Wednesday, October 30, 2019

ஒருநாள் கழிந்தது - புதுமைபித்தன் சிறுகதை வாசிப்பனுபவம்

அரைநாள் கழிந்தது என்றுதான் சொல்லவேண்டும். கதையில் அரைநாள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் மாலையிலிருந்து இரவுவரை தான் கதை. காலை, மதியம், நடுஇரவெல்லாம் முருகதாசர் என்ன செய்தார் என்கிற குறிப்பு எதுவும் இல்லை இதில். இப்படி புறவயமாக கதையை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்றாலும் புதுமைபித்தனின் நிஜகதையை ஒட்டியிருப்பதால் அவர் வாழ்க்கையை படிக்கின்ற சுவாரஸ்யம். பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் பகுதியில் இக்கதை இருக்கிறது. அன்றிலிருந்து பல சமயங்களில் இக்கதையை வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் அதில் இருக்கும் இரு கதைகள் மட்டுமே நினைவில் இருக்கின்றன். ஒன்று இது மற்றொன்று ஜெயகாந்தன் எழுதிய நந்தவனதில் ஒரு ஆண்டி.

புதுமைபித்தனின் மற்ற கதைகளான கயிற்றரவு, கபாடபுரம், மகாமாசனம் போன்றவைகள் சிறப்பானவையாக இருந்தாலும் ஒருநாள் கழிந்தது கதையின் சிறப்பு வேறு மாதிரி. கதை என்று சொல்லமுடியாத தன்மை அதில் உண்டு. கதையை வாசகர் கோணத்தில் அதை விரித்து கூறவில்லை. முருகதாசர் என்கிற மனிதரின் அகஉலகம் கொள்ளும் சின்ன கோபங்களும் சஞ்சலங்களும் அபிலாஷைகளும் மட்டுமே சொல்லப்படுகின்றன. அது கதையாகுமா என்கிற சந்தேகம் நமக்கு எற்ப்பட்டாலே அது சிறந்த கதையின் அறிகுறி என நினைத்துக் கொள்கிறேன்.

உண்மையில் கதையில் நடக்கும் சம்பவங்களுக்கு இடையே எழுத்தாளனின் தோற்றுவிழும் வாழ்க்கை நடந்துக் கொண்டிருக்கிறது. 40களின் கதையாக கொண்டாலும் இன்றுவரை எழுத்தை தொழிலாக கொண்ட தமிழ் எழுத்தாளனின் நிலை அதுதான். அந்த நிதர்சனம் இன்றுவரை நம்மிடம் இக்கதையின் அமரத்துவத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது. எழுத்துகளின் வழியே வாழ்பவன் நிஜவாழ்வில் மொழிவிளையாட்டுக்களை செய்ய வேண்டியிருக்கிறது. ஒருவகையில் விரயமாகும் அவனது சக்தி நிஜவாழ்வில் சிறு சாகசங்களின் வழியே மீட்டுக் கொள்ளப்படுகிறது.

எழுத்தாளனின் நண்பர்கள் அவனுக்கு வெறுமனே பணஉதவி செய்யும் அப்பாவிகள் அல்ல. அவன் அடையப்போகும் பிரபல்யத்தின்மீது நம்பிக்கையும் அதனால் நட்பிற்கு உண்டாகும் அனுகூலத்தையும் அறிந்தவர்கள். இல்லையென்றால் கடந்துபோகும் பலநாட்களை நண்பர்கள் இல்லாமல் தான் கடந்திருப்பார். முருகதாசருக்கு தெரிந்ததெல்லாம் எழுத்தும் பேச்சும்தான். மூன்றாக கிழிந்துபோன பாயை சரியாக ஒட்டி வைக்கும் லாவகம் எப்படியோ அப்படி வாழ்வின் பகுதிகளை ஒட்டி வெட்டி வைத்து கடந்து செல்கிறார்.

மனதில் தோல்வி இல்லை ஆனால் நிஜத்தில் சின்ன வெற்றி கூட இல்லை. எழுதப்போகும் நாவல் அவரை பலமடங்கு உயர்த்திவிடும் என்று நினைக்கிறார். எழுத்துலகளவில் உண்மையாக இருந்துவிட்டாலும் அவருக்கு காசு பெயருமா என்பது சந்தேகம். எழுத தேவையான பொருளும் பணமும் எப்படி பெறுவது? யாரிடமிருந்து பெறுவது? எல்லாம் கூடிவந்தால்கூட இருக்கும் கஷ்டவாழ்வில் அதை சாதிக்க முடியுமா என்கிறசந்தேகத்தை அவர் அறிந்தே இருப்பார். ஆனாலும் தினப்படிகளை மகிழ்ச்சியில் வைத்திருக்கிறார். அதைதான் அவர் செய்யமுடியும். சின்னச் சின்ன சந்தோஷங்களை அவர் விட்டுவிடுவதில்லை. மகளின் சேட்டைகள் அவருக்கு போதுமானதாக இருக்கிறது. மனைவியின் சின்ன சந்தோஷங்கள் அவருக்கு நிறைவாக இருக்கிறது. கூடவே பணமில்லை, உடைமைகள் இல்லை, நல்ல வீடு இல்லை. அமர்ந்து எழுத நல்ல இடமில்லை. வீட்டில் விளக்கில்லை. அதேவேளையில் கடன் இருக்கிறது. பசி இருக்கிறது, ஆசை இருக்கிறது. சாதாரண வாழ்வில் அல்ல, லட்சிய கனவுகள் நிறைந்த எழுத்தாளர் வாழ்விலும் ஒரு நாள் இப்படிதான் கழிகிறது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான விமர்சனம்