சித்தர்மரபுகளற்ற ஒரு வெட்டுப்பட்ட சைவ மதமும் மறுபிறப்பை மறுக்கும் புத்தமதமும் மோதிக் கொள்வதில் இருக்கும் பதற்றமான ‘நிச்சயமின்மையை’ நாம் இலங்கைப் போர் பின்னணியில் பார்க்கிறோம் என நினைக்கிறேன். இஸ்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இரு இனங்களில் மோதல்களில் தெரியும் வேகம் அவை மறுபிறப்பை மறுப்பதனால் எழுந்தது என நினைக்க தோன்றுகிறது. வேறுபிறவியில் ஒருவன் அடையும் துன்பத்திற்கு பயந்து செயல்படுவது அல்லது செயல்படாமல் இருப்பது இந்திய மனநிலை. இந்தியா எதிர்செயல்பாடுகளில் மிதவாத போக்கை கடைபிடிப்பதில் இரண்டாயிரம் வருடத்திற்கு
மேலான அனுபவம் இருக்கிறது.
இந்திய மாவோயிஸ்டுகள், போடோ இனத்தவர்கள் இந்துமதத்திலிருந்து வெளியேறியவர்கள். நீண்டகாலமாக இக்கொள்கையில் ஊறியவர்கள். அவர்கள் மிதவாதத்தை தாண்டியதை அதிலிருந்துதான் புரிந்துக் கொள்ள
வேண்டியிருக்கிறது.
லத்தீன் அமெரிக்க அல்லது ஆப்பிரிக்க புனைவுகளை போல ஒரு அன்னியத்தன்மையுடன் ஏன் இலங்கைவாழ் தமிழர்களின் எழுத்துகள் அமைகிறது என சந்தேகங்கள் மனதில் சிலசமயம் எழுவதுண்டு. அதற்கு மேற்சொன்ன வாதங்கள் காரணமாக இருக்கலாம்.
மொழியில் தேயும் சொற்களின் வரிசை அல்லது இடங்கள் அளிக்கும் சூழலின் புதுமை இப்படியும் காரணங்கள் இருக்கும் என நினைக்கிறேன். உறவுமுறை பெயர்கள் சிலசமயம் குழப்புவதுண்டு. ஆனால் அனைத்தையும் தாண்டி புதிய உலகத்தை அறிமுகப்படுத்துவதினால்
அந்த அன்னியத்தன்மை மறைந்துவிடுகிறது. ஷோபாசக்தி எழுதியிருக்கும் இச்சா நாவல் மிக நெருக்கமான
நேரடி தன்மையுடன் மேற்கூறிய அத்தனை தன்மைகளையும் தாண்டி நெருக்கமாக இருக்கிறது. நீண்ட
தூரம் வலசை போகும் ஆலா என்கிற ஆர்டிக் பறவையின் பெயரை கொண்டிருக்கும் பெண் கரும்புலியின்
கதை. வெள்ளிப்பாவை என்கிற பெண்போராளி எழுதியிருக்கும் நிஜகுறிப்புகளை துணையாக கொண்டு
புனைவாக எழுதியிருக்கும் நாவல்.
உயிர்வாழ்த்தலின் மீதான அலாதியான
ஆசை எல்லா துன்பங்களையும் தாங்கி, கடந்து தான் நினைக்கும் ஒன்றை அடைய நினைக்கிறது.
போர் முனையிலும் அடையபோகும் இலக்கையும்தாண்டி காதல், காமம் போன்ற அடிப்படை இச்சைகள்
நிகழ்வதும், எலிகளின் பாதாள வாழ்க்கைபோல மனிதர்கள் சிறு இடைவெளிகளிலும் நுழைந்து வெளியேறி
தங்களின் உறவுகளை பேணுவதும், பணம், பதவி போன்றவைகளின் ஆசைகளின் மேல் அடிமையாவது நிகழ்வதும்
மனித மனத்தின் எல்லையின்மையை கொண்டிருக்கிறது. துப்பாக்கி கிடைத்ததும் மனிதமனம் அடைகிற
ஆனந்தத்திற்கு அளவேயில்லை. மனித கூட்டத்தின் சட்டதிட்டங்கள் மறைவதும், சாகசங்களில்
கிடைக்கும் களிப்பும், புதிய உலகு அவர்களுக்கு காட்சிக்கு கிடைக்கிறது.
சிங்கள கிராமத்தில் இருக்கும்
நான்கு தமிழ் குடும்பங்களின் ஒன்றில் இருப்பவளும், ஊர்காவல் படை என்கிற சிங்களர்களின்
படைகளை அவ்வூரில் ஆலாவிற்கு தண்ணீர் கேட்டுவரும் புலிகளுக்கு உதவியதால் தன் தம்பியை
இழந்து, பாலியல் ரீதியாக தாத்தாவின் துன்புறுத்தல்களை தாண்டி புலிக்கூட்டம் அவளுக்கு
தாத்தாவை கொண்டு அவளுக்கு உதவுவதும், ஊர்காவல் படையினரால் பிடித்துச் செல்லும்போது
புலிகளின் சிறுவன் தூக்கியால் சர்வ சாதாரணமாக சுட்டு அவளை மீட்பதும் என புனைவுகளை தாண்டி
பல்வேறு சாத்தியங்களை நிஜங்கள் கொண்டிருப்பதை வாழ்வின் பெரிய உயரங்களாக நினைக்க வைத்துவிடுகிறது.
எவ்வளவு களிப்புகள் இருந்தாலும் மனித மனம் அமைதியையே விரும்புகிறது. தனக்கு தேவையான
அமைதி, ஆன்மீகம் எல்லாமே பெரிய வெற்றிகள் பெற்ற பின்னும் அடையவே விரும்புகிறது மனம்.
மகத்தான மரணம் என்று நினைப்பது நிகழவில்லை என்றால் மகத்தான தோல்வியை வேண்டுகிறது. உண்மையில்
ஆலா விரும்பியது மரணத்தை அல்ல, அவள் விரும்பியது அமைதியை. அவளால் தாத்தாவை, மதன்லாலை,
பப்பாவை எல்லோரையும் மன்னிக்க முடியும். அவள் விரும்பிய அதே வாழ்க்கையை திரும்பி தருவதாக
ஒரு சொல்லியிருந்தால் அவள் போராளியாகியிருக்க மாட்டாள். அந்த இச்சா அவளை இயக்கியது.
'உரோவன் மொழி' கதைகளும், ஐரோப்பிய
பயணக் கதைகளும் தேவையில்லை. அது 'நிஜமாக' இல்லாதபோதே நம் மனதில் ஒட்டவில்லை. ஆனால்
அப்பகுதிகள் மிக அழகாக அதிபுனைவுடன் எழுதப்பட்டிருக்கின்றன. ஆலா விரும்பும் இச்சை அவள்
உடல் துயரங்களை தாங்கி ஒளிருமென நினைத்திருந்ததுதான். உளகற்பனைக்கும் ஆசைக்கும் முன்னால்
உடல் துயரம் ஒன்றுமில்லை.
2 comments:
புத்தகம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது, நன்றி. சிறிதாக இருந்தாலும் ஆர்வத்தை தோண்டும் அறிமுகம்!
விமர்சனம் அருமை
நூலினைப் படிக்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம்
நன்றி
Post a Comment