Tuesday, March 24, 2020

புரண்டு படுக்கும் உலகம்


பூமியின் முழுமையான புகைப்படம் எடுக்கப்பட்டதும், அதுவரை காணப்படாத நிலவின் மறுபக்கம் புகைப்படமாக எடுக்கப்பட்டதும், நிலவில் மனிதன் கால் வைத்த பின்தான் நிகழ்ந்தது. அதன்பின் தான் மனிதனுக்கு தனக்கு நிகரானவன் யாருமில்லை என்கிற எண்ணம் பித்தேறியது என நினைக்கிறேன். ஏனெனில் புரியாத வானை புரிந்துக் கொண்டுவிட்டேன் என்கிற ஆணவமும், அதிகாரமும் கைக்குள் வந்ததுவிட்டதாக நினைக்க ஆரம்பித்துவிட்டான். 70களிலிருந்து இந்த ஆணவம் தொடங்கி 90களில் வளரத்தொடங்கியது. அதன்பின்னால் தொடர்ச்சியாக மனிதன் செய்யாத அட்டூழியமில்லை என்று சொல்லலாம். ப்ளாஸ்டிக்கை எல்லா இடத்திலும் பரவவிட்டது, கடல் உயிரினங்களை கொன்று கடலை ஆக்கிரமித்தது. காடுகளை முழுமையாக ஆக்கிரமித்து நகர வளர்ச்சி என்ற பெயரில் சூரையாடி, எல்லா ஜீவராசி, மரங்கள், மலைகள், ஆறு, போன்றவைகளை காலி செய்து, இயற்கையை முடிந்தளவிற்கு ஒழுங்கின்மையை கொண்டுவந்து நிறுத்தியது மனிதன் தான்.

உலகம் ஒருசமயம் தன்னை புதுபித்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. பெரிய தொற்றுநோய்கள் பரவி, விரிவடைந்த மக்கள் தொகையை குறைத்து, இயற்கையை மீட்டுக் கொள்கிறது. பெரிய தொற்றுநோய்கள் பரவிய காலங்களைப் பார்த்தால் அது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதை பார்க்கலாம்.

ப்ளேக் நோய் பரவியபோது மக்கள் பயந்து ஓடியதை அப்போது வெளியான எல்லா இலக்கியங்களிலும் இடம்பெற்றிருந்தது. இன்று அதே காலம் திரும்பவந்திருக்கிறது என நினைக்கிறேன். தேளையும், வெட்டுக்கிளிகளையும், கரப்பான்பூச்சிகளையும் வறுத்து தின்ன சீனர்கள், எலிக்குஞ்சுகளை உயிருடன் ஒரு சப்ஜியில் கலந்து தின்பதை பார்த்தபோது உண்மையில் கொரோனா என்னும் உயிர்கொல்லி உலகம் முழுவதும் அச்சுறுத்துவது சரிதான் என தோன்றியது. சீனர், ஜப்பானிய, கொரியர்களின் உடைகளுக்கும் உணவு பழக்கங்களுக்கும் எளிய விலங்குகள் எப்படி கொள்ளப்படுகின்றன என பார்க்கும்போது நெஞ்சம் பதறவே செய்கிறது. தோலுக்காக உயிருடன் உரித்து எடுக்கப்பட்டு கீழே விடப்படும், அணில், கரடி, நரி போன்ற அப்பாவி சின்ன உயிரிகளின் துடிதுடிப்பை பார்க்க பெரிய மனோதிடம் நமக்கு வேண்டியிருக்கிறது. மத்திய கிழக்கு மேற்குலகு போன்ற இடங்களிலும் இதே நிலைதான்.

விலங்குகளை துன்புறுத்தல்கள் இதற்கு முன்பே நடந்திருக்கின்றன. அதற்கு விதிகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டும் இருக்கின்றன. ஆனால் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமான தேவைகள் பெருக வேட்டையாடல்கள் அதிகரித்தன. பெரிய மீன்கள் தொழில்நுட்பத்தால் சர்வசாதாரணமாக வேட்டையாடப்படும் உண்ணப்படுவது ஒருபுறம் என்றால், ப்ளாஸ்டிக், கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலக்கப்பட்டு கடலில் சேருகின்றன. கங்கை தியில் இருக்கும் பெரிய மீன்களுக்கு கண் தெரியாத நிலை ஏற்பட்டிருகிறது. கண் தெரியாமல் தன் வாழ்நாளை கழிக்கும் மீன்களை நினைத்து பாருங்கள். ப்ளாஸ்டிக்குகளை உண்ணும் வேல் போன்ற பெரிய மீன்கள், கடற்பறவைகள், செத்தபின் அவை வயிறு ப்ளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளன. செரிமானம் ஆகாமல் அவை துடித்து சாவும் காணொளி யூடியூபில் காணலாம்.

நிலத்தில் பெரிய விலங்குகளான யானை முதல் சிறுவிலங்குகளான பாம்பு, அணில் வரை மனிதனிடமிருந்து பயந்தே வாழ்கின்றன. பாம்புகளும் அணில்களும் காகங்கள் நிறைந்த இந்தியாவில் இன்று அவை பார்ப்பது மிக அபூர்வம். நீங்கள் கடைசியாக பார்த்த பாம்பு எப்போது என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று கொரோனா என்கிற தொற்று நோய் பரவியதும், உலகம் அடைந்த பீதி, இதற்கு முன் நிகழ்ந்ததில்லை என சொல்லலாம். ப்ளேக், காலரா, எயிட்ஸ் வந்தபோது ஒரு அறியாமை இருந்தது. அது அவர்களை பதட்டத்திலிருந்து தள்ளியே வைத்திருந்தது. அத்தோடு அச்சமயங்களில் ஊடகம் இந்தளவிற்கு இல்லை. இந்த இரண்டும் சேர்ந்த இந்த காலத்தில் மனிதனின் பயத்தை அவன் கண்களில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து செல்வதை காணவேண்டியிருக்கிறது. நோய்குறித்த அறிவும், பதட்டமும் நாளும் மனிதனை கொல்கிறது.
இன்று காட்டுவிலங்குகளை உண்ண முழுமையாக தடைவிதித்திருக்கிறது சீனா. உலகமக்களாக முன்வந்து விலங்கு உணவுகளை விட்டுவிட்டார்கள். கோழி, ஆடு, மாடு, ஒட்டகம், பறவை, மீன், போன்ற ஜீவராசிகளின் உயிர்காலம் அதிகரித்திருக்கும். கடற்கரைகளில் மீன்களும். கடற்விலங்குகளும், கடற்பறவைகளும் இன்று சுற்றித் திரிவதை இதற்கு முன் நாம் கண்டதேயில்லை. அடுத்த சில நாட்களில் இந்த காணொளிகள் இணையத்தை நிறைக்கும்.

மனிதன் இனி செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். தான் மட்டும் வாழாமல் மற்றவர்களையும் வாழ விடுவதுதான். உலகில் உள்ள ஜீவராசிகளை அதன் போக்கில் விடதெரியவேண்டும். அதன் வாழ்க்கை பாதையில் குறுக்கிடுவதை நிறுத்த வேண்டியிருக்கும். நிலம், நீர், காற்று. ஆகாயம், வான் அனைத்தையும் ஆளமுடியும், ஆனால் வெல்லமுடியாது என்பதை இப்போது அறிந்திருப்பான்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான
காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வுப் பதிவு
இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழக் கற்கும் நாளே நன்நாள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அறிவியல் முன்னேற்றம் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு பாதிப்பினையும் தரும் என்பதற்கான சான்றுகளில் இதுவும் ஒன்று.