Tuesday, April 28, 2020

ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள்


சிறுசிறு கீற்று ஒளிகளின் வழியே முன்பு கண்ட இருள்சுரங்கத்தை நினைவிலிருந்து எடுத்துச் சொல்வது போன்றது பத்துலட்சம் காலடிகள் சிறுகதை அல்லது குறுநாவல். அப்படிதான் நினைக்கிறேன். ஓளச்சப்பன் அதுவும் குடியில் இருக்கும்போது தன் நினைவுகளில் இருந்து மீட்டு பலமுறை அசைப்போட்ட அல்லது ரகசியமாக சொன்ன ஒன்றை சொல்வது தான் கதை சாரம். அந்த கூட்டதில் கேட்டும் அரைதமிழ் எழுத்தாளன் போல நாமும் ஆர்வமாக இருக்கிறோம். ஓளசேப்பன் சொல்வது கேரளத்தில் இருந்த மாப்பிள்ளை முஸ்லீங்களை பற்றியது. அவர்களின் வாழ்க்கை முறை, கடல்கடந்துவந்த பயணம், இன்றைய  நிலை. ஆனால் கிருஸ்தவ, பிராமன, நாயர், முஸ்லீம், கம்யூனிஸ்ட் என்று எல்லோரை கிண்டலடிக்கிறார்கள்.


பெரிய கப்பல் கட்டும் தொழிலை செய்தவர்கள் மாப்பிள்ளை முஸ்லீம்கள். அதன் அறிவியல் நுட்பங்களை அறிந்தவர்கள் அல்ல. ஆனால் தொடர்ச்சியான தலைமுறை தலைமுறை அனுபவத்தின் வாயிலாக அதன் தத்துவங்கள் தெரியாமலே பயன்படுத்துபவர்கள். கப்பல் செய்வதிலிருந்து கப்பலை தண்ணீரில் விடுவதுவரை. முழ்கிபோன கப்பலை வெளியே எடுக்கும் தொழிலையும் தெரிந்தவர்கள். ஒருமுறை நீரில் முழ்கிய ரயிலை வெளியே எடுக்க உதவுகிறார்கள். கிரேன் போன்ற தொழிநுட்பங்கள் இன்றைய காலகட்டத்திலும் அதை செய்யமுடியவில்லை.

அது எப்படி சாத்தியமாகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தப்பாத காலடிகளில் வழியே நிகழ்கிறது. ஒரு காலடி தப்பினாலும் அவர்கள் நெறிபிறழ்ந்து அழிவை நோக்கி சென்றுவிடுவார்கள். ஒரு காலடிகூட தப்பாது என்கிறார் அப்துல்லா எனும் மாப்பிள்ளை முஸ்லிம். நேர்மையான, பொய்சொல்லாத உண்மையுடன், தீங்கு செய்யாத வாழும் அப்துல்லா பாய். வேறொரு கொலை கேஸ் விஷயமான ஓளசேப்பன் அவரை சந்திக்கும்போது அவர் மகனைப் பற்றி கேட்கிறார், அவன் கொல்லப்பட்டு கடலில் வீசப்பட்டான் அதை செய்தது நான் என்கிறார். லட்சம் காலடியில் ஒரு தப்பாத காலடி.

அட என வியக்க வைக்கும் கதைகளை ஜெ. எழுதுவது வழக்கம் தான். ஆனால் இக்கதையில் உள்ள புதுமை, ரகசியத்தை பகிர்வது போன்றதில் இருக்கும் நடுக்கம். யாரும் அறியாத ஒன்றை பல ஆண்டுகள் கழித்து ஓளசேப்பன் சொல்வது உண்மையும் இருக்கலாம் பொய்யும் இருக்கலாம். அல்லது இரண்டும் கலந்திருக்கலாம். நாம் அறிந்தது நம் மனதிற்கு மட்டுமே தெரியும். அதுதானே வாழ்க்கையின் ரகசியமும்.

2 comments:

பாஸ்கர் said...

மிகச் சுருக்கமான அறிமுகம் கதை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது, நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கத் தூண்டும் விமர்சனம்
நன்றி