Sunday, November 10, 2019

புற்றில் உறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன் சிறுகதை வாசிப்பனுபவம்



புற்றில் உறையும் பாம்பு எதிர்ப்பாராத வேகத்தில் திருப்பி தாக்கும். புற்றிற்குள் இறங்கும் பாம்பு தலை உள்ளேயும் வால் வெளியேயும் இருப்பதனால் அதை எளிதில் பிடித்துவிடலாம் என நினைத்து வாலைப் பிடிக்கும் சமயத்தில் புற்று வாயில் அதன் ஒளிந்திருக்கும் தலையை வெளியே எடுத்து பிடிப்பவரை தாக்கும். உண்மையில் பாம்பு வளைந்து அந்த இடத்தில் நின்று காத்திருக்கும். பொதுவாக பெண்களை பாம்புகளுடன் ஒப்பிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பெண்கள் உண்மையில் வேறுவகையானவர்கள். ஆண்களின் சிந்தனையிலிருந்து முற்றிலும் எதிர் திசையில் செயல்படக்கூடியது. காமமும் அதன் மீதான பார்வைகளும் இருவருக்கும் பொதுவானதுதான் என்றாலும், வெளிப்பாடுகளில் இருக்கும் வேறுபாடு இருவரைப் பற்றி முற்றிலும் எதிர் திசையில் யோசிக்க வைக்கிறது.


ஒரு ஆண் தன் காம, எதிர்பாலின கவர்ச்சியின் வெளிப்பாடுகளை எளிதாக பொதுவெளியில் சொல்ல முடிகிறது. ஒரு நண்பர் தனக்கு விருப்பமான நடிகையின் மீதான கவர்ச்சியையும், அவளை திருமணம் செய்யபோவதைப் பற்றியும் வேடிக்கையாக சொல்லிக் கொண்டிருப்பார். வேறுஒரு பெண்ணுடன் அவரது திருமணம் ஆன பின்னும் அதை சொல்லிக்கொண்டிருந்தார். அனைவரும் சிரித்து மகிழ அது ஒரு காரணமாக அமைந்திருக்கும். ஆனால் ஒரு பெண்ணால் இப்படியான வார்த்தைகளை தமிழக சமூகப் பொதுவெளியில் வெளியிட முடியாது. அவர்கள் பல்வேறு பாவனைகளின் வழியே தங்கள் வெளிப்பாடுகளை கடந்துச் செல்கிறார்கள்.

ராஜேந்திர சோழன் அவர்கள் எழுதிய கதை அப்படியான ஒன்று. நடுவயது கணவனும் மனைவியும் காலையிலிருந்து தங்கள் வேலைகளை கவனித்து வருகிறார்கள். கணவன் மாட்டிற்கு தண்ணீர் காட்டுவதும், புண்ணாக்கு வைப்பதுமாக இருக்க, மனைவி சமலையறையில் வேலையாக இருக்கிறார். தெருவின் எதிர்புரத்தில் கண்ணாடி அணிந்த பாண்ட் சட்டை அணிந்த மனிதன் வந்து நிற்பதை பார்த்து, கோபப்படுகிறாள் மனைவி. எப்படி இப்படி ஆண்களால் நிற்க முடிகிறது, கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாமல், என்ன ஜென்மம், சில பெண்கள் நிற்கிறார்கள் தன்னால் இப்படியெல்லாம் நிற்கமுடியாது என்று பொரிந்து தள்ளுகிறார். வாசலில் அரசு அதிகாரிகள் சிலர் வந்து நின்றதும் கூச்சத்தோடு உள்ளேயே நிற்கிறார். அவர்கள் தண்ணீர் கேட்டபோதும் கணவனை அழைத்து தண்ணீர் கொடுத்து அனுப்புவதும், தன்னால் அப்படியெல்லாம் வரமுடியாது என்று கறாராக கூறுகிறார். அவர்கள் சென்றபின் வேறுஒரு ஆண் சாலையின் எதிர்புறம் நிற்கிறான். அவனை கூர்ந்து பார்த்து ரசிக்கிறாள் மனைவி. கணவன் அவ்வழியே வந்ததும், மீண்டும் என்ன ஜென்மங்களோ என்று திட்டிவிட்டு, இதெல்லாம் நீ கேட்கமாட்டியா என்று கணவனைப் பார்த்து கேட்டதும் அவர் கூறும் பதிலோடு கதை முடிகிறது.

"சரிதான் உள்ள போமே பேசாத... சும்மா பொண போணன்னிக்கின்னு..." அவன் படல் கட்ட உட்கார்ந்தான். " இப்பதான் ஒரேடியா காட்டிக்கிறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்.

இதுதான் கணவன் சொல்லும் வார்த்தைகள் கடைசியாக, அவள் பேசும் எந்த பேச்சுக்கும் பதிலளிக்காமல், தன் வேலையுண்டு என இருக்கும் கணவன் ஒரே ஒரு வார்த்தையால் அவர்களின் இருவருக்குமான புரிதல்களையும், தன் வாழ்வின் தானறிந்த ஒரு ஒற்றை உண்மையையும் வெளிப்படுத்திவிடுகிறார்.

பெண்ணின் பாவனைகளை ஒவ்வொரு நாளும் ஆண்கள் கடந்து செல்கிறார்கள். சிறுவர்கள் விளையாட்டில் கூட பெண் பிள்ளைகளின் அழுவுனி ஆட்டத்தை பையன்கள் அறிந்தேயிருக்கிறார்கள். வீட்டில், நட்புவட்டதில், அலுவலகத்தில், பொதுவெளியில் என்று எல்லா இடங்களிலும் பெண் ஆடும் ஆட்டத்தை ஆண்கள் சற்று மிரட்சியுடன்தான் கவனிக்கிறார்கள்.

ஆண் ஒரு நேரத்தில் ஒரு வேளையை மட்டுமெ செய்யக்கூடியவன். அப்படிதான் அவன் ஆதியிலிருந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறான். பெண்ணுக்கு ஒரே நேரத்தில் பலவேலைகளை செய்யமுடியும். தொலைக்காட்டி ஓடும்போது பக்கத்தில் குழந்தை அழும் சத்தத்தை கேட்கமுடியாதவன் ஆண். தொலைக்காட்சியை கேட்டபடி சமையலையும் அழும்குழந்தையையும் வாசலில் கடந்து போகும் விற்பனையாளனையும் கவனிக்க முடியும். ஆகவேதான் இந்த நவீன உலகத்தில் உலகளவிலும் ஆண்கள் எல்லாதுறையிலும் வெற்றி பெறமுடிகிறது என தோன்றுகிறது.

பெண்களின் பாவனைகள் போலியானவையா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். அது அவர்களில் இயல்பிலேயே அமைந்த ஒன்று. அதைக் கொண்டே தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கடந்துவிடுகிறார்கள். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை வென்றுவிடுகிறார்கள். ஒன்று தனக்கு தேவையில்லை என்றால் கூட அதை பெறுவதில் பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் அலாதியானது.

ஒருவரை அவரது உடல்மொழியிலிருந்து அவர்களின் எண்ணங்களை கண்டுக்கொண்டுவிடமுடியும். வலுக்கட்டாயமாக அந்த உடல்மொழிகளை மறைக்க முயற்சிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியை நாம் நாளும் காணலாம். அப்படியான மறைத்தலில் வெளிப்படும் வார்த்தைகள் நமக்கு காட்டிக் கொடுத்துவிடுகின்றன. உண்மையில் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு செய்யும் இந்த முயற்சி ஆண்களை அதிர்ச்சியடை செய்கிறது. பாம்பு என்கிற உவமையுடன் பெண்களை காணவும் செய்கிறான்.

இப்படி சொல்லலாம் என நினைக்கிறேன், ஆண் தன்னை வரையறை செய்துக்கொள்ளும்போது தன்னை மட்டுமே கருத்தில் கொள்கிறான். மாறாக பெண் தன் இனத்தாரையும் சமூகத்தையும் கருத்தில் கொள்கிறாள்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பெண் தன் இனத்தாரையும் சமூகத்தையும் கருத்தில் கொள்கிறாள்

அருமை

Rathiskumaran R said...

ஆண் தன் (இச்சையயை )ஆசையை சொல்லும்போது தைரியமானவன் என போற்றப்படுகிறான், பெண் ஒழுக்கம் கெட்டவளாக தூற்றப்படுகிறாள். இதனால் அவர்கள் பாம்பு வேடம் போடுகிறார்களோ?