Monday, March 16, 2020

வளரும் விஷம்: நீலகண்டம் நாவல் விமர்சனம்



நவீன வாழ்க்கை களமான அடுக்கக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆட்டிச குழந்தையை வளர்ப்பது என்பது மிக சிக்கலான வாழ்க்கைமுறையை இன்று பெற்றோர்களுக்கு அளித்துள்ளது. கூட்டு குடும்பமாக வசிப்பவர்களுக்கு பிறக்கும் ஆட்டிச குழந்தைகள் ஒரளவிற்கு பெரிய சிக்கல்கள் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்துவிடுகிறது. குழந்தைகளிடையே இருக்கும் ஏற்றதாழ்வுகள் பெரிதாக்கப்படாமல் இருப்பதால் நமக்கு பிரச்சனைகள் எதுவும் கண்களுக்கு தெரிவதில்லை.

அடுக்கக வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் தனிமையில் வசிக்கிறது. அதுவும் ஆட்டிச குழந்தைகள் ஏற்கனவே தனிமை விரும்பிகள், அப்படியே அக்குழந்தைகளை விட்டுவிட்டால், மேலும் தனிமைபட்டு சமூக தொடர்ப்பு இல்லாமலாக அதன் குறைபாடு அதிகரிக்கும். ஆகவேதான் நவீன வாழ்க்கை ஆட்டிச குழந்தைகளின் வளர்ச்சியை சிக்கலாக்குகிறது.

நீலகண்டம் நாவல் ஆட்டிச குழந்தை வளர்ப்பின் பிரச்சனைகளையும், ஆட்டிச குழந்தை தன்னை வெளிப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கலைப் பற்றி கொஞ்சம் பேசுகிறது. கலப்பு திருமணம், குழந்தையின்மை, தத்து எடுத்தல், பல்வேறு சிக்கல்களோடு ஆட்டிச குறைபாடுடைய குழந்தைகளின் வளர்ப்பை பற்றியும் நீலகண்டம் நாவல் சுற்றி வருகிறது.

தத்து எடுக்கப்படும் குழந்தை ஆட்டிச குறைபாடுடன் இருப்பதை கண்டறிவதும், பிறகு அவர்களுக்கு பிறக்கும் குழந்தையுடன் ஒப்பீட்டு எப்படி இருவரையும் வளர்ப்பது என்று குழப்பத்தில் ஆழ்வதுமாக நகர்கிறது வாழ்க்கை. ஆட்டிசம் என்பது ஒவ்வொரு குழந்தையும் ஒருமாதிரி, அவர்கள் வளரும் சூழலுக்கு ஏற்ப அவர்களின் வளர்ச்சி இருப்பதால் அதை எளிதாக கண்டுக் கொள்ள முடிவதில் சிக்கலும் இருக்கிறது.

. பிச்சமுத்து எழுதிய மாங்காய்த்தலை சிறுகதை தமிழில் வந்திருக்கும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பற்றியது. குறுநாவலாக எஸ்.பாலபாரதி எழுதிய துலக்கம் வெளியாகியிருக்கிறது.  நாவல்களாக எதுவும் இதுவரை வராத நிலையில் சுனில் கிருஷ்ணன் எழுதியிருக்கும் நீலகண்டம் முக்கியமானதாக ஆகிறது. ஆட்டிச குறைப்பாடுள்ள குழந்தைகள் மனவளர்ச்சி குறைந்தவர்களிலிருந்து சற்று மேம்பட்டவர்கள், அவர்களை வளர்ப்பது கேஸ்-டு-கேஸ் என்பதால் அக்குழந்தையின் பெற்றோர்களே ஆசிரியர்களாக இருக்க வேண்டியிருக்கும். பொதுஇடங்களில் ஆட்டிச குழந்தையை அழைத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலே பெற்றோர்களுக்கு முதன்மையான பிரச்சனை. அதுவே இந்நாவலில் பேசப்பட்டும் இருக்கிறது. கூடவே ஆட்டிச குழந்தையின் எண்ண ஓட்டங்களை வேதாளம் சொல்லும் கதைகளின் வழியே சொல்கிறார் ஆசிரியர்.

****

உள்ளடக்கத்தை மீறும் வடிவசிக்கல்கள் நாவலை வாசகர்களிடமிருந்து தனிமைபடுத்தி விடுகின்றன. தேவையற்ற வடிவ சோதனைகள் உள்ளடக்கத்தை மறைத்துவிடுகின்றன. கலப்பு திருமணம், குழந்தையின்மை, தத்து எடுத்தல், என்று பலமுனைகளில் இருந்து பயணித்து மையமான ஆட்டிச குழந்தை வளர்ப்பு என்கிற சிக்கலை பேசவருகிறது. இப்படி சிதறலாக இருப்பது நாவலுக்கு அவசியமானதுதான். ஆனால் மையத்தைவிட மற்றசிக்கல்களை அதிகம் பேசுவதனால் வாசகனால் 'தொடர்பில்' இருக்கமுடியாமல் அலைவதும் நடக்கிறது.

ஏனெனில் ஆட்டிச குழந்தை வளர்ப்பில் மற்ற சிக்கல்கள் ஒரு பிரச்சனையே அல்ல என்பதுதான். ஆட்டிச குழந்தையின் சமூக பிரச்சனைப் பற்றி இதில் பேசப்படவில்லை. பள்ளியில் சேர்க்கப்படுவதிலிருந்து இக்குழந்தையின் சமூக தொடர்பின்மைவரை எழும் பிரச்சனைகள் முழுமையாக அலச வேண்டியவைகள். சாதாரண குழந்தையின் பள்ளிவாழ்க்கை இன்று பெற்றோர்களுக்கு பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குழந்தைகளை படிக்க வைப்பது போருக்கு தயாரிப்பது போன்ற நிலையில் இருப்பது குறித்தே இன்று நிறைய பேசவேண்டியிருக்கிறது. ஆட்டிச குழந்தையின் நிகழ்கால, வளர்ச்சியும் அவர்களின் எதிர்கால இடம் குறித்த பதபதைப்புகளும் பெற்றோர்களுக்கு இருக்கிறதை அலச வேண்டியிருக்கிறது.

ஏகப்பட்ட நாவல்கள் ஆங்கிலத்தில் ஆட்டிச குறித்து வெளியாகியுள்ளன. தமிழில் புனைவாக விவாதிக்கும் மனநிலையோடு வந்திருக்கும் ஒரே நாவல் நீலகண்டம் தான். அவ்வகையில் இந்நாவல் பாராட்டுதல்களை பெறுகிறது.

3 comments:

suneel krishnan said...

நன்றி அசோக். இந்த கட்வாசிப்பு கட்டுரையை என் தளத்தில் மறுபதிவு செய்து கொள்கிறேன். https://suneelwrites.blogspot.com/2020/03/blog-post_16.html

கரந்தை ஜெயக்குமார் said...

ஆட்டிச குழந்தையின் நிகழ்கால, வளர்ச்சியும் அவர்களின் எதிர்கால இடம் குறித்த பதபதைப்புகளும் பெற்றோர்களுக்கு இருக்கிறதை அலச வேண்டியிருக்கிறது.

உண்மை
உண்மை

நான் said...

:)