Wednesday, May 13, 2020

சாமத்தில் முனகும் கதவு: சிறுகதை தொகுப்பு விமர்சனம் - நாகரத்தினம் கிருஷ்ணா



. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு

மனம்
அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து, நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது.
மனத்தின் உண்மையான சொரூபம் நிர்வாணமானது. உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப்பட்டதோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான கட்டுகள் இறுக மறக்கும் நிலையில் அல்லது தளர்கின்ற கணத்தில்பசியாற வேட்டையாடுவதில் தவறில்லைஎன போதிக்கிற மனதின் நியாயத்திற்கு ஐம்புலன்கள் சேவகர்கள். இந்த மனத்தை உளவியல் அறிஞர்கள் நனவு (consciousness), முன்நனவு அல்லது மன உணர்வின் இடைநிலை அல்லது தயார்நிலை (preconciousness), இறுதியாக நனவிலி நிலை (unconsciousness) என வகைப்படுத்துகின்றனர். எழுத்தென்பதே நனவிலி நிலையின் வெளிப்பாடென்பது இவ்வறிஞர்களின் கருத்து.


கே.ஜே..அசோக்குமார் எழுத்துகள் நனவிலி நிலையைக் கடந்தவை. அதாவது மன வீட்டின் நிலைப்படியைக் கடந்து, நுழைவாயிலில் காத்திருந்து அலுத்து, வீதிக்கு வந்தவை. தன்னையும் தானறிந்த மனிதர்களையும் மனக்கண்களால் பார்ப்பவை, மனதால் பரிசீலிப்பவை, சிற்சில சமயங்களில் கதையாடல் தேர் தமக்கான வீதியை திசைதப்பியபோதும் கவனத்துடன் தேரடிக்குத் திரும்புகிற கதைகள்.
முதல் மனிதனும் இரண்டாம் மனிதனும்:

மனிதர்
சமூகத்தை மூன்று மனிதர்களாகப் பிரதிநிதித்துவப்படுத்தலாம். முதல்மனிதன் வேறுயாருமல்ல நாம். மூன்றாம் மனிதன்: நாம் அதிகம் சந்திக்க வாய்ப்பற்ற பெரும் திரளான மக்கள் கூட்டத்தில் ஒருவன். இரண்டாம் மனிதன்? கண்களுக்கு அப்பால் இருக்கிற மனிதனல்ல தினம் தினம் கண்ணிற்படுகிற மனிதன், கடலுக்கு அப்பால் இருப்பவனல்லன், கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவன். தூரத்து சொந்தமல்ல பங்காளி. மூன்றாவது வீட்டிலோ அடுத்த தெருவிலோ வசிப்பவன் அல்ல, உங்கள் தெருவில் நீங்கள் தினமும் சந்திக்கிற எதிர்வீட்டுக்காரன். வேறொரு துறைசார்ந்த ஊழியனல்ல, உங்கள் அலுவலகத்தில் அடுத்த மேசையில் கோப்பு பார்க்கிற சகஊழியன். வேறு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரல்ல, உங்கள் கல்லூரியில் உங்கள் துறை சார்ந்த பேராசிரியர். மலையாள எழுத்தாளரோ, கன்னட மொழி எழுத்தாளரோ அல்ல நம்பைப்போலவே நோபல் விருதை தவறவிட்ட தமிழ் எழுத்தாளர். இந்த இரண்டாம் மனிதனை, அவன் விழுந்தால் ஓடிச்சென்று அனுதாபம் தெரிவிக்கும் மனம் ஆறுதல் படுத்தும் மனம், அவன் எழுந்து கம்பீரமாக நடந்தால் அசூயை கொள்கிறது. கந்தல் கோலத்தில் பிச்சை கேட்கும் மனிதனுக்கு இரக்கப்படும் மனம், அவனே கொஞ்சம் வெள்ளையும் சள்ளையுமாக வீதிக்கு வந்தால்இவனுக்கு வந்த வாழ்வைப் பாருஎன்கிறது. இச்சிறுகதை தொகுப்பின் பிணவாடை சகமனிதன் வளர்ச்சிக்கண்டு காயும் மனங்களுக்கு நல்ல உதாரணம்.
பெரும் எண்ணிக்கையில் இயங்கும் இத்தகைய முதல் மனிதர்களின் மனதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது கே.ஜே. அசோக்குமாரின் கதைகள். அவர் கதைகள் தன்மையில் சொல்லப்பட்டாலும் படர்க்கையில் சொல்லப்பட்டாலும் வீழ்ந்த மனிதர்களைப் பற்றியது, அவர்களின் வீழ்ச்சிகாண காரணத்தை பார்வையாளனாக அறிய முற்படுவது.
இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்த்ததைவிட பாதியாகிவிட்டிருந்தவௌவால்கள் உலவும் வீடு கதையில் வரும் அண்ணன்; “உன்னைச் சுமந்து செல்ல முடியாது எனச் சொல்லும்படி வளைந்த முன் சக்கரம் ஆடியபடி மறுப்பு தெரிவிக்கின்றசாமத்தில் முனகும் கதவு நாயகன் கூத்தையா; “பிச்சைக்கார ர் என முதலில் நினைத்திருந்தான். ஆனா இல்லைஎன்றும் சொல்ல முடியாது.” எனும் மயக்கத் தோற்றம்கொண்ட அந்நியன் என ஒருவன் பெரியவர்; “தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதை உறுதிபடுத்திக்கொண்டு விளக்குகளை அணைக்காமல்படுத்துறங்கும் போதும் கனவில் புலியைக் காண்கிற வருகை கதைநாயகன்; “வாசனையே இல்ல. இத யாரு வச்சிக்குவாஎனக் கனகாம்புரம் பூவை விரும்பாத வாசமில்லாத மலர் சந்திரா; “நான் சத்தியபிரகாஷைக்கொன்று அவனுடலில் உட்புகவேண்டும்என்கிற கொதிநிலை பொறாமையில் உள்ள பிணவாடை பரந்தாமன். “ஆமாமா, நாங்க பிரிஞ்சோன்னயே பெரிய கட தெருவில நட த்த முடியாம வித்துட்டு கும்பேஸ்வரம் கோயில் கிட்டப் போச்சி, அப்புறம் உங்கப்பன் திருவாலூரு போயிட்டு திரும்பிவந்தப்ப கீழ சந்து தெருவில வந்துச்சு. அப்பவே ரொம்ப ஒடிச்சிட்டாருமாங்காச்சாமி வரும் கதை சொல்லியின் தந்தை. கதிர்தான் முதலில் பஸ் ஸ்டாண்ட் என்று அழைக்க ஆரம்பித்தான். பஸ் ஸ்டாண்டில் கண்டெடுக்கப்பட்டதால் இப்பெயர்பஸ் ஸ்டாண்ட் கதையில் வரும் சிறுவனென தொகுப்பில் எழுத்தின் மையப்பொருளாக இடம்பெறும் ஆண் பெண் இரு பாலருமே வீழ்ந்த மனிதர்களாக இருக்கிறார்கள்.

மனித
மனத்தின் ஓட்டைகளும் இரத்தக் கசிவும் அவசரச் சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளியை நினைவூட்டுகின்றன. நமக்கும் வாழ்ந்த மனிதர்களைக்காட்டிலும் வாழ்ந்துகெட்ட மனிதர்களெனில் கூடுதல் கரிசனம். மனிதர்களின் இச்சபலத்தை புரிந்துகொண்டு, பரிவும் குற்றவுணர்வுமாக கதைசொல்லி இம்மனிதர்களை தேடிஅலைகிறார். அலைந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் மொழியும் இதமானவை.

கே
.ஜே. அசோக்குமாரின் கதைகளில் உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் ஏராளம். கொஞ்சம் குறைத்துக் கையாண்டிருக்கலாம். பல இடங்களில் பொருத்தமாக கதைக்கிசைந்து கையாண்டிருப்பதால், அவற்றின் இருப்பையும் சந்தேகிக்க முடிவதில்லை.
எதிர்ச்சாரி வீட்டுவாசலில் இரவெல்லாம் திரிந்த களைப்பில் இரண்டு நாய்கள் வண்டியில் அடிபட்ட துபோல படுத்துக்கிடந்தன.”

நீருக்கு அடியில் தெரியும் கூழாங்கல்லைப்போல மின்னும் கண்களோடு உற்சாகத்தோடு அவர் பேசுவதைக்கேட்க சிலர் எப்போதும் இருப்பார்கள்.”

கூரையில் ஒட்ட டைகள் வெளித்திண்ணைவரை பரவித் தொங்கிக்கொண்டிருப்பதை இப்போதுதான் கவனிப்பதுபோலப் பார்த்தான்

உச்சியில் சில சில்வண்டுகள் பறந்துகொண்டிருந்தன. நீர்போன்ற தெளிந்த நீலவானத்து பின்னணியில் அது தெளிவாகத் தெரிந்தது.”

தன்மையில்
சொல்லப்பட்ட கதைகள் சுயத்துடன் கதை சொல்லிக்குண்டான போராட்டங்களை விவரிப்பவை, ஆழ்மனதின் சிக்கல்கள் குழப்பமின்றி கதைகளாக்கப்பட்டுள்ளன. இத்த்கைய முயற்சிகள் தமிழுக்குத் தேவை. தமிழ்ச் சிறுகதைக் களத்தில் அதிகம் வாசித்திராத கதைக்களங்கள். வருகை, எறும்புடன் ஒரு சனிக்கிழமை, சாமத்தில் முனகும் கதவு, அவன் (இதே பெயரில் நான் எழுதியுள்ள ஒரு கதை நினைகுக்கு வந்தது.) ஆகியவை அவ்வகையிலான கதைகள்.

எனக்குக்
குறிப்பாக சாமத்தில் முனகும் கதவு, அபரஞ்சி, அந்நியன் என ஒருவன், மாங்காச்சாமி, பின் தொடரும் காலம் ஆகியவை முக்கியமான கதைகள். எனது தேர்வும் உங்கள் தேர்வும் இணங்கியாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தங்கள் இல்லை. ஆனால் ஒரு நல்ல வாசிப்புணர்வை கே ஜே . அசோகுமார் கதைகள் தரும் என்பது உறுதி.

சிலவருடங்களுக்கு
முன்பு இச்சிறுகதை தொகுப்பு ஆசிரியரின் சிறுகதையொன்றை சொல்வனம் இணைய இதழில் வாசித்தேன். பாராட்டியிருந்தேன். இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலால கதைகள் அதை நிரூபித்துள்ளன. மேலும் வளர்வார். பாராட்டுகள்.

நன்றி
: திண்ணை இணைய இதழ்.