Wednesday, February 19, 2020

கறிச்சோறு விமர்சனம் - செழியரசு


ஆற்றுக்கரையிலோ, வயல் காட்டிலோ அமைந்திருக்கும் முனியாண்டவர் அல்லது சுடலைமாடன் கோயிலில், நல்ல கோடைக் காலதில் பூசைப்போட்டு கிடாவை வெட்டி, அங்கேயே வெயிலில், கல்பொறுக்கி அடுப்புக்கட்டி, சுடச்சுட சோறாக்கி, கொதிக்கக் கொதிக்க குழம்பு வைத்து, பக்கத்துத் தோப்பில் வாழை இலை அறுத்து, அங்கேயே வேப்ப மரத்தடியில், தரையிலும் தலையிலும் சூடுதகிக்க பந்திபோட்டு வாடித்து இலையில் வழிந்தோட கறியும் குழம்புமாய் ஊற்றி, கூட்டமாய்க் குந்தி சாப்பிட்டறிந்தவனின் ருசி, அவனுக்குத்தான் விளங்கும், அதனையும்கூட அவனுக்கு ஓரளவுக்குத்தான் பிறருக்குச் சொல்லமுடியும்.


தஞ்சையில் பாபநாசத்திற்கு அருகே, வெண்ணாற்றுக்கும் குடமுருட்டிக்கும் இடையஅமைந்த ஊர்களில் ஒன்று இடையிருப்பு. இங்குள்ள சமூகங்களில் ஒன்று வாகரக் கள்ளர்கள். இம்மக்களின் உயர்ந்த வாழ்க்கைப் பண்பாட்டையும், காலப்பிரவாகத்தில் நிகழ்ந்துபோன சாதிய ஏற்றத் தாழ்வின் கற்பிதங்கள், சமூகத்தில் ஏற்படுத்திவிட்ட சிக்கல்களையும் ஒளிவு மறைவில்லாது பதிவு செய்துள்ளார்.

மனம், எந்தவித நியாயமுமின்றி அகங்காரக் கொலை செய்யப்பட்ட தங்கவேலுவின் பிணத்தைத் தாண்டி நகர மறுக்கிறது. கொன்று விட்டோடிய மாயாண்டிக் கொத்தப் பிரியனைத் துரத்தி ஓடி இன்னும் திரும்பாத சாம்பசிவத்தைத் தேடி கூடவே அலைகிறது. குடும்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் வளர்ந்து, தற்போது காத்திருப்பது தவிர‌, வேறேதும் செய்யவியலாத கமலாவை, முத்துக் கண்ணு விசுவராயரைத் தாண்டி சிந்திக்கக் கூட முடியாது தவிக்கும் அவள் அம்மா பூரணியை, அவ்வப்போது மட்டும் மனசாட்சி தெளியும் முத்துக்கண்ணு விசுவராயரை தனியே விட்டுவிட்டு திரும்ப முடியாமல், நம் மனமும் வெட்ட வெளியிலேயே பிணங்காத்து கிடக்கிறது.

ஊர் ஊருக்கு சாதிய அகங்காரத்துடனும், கூடவே அசிங்கமான ஆதாய அரசியல் அங்கீகாரத்துடனும் திரியும், தருமையா நாட்டார், எடுபிடிகளாக, கருவிகளாக விளங்கும் கோபால் குச்சிராயர், மாயாண்டிக் கொத்தப்பிரியர் ஆகியோரை இன்றும் நாம் காண்கிற யாரையேனும் ஒப்பிடுவதுபோல அமையச் செய்திருப்பது கதயாளுமையின் திறமை.
சமூக எதார்த்தத்தைப் பதிவு செய்வதில் சி.எம். முத்து வெற்றி பெற்றுள்ளார். சமூகம் அவரிடமிருந்து படிக்க வேண்டும். ஏனெனில் கொடுப்பதும் படிப்பது சிறப்புகள் தானே. யார் யாரிடமிருந்து கற்றுக் கொண்டால் என்ன.

பார்க்க எளிமையான முகத்தோடும், பழக அருமையான மனத்தோடும், பல்லெல்லாம் வெற்றிலைச் சாற்றோடும், பேசும் சொல்லெல்லாம் இசையின் ஈர்ப்போடும், கண்டு கேட்டு உண்டு உயிர்த்து செமித்தும் வைத்திருக்கிற மக்கள் மொழியோடும், என்றென்றும் எழுதித் தீராத மானுட அன்பின் மையூற்றோடும், பறவையைப் போல சேர்த்தனைத்து நட்போடும் உறவோடும் வாஞ்சையோடு குலாவி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வாழுங்கள். வாழ்வின் அத்தனைப் பார்த்திரங்களையும் பதிவுசெய்து உலவ விடுங்கள். பொங்கி நுரைத்து செழித்து உரமேறிக் கிடக்கிற இம்மண்ணைப் படிக்கவரும் எதிர்காலத் தலைமுறைக்கு தடம் காட்டுங்கள்.

[16/2/2020 அன்று தஞ்சைக் கூடலின் முத்து70 விழாவில் பேசியது.]

No comments: