்துள்ளேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவரைக் கண்டு வியந்து நின்றேன். பின்னர்தான் ரவிசுப்பிரமணியன் மூலமாக அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டு அவரது எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்தேன். மாமனிதரை நினைவுகூர்ந்த விதம் அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரிய எழுத்தாளரைத் தங்களால் அறிந்தேன்
நன்றி